“நினைவெல்லாம் நீயடா” படத்திற்காக இசைஞானி இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா!!

161

இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட. இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இதயகோயில்” படத்தில் “இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்” தான் இளையராஜா எழுதிய முதல் பாட்டு. பாரதிராஜா இயக்கிய “நாடோடி தென்றல்” படத்தின் அனைத்து பாடல்களையும் இளையராஜாவே எழுதியிருந்தார். அனைத்துமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த “விடுதலை” படத்தில் இடம்பெற்ற “வழிநெடுக காட்டுமல்லி…” என்ற பாடலை இளையராஜா எழுதி பாடியிருந்தார். அந்த பாடல், இசை ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்க ராயல் பாபு தயாரிப்பில் பிரஜன் மனிஷா யாதவ் சினாமிகா யுவலட்சுமி ரோகஹித் ரெடின் கிங்ஸ்லி முத்துராமன் பி எல் தேனப்பன் டைரக்டர் ஆர்.வி. உதயகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தில் ‘இதயமே இதயமே இதயமே…. உன்னை தேடி தேடி கழிந்தது இந்த பருவமே…’என்ற பாடலை இளையராஜா எழுதியிருக்கிறார். இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜா சில பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் முதல் முறையாக தன் தந்தை எழுதிய பாடலை இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் நேற்று மாலை வெளியிடப்படடது. பிரபல இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் டி இமான் ஆகியோர் இந்த பாடலை தங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ரிலீஸ் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.