சோனியா அகர்வால் – வனிதா விஜயகுமார் நடித்த “தண்டுபாளையம்’” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

111

வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் ‘தண்டுபாளையம்’ படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரஙக்ள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘தண்டுபாளையம்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள்
ஆர்.அரவிந்தராஜ அமங்கை அரிராஜன், ஆர்.அரவிந்தராஜ், பட அதிபா்கள்
என்.விஜயமுரளி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பழனிகுமார், பத்திரிகையாளர்கள் க்ரைம் செல்வராஜ், வி.எஸ்.ராமன், பாடலாசிரியர் சொற்கோ இரா.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான டைகர் வெங்கட் பேசியதாவது
———————————————–
“’தண்டுபாளையம்’ படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஏற்கனவே எடுத்திருக்கிறேன், அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. காதல், ஆக்‌ஷன், க்ரைம் போன்ற ஜானர்களில் படம் எடுப்பது சுலபம். ஆனால், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, அதுவும் இதுபோன்ற கொடூரமான சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுப்பது என்பது மிகப்பெரிய சவால். திரைக்கதை கூட எழுதி விடலாம், ஆனால் அதை படமாக்கும் போது பல சிக்கல்கள் வரும். இப்படி ஒரு படத்தை எடுத்தால், நம் குடும்பத்தார் என்ன நினைப்பார்கள், நண்பர்கள் என்ன சொல்வார்கள், என்று யோசிக்க தோன்றும். இறுதியில் படத்தை அப்படியே வைத்துவிட வேண்டியது தான், மேலோட்டமாக சொல்ல வேண்டும், அப்படி சொன்னால் படம் வெற்றி பெறாது என்பதோடு மக்களிடம் சென்றடையாது. அதனால் தான் நான் இந்த படத்தை உள்ளபடியே எடுத்திருக்கிறேன். இப்படி ஒரு படம் எடுக்க கட்ஸ் வேண்டும். படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கத்தான் செய்யும், ஆனால் அதை வன்முறையாக பார்க்காமல், அதில் என்ன சொல்லியிருக்கிறேன் என்று பார்க்க வேண்டும்.
தண்டுபாளையம் கேங் என்பது மிகப்பெரிய நெட் ஒர்க், இப்படவும் அவர்கள் பல்வேறு இடங்களில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடத்தில் கூட அவர்கள் இருப்பார்கள். இந்த படத்தை என்ன செய்யலாம், என் மீது என்ன வழக்கு போடலாம் என்று திட்டமிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் பற்றி இன்னும் தெரியாத பல விசயங்கள் இருக்கிறது, அதை சொல்வதற்காக தான் தமிழில் இந்த படத்தை எடுக்கிறேன். தெலுங்கில் இரண்டாவது பாகத்தில் இயக்குநர் அவர்களை நல்லவர்களாக காட்டிவிட்டார், அதனால் படம் எடுபடவில்லை. காரணம், மிரட்டல். ஆனால், நான் எந்த மிரட்டலுக்கும் அடிபணிய போவதில்லை, அவர்களின் நிஜ முகங்களையும், இதுவரை சொல்லாத விசயங்களையும் தைரியமாக சொல்லப் போகிறேன். முதல் பாகம் கமர்ஷியலாக இருக்கும், இரண்டாவது பாகம் மிரட்டலாக இருக்கும்..

தண்டுபாளையம் படத்தில் நடித்த வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நான் எது சொன்னாலும், சீனியர் நடிகைகளாக இருந்தாலும், அதற்கு மறுப்பு சொல்லாமல் செய்தார்கள். அவர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம், அவர்களது நடிப்பு நிச்சயம் பாராட்டு பெறும்.” என்றார்.

நடிகை சோனியா அகர்வால் பேசியது
——————————————
“தண்டுபாளையம் டிரைலர் மற்றும் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது, அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதல் முறையாக நெகடிவ் வேடத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் கதை சொன்ன போது நல்லா இருந்ததால் ஒப்புக்கொண்டேன், ஆனால் முதல் நாள் படப்பிடிப்பு பதற்றமடைந்து விட்டேன். ஆனால், இயக்குநர் வனிதாவுக்கும் எனக்கு தைரியம் சொல்லி, உற்சாகப்படுத்தினார். அவர் கொடுத்த உத்வேகத்தால் தான் என்னால் இந்த வேடத்தில் சிறப்பாக நடிக்க முடிந்தது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

பத்திரிகையாளர் க்ரைம் செல்வராஜ் பேசியது
———————————————–
“இந்த நிகழ்ச்சிக்காக இயக்குநர் என்னை அழைத்தபோது தண்டுபாளையம் என்று சொன்னார், அதை கேட்ட உடன் படம் வெற்றி பெற்றுவிடும் என்று நான் அவரிடம் சொன்னேன். காரணம், சமீபத்தில் தண்டுபாளையம் பற்றி ஒரு யூடியூப் சேனலில் பேசினேன். அந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு தண்டுபாளையம் பற்றி அறிந்துக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல் அந்த வீடியோவை பார்த்த கலெக்டர் ஒருவரிடம் பேசிய போது, “முன்பெல்லாம் நான் வீட்டின் கதவு, ஜன்னல்கள் சரியாக மூடியிருக்கிறதா? என்று சோதிக்காமல் தூங்கிவிடுவேன், உங்களது தண்டுபாளையம் வீடியோவை பார்த்த பிறகு, ஒன்றுக்கு இரண்டு முறை பரிசோதித்த பிறகு தான் தூங்க போகிறேன்” என்றார். இது போல் இந்த படமும் நிச்சயம் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபொல் தண்டுபாளையம் கேங் மிக கொடூரமானவர்கள். அவர்களை பற்றி ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ஓசூர் பகுதியில் ஒரு சைகோ குற்றவாளி இருந்தான், அவன் பாலியல் தொழிலாளி மற்றும் திருநங்கைகளை அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துவிட்டு பிறகு அவர்களுடன் உடலுறவுக் கொல்வான். அப்படிப்பட்டவனை விட கொடூரமானவர்கள் தண்டுபாளையன் குழுவினர். அவர்களைப் பற்றிய பல உண்மைகளை சொல்லியிருக்கும் டைகர் வெங்கட் சாரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

இந்த படத்தில் நடித்திருக்கும் சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் இருவரும் படத்திற்கு பெரும் சேர்த்திருக்கிறார்கள். அவர்களுடைய போஸ்டரே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும். இந்த ஒரு பாகம் மட்டும் அல்ல இன்னும் பல பாகங்களை வெங்கட் சார் எடுப்பார், வெற்றி பெறுவார் என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் மங்கை அரிராஜன் பேசியதாவது
———————————————–
”தண்டுபாளையம்’ என்ற வார்த்தையும், டைகர் வெங்கட் சாரும் கர்நாடகவில் பிரபலமானவர்கள். நானும் கன்னட படங்களை இயக்கியிருக்கிறேன். அப்போது அங்கு டைகர் வெங்கட் சாரை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். தண்டுபாளையம் படமும் அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். அதேபோல் இயக்குநர் டைகர் வெங்கட் ஒரு பூவை புயலாக மாற்றியிருக்கிறார், அவர் தான் சோனியா அகர்வால் மேடம். அவர் தமிழ்நாட்டுக்கு பூ போன்றவர் அவரை இப்படி ஒரு வேடத்தில் நடிக்க வைத்து புயலாக மாற்றியிருக்கிறார். வனிதா விஜயகுமார் அவர் போல்டான நடிகை. அவர் டிவி நிகழ்ச்சியில் மிக தைரியமான பேசுவார், அதற்காக அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருக்கிறார்கள். எனவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்.

இந்த ஒரு விழிப்புணர்வு படம் என்று தான் நான் சொல்வேன். காட்சிகளில் வன்முறை இந்தாலும், அவற்றில் இருக்கும் விழிப்புணர்வை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் நாட்டில் நடக்கிறது, உஷாராக இருங்கள் என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை வெங்கட் எடுத்திருக்கிறார். இப்போது படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வியாபார ரீதியாகவும் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கோவையில் இருந்து ஒரு விநியோகஸ்தன் என்னிடம் பேசினார். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு செல்வதாக சொன்ன போது, ஏரியா வாங்கலாம் என்று இருக்கிறேன், யாரை தொடரப கொள்ள வேண்டும் என்று கேட்டார். அந்த அளவுக்கு படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை. அதனால், தெலுங்கு மற்றும் கன்னடம் போல் தமிழிலும் பல பாகங்களாக் தண்டுபாளையம் படத்தை எடுத்து டைகர் வெங்கட் சார் வெற்றி பெறுவார் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசியது
———————————————–
“எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர் கதை சொல்லும் போது தண்டுபாளையம் பற்றி எனக்கு தெரியாது. சரி ஓகே நல்ல வேடமாக இருக்கிறதே என்று ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு தான் அந்த கேங்கின் கொடூர முகம் தெரிந்தது. என்னடா இது இப்படிப்பட்ட வேடத்தில் நடிக்கணுமா என்று யோசித்தேன், இருந்தாலும் எனக்கு ஒரு வித்தியாசமான வேடமாக இருந்ததால் தைரியமாக நடித்தேன். தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் வந்தாலும் நேட்டிவிட்டியான படங்கள் வருவது குறைந்து விட்டது. அப்படிப்பட்ட எடுப்பவர்களும் குறைந்து விட்டார்கள். நான் சிறு வயதில் என் அப்பாவுடன் பல படப்பிபுகளுக்கு சென்றிருக்கிறேன். அப்போதேல்லாம் அவரது வேடம், கெட்டப் போன்றவற்றை பார்த்து ரசித்திருக்கிறேன். ராதிகா அக்கா எப்படிப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இப்போது அதுபோன்ற படங்கள் வருவதில்லை.

நான் பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு சுமார் 25 படங்களில் நடித்திருக்கிறேன். சில வெளியாகி விட்டது, சில வெளியாக இருக்கிறது. நெகட்டிவ், பாசிட்டிவ், என பல வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், தனித்துவமான என் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் எனக்கு வரவில்லை, அது ஏன் என்று நான் யோசித்திருக்கிறேன். எனக்கு மட்டும் அல்ல, தமிழ் சினிமாவை நம்பியிருக்கும் எந்த நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு வருவதில்லை. ஆனால், மலையாள நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது. எனக்கு ஏன் அப்படி ஒரு வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்று யோசித்த நிலையில் தான் இந்த படத்தின் வாய்ப்பு வந்தது. இது ரொம்பவே ராவான படம், அதை அப்படியே இயக்குநர் எடுத்திருக்கிறார். அது ஏன் என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும்.

நான் போல்டனா பொண்ணு எனக்கு ஓகே, சோனியா அகர்வால் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்ற உடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பில் அவரது நடிப்பை பார்த்து அசந்து விட்டேன். பிச்சு உதறியிருக்கிறார். இதில் வேறு ஒரு சோனியாவை பார்ப்பீர்கள். நான் தாய்லாந்தில் இருந்தேன். இந்த நிகழ்ச்சிக்காக வரவேண்டும் என்று நினைத்தேன், அதனால் வந்தேன். படக்குழுவினரும் நான் வர வேண்டும் என்பதற்காக எனக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து வர வைத்தார்கள். அவர்கள் நடிகர்களை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் டைகர் வெங்கட் சாருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.” என்றார்.

இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.அரவிந்தராஜ் பேசியதாவது
———————————————–
“தண்டுபாளையம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், இங்கு பேசியவர்களின் பேச்சை கேட்ட போது எனக்கு பயம் வந்துவிட்டது. இனி நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நிச்சயம் இந்த படத்தை மக்கள் பார்க்க வேண்டும். வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் இருக்கும் போஸ்டரை பார்த்த போது எனக்கு, மங்கத்தா படத்தில் இருக்கும் அஜித் மற்றும் அர்ஜுன் தான் நினைவுக்கு வந்தார்கள். நடிகர்கள் இருவர் நடித்து நிறைய படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இரண்டு நடிகைகள் காம்பினேஷனில் படங்கள் இதுவரை வந்ததில்லை. அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி பேசியது
———————————————–
“தண்டுபாளையம் படம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாக இருக்கும். இதில் வன்முறை அதிகமாக இருக்கிறது என்பதால் மக்கள் இந்த படத்தை பார்க்காமல் இருக்க கூடாது. இந்த படத்தை பார்த்தால் தான் நாம் என்ன என்ன தவறு செய்கிறோம் என்பது தெரிய வரும். ஊருக்கு எங்கயாவது சென்றால் வீட்டை நன்றாக பூட்டிவிட்டு செல்கிறோம். அதன் பிறகும் திருடு போனால் அது விதி. ஆனால், என் வீட்டில் யாரும் திருட முடியாது என்று நினைத்து அலட்சியமாக இருந்தால் அது கொழுப்பு, இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில், மக்களின் அலட்சியத்தால் எவ்வளவு பெரிய ஆபத்து நேர்கிறது, என்பதை விளக்கியிருக்கும் தண்டுபாளையம் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகர்கள்
——————-
சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், பிர்லா போஸ், சூப்பர் குட் லட்சுமணன், டைகர் வெங்கட்

தொழில்நுட்ப கலைஞர்கள்
———————————————–
கதை திரைக்கதை வசனம் பாடல் தயாரிப்பு-
டைகர் வெங்கட்

இயக்கம் –
டைகர் வெங்கட் – கே.டி.நாயக்

ஒளிப்பதிவு – பி.இளங்கோவன்

இசை –
ஜித்தின் கே.ரோஷன்
நடனம் – பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு – வெங்கட்
………..