தில்ராஜு பெருமையுடன் வழங்கும் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் பான் இந்தியா திரைப்படம் ‘யெல்லம்மா’! ‘பலாகம்’ புகழ் வேணு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சிரிஷ் தயாரிக்கிறார்!

10

வெற்றி கதைகளை தேர்வு செய்வதில் தனிச்சிறப்பு கொண்ட தயாரிப்பாளர் தில்ராஜு, ‘பலாகம்’ புகழ் இயக்குநர் வேணுவின் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படமான ‘யெல்லம்மா’வை பெருமையுடன் வழங்குகிறார். அறிமுக படத்திலேயே தேசிய விருது பெற்று பாராட்டு பெற்ற வேணு, இந்த முறையும் ஆழமான சக்தி மற்றும் ஆன்மீகத் தன்மை கொண்ட கதையுடன் புதிய படம் இயக்குகிறார். இந்த படத்தை பிரமாண்டமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் சிரிஷ் தயாரிக்கிறார்.

சினிமாவில் பல ஆண்டுகளாக இசைத்துறையில் தனது இசை மூலம் ரசிகர்களை மகிழ்வித்த ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் (DSP), இப்போது முதன்முறையாக ஹீரோவாக திரையில் அறிமுகமாகிறார். நீண்ட நாட்களாக பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவரது ஹீரோ அறிமுகம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. தனது இயல்புக்கும் எனர்ஜிக்கும் ஏற்ற கதையாக தேர்வு செய்திருக்கிறார். கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தின் இசையையும் தேவிஸ்ரீ பிரசாத் தானே அமைக்கிறார்.

‘யெல்லம்மா’ தெய்வீக சக்தியை மையமாகக் கொண்டு, நாட்டுப்புற மரபுகள் மற்றும் பண்பாட்டு நம்பிக்கைகளின் பின்னணியில் உருவாகும் படம். மகர சங்கராந்தி என்ற புனித நாளில் படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு சுழலில் சிக்கிய தனித்த வேப்பிலை திடீரென வானத்தை நோக்கி பாய்வதுடன் தற்போது வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் தொடங்குகிறது. அதனை ஒரு ஆடு உற்றுநோக்குகிறது. அடுத்த கணமே, கால்களில் சலங்கை ஒலிக்க ஓர் ஆள் ஓடிவர, மறுபுறம் கரடுமுரடான செருப்புடன் இன்னொருவர் பாய்ந்து வருகிறார். மேகங்களை தாண்டி உயர்ந்த அந்த இலை, தாய் தெய்வத்தின் தெய்வீக வடிவமாக மாறுகிறது. கனமழை பூமியை நனைக்க, அதில் நனைந்த ஆடு தலையசைக்கிறது.

புயலின் நடுவே, மரத்தடியில் அரிவாள் சாய்ந்து கிடக்க, மேல்சட்டை இல்லாத ஓர் ஆள் இடுப்பில் பறை கட்டி, பாறையில் அமர்கிறார். மிதந்துவந்த அந்த வேப்பிலை அவரின் பின்னால் வந்து மெதுவாக இறங்குகிறது. அவர் திரும்பும் தருணத்தில், பர்ஷி என்ற கதாபாத்திரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் முழு கம்பீரத்துடன் வெளிப்படுகிறார்.

இந்த கிளிம்ப்ஸ், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தில் ஆழமாக ஊன்றிய சக்திவாய்ந்த கதை என்பதை உறுதிபடுத்துகிறது. நீண்ட முடி, கரடுமுரடான மாற்றம் என தேவி ஸ்ரீ பிரசாத் தனது கதாபாத்திரத்தை மிகுந்த இயல்புடன் கையாண்டுள்ளார். வேப்பிலை, மஞ்சள், குங்குமம் என தெய்வீகத்துடன் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் காட்சிக்கு வலுசேர்க்கிறது.

இந்த ஒரு கிளிம்ப்ஸே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘யெல்லம்மா’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

தொழில்நுட்ப குழு:

வழங்குபவர்: தில்ராஜு
தயாரிப்பாளர்: சிரிஷ்
திரைக்கதை, இயக்கம்: ‘பலாகம்’ புகழ் வேணு யெல்தண்டி,
பதாகை: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்