இயக்குனர் வெற்றி பெறனும், மக்களுக்கு குய்கோ படம் போய்ச்சேரனும் – நடிகர் விதார்த்

152

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில்,  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், “மலைக்கிராமத்துக்கான கதை என்றதும், மனதில் ஏற்காடு, ஊட்டி போன்ற விஷுவல் கண் முன் தோன்றும். அவர் லோக்கேஷனை ஃபோட்டோஸாகக் காட்டினார். இந்தக் கதை உருவான இடத்துல ஒரு வருடம் பயணித்து, ஒவ்வொரு சீசனும் எப்படி இருக்கும் எனச் சொன்னார். அழகிய கிராமம் எனச் சொல்வது சுலபம். ஆனா அதைக் காட்சிப்படுத்துவது சவாலா இருக்கும். லோக்கேஷனைப் பார்த்துடலாம் எனக் கேட்டேன். அந்தக் கிராமத்தில் மொத்தம் 40 வீடுதான் இருந்தது. அந்த ஊரில் இறங்கியதும் சிக்னல் கட்டாகிடுச்சு. அந்த ஊர் முழுவதும் பூந்தோட்டமாக இருந்தது. அந்த ஊர்ல பூக்களைப் பயிரிட்டுக் கொண்டிருந்தார்கள். நல்ல பசுமையான லோக்கேஷனாகப் பார்த்து வச்சுட்டு வந்தோம். ஆனா படம் தள்ளிப் போய் மே மாசத்து வெயிலில் ஷூட்டிங் போகும்படி இருந்தது. ‘வேலூரில் மே மாசம் ஷூட்டிங்கா?’ என பயமுறுத்தினாங்க. எல்லோரும் பயமுறுத்தின மாதிரி மலை எங்களை பயமுறுத்தலை. ஆனா மலையில் இருந்து இறங்கிய ரெண்டு நாளும் வெயில் நல்லா காட்டிடுச்சு. ஒரு பாடல் படப்பிடிப்புக்காகப் பார்த்த இடத்தில் வனத்துறையின் அனுமதி இல்லாததால், வேற லோக்கேஷன் பார்த்தோம். அணைக்கட்டு முருகர் கோயில் பக்கத்தில் இருக்கும் மலையில் ஷூட்டிங் போனோம். அதனால் வேலூரை ஸ்விட்சர்லாந்து மாதிரி காட்ட முடிஞ்சது.”

யோகிபாபுவிற்கு ஜோடியாக ஜோடியாக நடித்திருக்கும் துர்கா பேசியதாவது, “விதார்த் சார் என் காட்ஃபாதர். இதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நானும் இளவரசு சாரும், ஒருநாள் ஷூட்டிங் முடித்துவிட்டு காஃபி குடித்துக் கொண்டே பேசினோம். அவர்  பேசினாரு, பேசினாரு, அவ்ளோ ஞானத்தை எங்க ஒளிச்சு வச்சார் எனத் தோணுமளவுக்குப் பேசினார். யோகிபாபு சாரு, நார்மலா நாம எல்லாரும் ஸ்க்ரீன்ல பார்க்கிற மாதிரி தான் இருப்பார். சிரிச்சுட்டே, சிரிக்க வச்சுட்டே இருப்பார்.”

நடிகர் முத்துக்குமார் பேசியதாவது, ” சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு நிறைய கதை சொன்னாங்க. அருள்செழியன் சொன்ன கதை ரொம்பச் சுவாரசியமாக இருந்தது. எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய படம். எனக்கு, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கேரக்டர். வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை இதுல சொல்லியிருக்கார். இந்தப் படம் எந்தச் சூழ்நிலையிலும் பார்வையாளர்களை ஏமாத்தாது. நூறு சதவிகிதம் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கும்.”

நடிகர் இளவரசு பேசியதாவது, “இளம் பத்திரிகையாளர்களுக்கு சினிமா கனவு இருந்தா சீக்கிரம் சினிமாக்கு வந்துடுங்க. காத்திருக்காதீங்க. இப்பவே வந்து சினிமாவுல முட்டுங்க, மோதுங்க. பத்திரிகை துறை உங்க நேரத்தையும் உழைப்பையும் உறிந்துவிடும். நல்லவேளையா அருள்செழியன் இப்பயாவது வந்துட்டார். படம் கிடைச்சிடுச்சு, செல்லப்பிள்ளை யோகிபாபு, ஃபெர்பார்ம் பண்ற ஹீரோ விதார்த், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் உள்ள வந்துட்டாங்க. ஆனா முதல் நாள் ஷூட்டிங்கில், அறுபது சீனில் எதை முதல் ஷாட்டாக வைப்பீங்க? அகிரா குரோசாவோவாக இருந்தாலும், இந்தப் பிரச்சனை வரும். அதைச் சமாளிக்க,  அசோசியேட் இயக்குநர், கேமராமேன் என இருவரின் தயவு அவசியம் தேவை. அப்படியொரு டீம் அருள் செழிலனுக்கு அமைஞ்சது. அதைத் தாண்டி, இந்தப் படத்துல என்ன சிறப்பு? மலையாளப்படத்துல தான் நூல் பிடித்தாற்போல் சுவார்சியம் குறையாமல் டக்கு டக்குன்னு திரைக்கதை அமைச்சுட்டே போவாங்க. சினிமாவுல, கதையை விட திரைக்கதை தான் ரொம்ப முக்கியம். அது சில ஸ்க்ரிப்ட்க்கு அமையும். இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு. அவர் கதையில், ஃப்ரீசர் பெட்டிக்கு ஒரு எமோஷன் வச்சு அருமையான திரைக்கதையாக அமைச்சிருக்கார்.

பெண்கள் பொதுவாகத் தன்னை அழகாகக் காண்பிச்சுக்க நினைப்பாங்க. இந்தப் படத்துல, கதாநாயகி ஸ்ரீபிரியங்கா எண்ணெய் ஒழுகும் முகத்தோடு நின்னுட்டிருந்தாங்க. நான் போய், ‘டச் அப் பண்ணிக்கோம்மா’ எனச் சொன்னேன். ‘இல்ல சார், கதைக்கு இப்படித்தான் இருக்கணும்’ எனச் சொன்னாங்க.  கன்டினியுட்டி மிஸ் ஆகிடக்கூடாதுன்னு சிச்சுவேஷனுக்கு ஏற்ற முகத்துடன் இருக்கணும் என ஒரு கதாநாயகி படத்தோடு இன்வால்வ்  ஆகி நடிச்சது ஆச்சரியமாக இருந்தது.

விதார்த்திற்கு அவரது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை. விமல், விதார்த், விஜய் சேதுபதி ஆகியோர் ஹீரோவின் நண்வர்களாக நடிச்சு இப்போ ஹீரோவாகி இருக்காங்க. விதார்த் சினிமாவுல சாதிச்சது தெரியும். ஆனா அவர் பாரதம் நாடகத்துல, துச்சாதனாக துயில் உறியுற காட்சி நடிச்சுட்டு, ஸ்க்ரீனுக்குப் பின்னாடி போறப்ப அவர் மேல தண்ணி ஊத்தினா, பொஸ்ஸ்ன்னு ஆவி போகும்.  பொசுக்குன்னு தண்ணி ஊத்தினா ஆவி பறக்கும். ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரமாகவே மாறுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமே இல்லை. அவர் இன்னும் பெரிய உயரத்துக்குப் போகணும். இது ஓட வேண்டிய படம். படத்தை இன்னும் கொஞ்சம் விளம்பரத்தைத் தயாரிப்பு நிறுவனம் அதிகப்படுத்தலாம்.”

நடிகை ஸ்ரீபிரியங்கா பேசியதாவது, “எங்க படத்தோட தலைப்பு மட்டும் வித்தியாசமானது இல்லை. எங்க டீமே வித்தியாசமானதுதான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கு. ஒளிப்பதிவாளரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகக் காண்பிச்சிருக்கார். படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகுது. அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க.” என்றார்.

நடிகர் விதார்த் பேசியதாவது, “இன்றைய நிகழ்வின் நாயகனான இசையமைப்பாளர் அந்தோணிதாசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்தப் படத்தின் ப்ரொடக்‌ஷன் தொடங்குவதற்கு முன்பே, இயக்குநர் அருள் செழியன் சொல்லி, அந்தோணிதாசன் படத்துக்கு மியூசிக் போட்டு, அந்தப் பாடலை நான் கேட்டு அவருக்குப் பேசினேன். இந்தப் படத்தில் இசை மிகப் பிரமாதமாக வந்திருக்கு. படத்தில், இந்தப் பாடல்களுக்கு, நான் ஆடணும்னு நினைச்சேன். ஆனா படத்துல எனக்கு அந்த வாய்ப்பு அமையல. இயக்குநர் அருள் செழியனை, எனக்கு காக்கா முட்டை மணிகண்டன் தான் அறிமுகப்படுத்தினாரு. அப்போ அவர், ‘என்கிட்ட ஒரு நல்ல கதை இருக்கு. படிக்கிறீங்களா?’ என ‘ஃப்ரீஸர் பாக்ஸ்’ கதையைக் கொடுத்தார். அந்தக் கதை எனக்கு முன்பே தெரியும். மைனா படத்திற்குப் பிறகு, எனக்குத் தோல்விப் படங்களாக அமைந்த போது, என் குடும்ப உறுப்பினர்கள் எனக்காக ஒரு படம் தயாரிக்க முடிவு பண்ணாங்க. அப்போ இயக்குநர் மணிகண்டன் எனக்குச் சொன்ன கதைதான் இது. நான் இந்தக் கதையைத் தயாரிக்கலாம்னு இருந்தேன். அப்போ, ‘நீங்க வில்லேஜ் சப்ஜெக்டில் நடிச்சுட்டீங்க. எனக்கும் காக்கா முட்டை முடிஞ்சது. நாம வேற ஜானர்ல பண்ணலாம் என குற்றமே தண்டனை படம் பண்ணோம். மீண்டும், இந்தப் படம் திரும்பி என்னையே தேடி வந்தது. என் கேரக்டரில் ரமேஷ் திலக் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனம், ஒரு ஹீரோவாகப் போகலாம் என முடிவெடுத்ததால், நான் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். ஆனா, நான் உள்ள வர்றதுக்கு நிஜமான காரணம் கதை தான். அவ்வளவு அழகான கதை. எப்படி ‘ஒரு கிடாரியின் கருணை மனு’ படம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதோ, அப்படியான ஒரு வாழ்வியல் சார்ந்த கதை. இந்தப் படத்தின் திரைக்கதையை மிகச் சுவாரசியமான ஒன்றாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் T. அருள் செழியன். அற்புதமான இந்த இயக்குநர் வெற்றி பெறனும். மக்களுக்கு இந்தப் படம் போய்ச் சேரனும்” என்றார்.

இசையமைப்பாளர் அந்தோணி தாசன் பேசியதாவது, “என்னைப் பெத்தெடுத்த எங்கம்மாவுக்கு நன்றி. கோ.மு.-ல ஆரம்பிச்சு கோ.பி.-ல முடியுது. கொரோனாக்கு முன்னாடி தொடங்கி, கொரோனாக்குப் பின்னாடி வெளியாகப் போகுது. படம் தொடங்கி 5 வருஷமாகுது. கலச்சாரத் தூதுவனா, மக்களை சந்தோஷப்படுத்துற பணியை மண்ணுக்குப் போறவரை செய்வேன். நான் கரகாட்டக் கலைஞன் என்பதால் நடனமும் ஆடுவேன். படத்துல, பாடல்களுக்கு நானே ஆடுறேன் எனக் கேட்டுப் பார்த்தேன். இயக்குநர் ஒத்துக்கலை. அவரது அடுத்த படத்துல எனக்கு முக்கியமானதொரு கதாபாத்திரம் தருவாருன்னு நம்புறேன்.” என்றார்.

இயக்குநர் அருள்செழியன் பேசியதாவது, “ஜீ தமிழ்ல வேலை பார்த்துட்டு இருக்கும்போது, 3 ஸ்க்ரிப்ட் பெளண்ட் பண்ணேன். அதுல ஒன்னுதான் ஆண்டவன் கட்டளை. மணிகண்டனோட ‘காக்கா முட்டை’ படம் பார்த்துவிட்டுப் பாராட்டுறதுக்காகக் கூப்பிட்டேன். அப்போ அவர் எனது ‘ஆண்டவன் கட்டளை’ கதையைக் கேட்டார். அவர் மூலமாக ஃப்ரீசர் பெட்டி கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு, கடைசி விவசாயி தயாரிப்பாளர் சமீர் பரத் அழைத்தார். யோகிபாபுவுக்கு, ஆண்டவன் கட்டளை சமயத்திலேயே கதை சொல்லியிருந்தேன். கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகப் பண்ணியிருக்கார். விதார்த், மிகச் சிறந்த மனிதராக இருக்கிறார். யோகிபாபுவின் தேதி கிடைக்காததால், அவரது  போர்ஷனை முதலில் முடிச்சோம். விதார்த்தைக் காக்க வைத்து ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம்.

இளவரசு அண்ணனிடம் கதை சொன்னேன். அடுத்த நாள் அவர் எனக்கு போன் செய்து, ‘மூன்று மணிக்கு முழிப்பு வந்தது, இந்தக் கதை பற்றித்தான் யோசிச்சிட்டிருந்தேன். ரொம்பப் பிரமாதமாக இருக்கு’ என்றார். 2019 இல் படம் தொடங்கி தாமதம் ஆன பொழுதெல்லாம் மிக உறுதுணையாக இருந்தார். ஆயிரம் சினிமாக்கு பைனான்ஸ் பண்ணவரிடம் கூட்டிட்டுப் போனார். தனிப்பட்ட முறையில் தொடர்ந்து அக்கறையோடு இந்தப் பட உருவாக்கத்திற்கு உதவி பண்ணார்.

வெறொரு படத்திற்காக அந்தோணிதாசன் இசையமைத்த, ‘ஏ! சிரிப்பழகி’ பாட்டை, ‘எனக்கு வேணும்’னு கேட்டு வாங்கினேன். ராஜேஷ் யாதவ் வேகமாக 35 நாளில் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கார். படத்தில் மோசமான கெட்ட பாத்திரங்களே இல்லை. ஏன் போலீஸை மட்டும் கெட்டவங்களா காட்டியிருக்கீங்க என சென்சாரில் கேட்டனர். 35 வருஷமா பத்திரிகையாளரா வேலை பார்த்தேன். நான் பார்த்த விஷயங்களைக் கொஞ்சம் நையாண்டியாக டீல் பண்ணேன் எனச் சொன்னேன்.”

குய்கோ எனும் தலைப்பு, ‘குடியிருந்த கோயில்’ என்பதன் சுருக்கமாகும். திரையரங்குகளில், நவம்பர் 24 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.