ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு

130

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி அறிவிப்பு விழாவை ஒருங்கிணைத்தனர்.

இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கே. குமார், படத்தை வழங்கிய ஃபைவ் ஸ்டார் செந்தில், விநியோகஸ்தர் சிதம்பரம், இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநரும், நடிகருமான சசிகுமார், கதையின் நாயகனான சூரி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கே. குமார் பேசுகையில், ” கருடன் திரைப்படத்தை வெற்றி பெற செய்த ஊடகத்தினருக்கு நன்றி.‌ இந்தப் படத்தின் பணிகளை தொடங்கும் போதே மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கையை அளித்தவர் சசிகுமார் தான். அவர் இந்தப் படத்தில் இணைந்த பிறகு தான் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

இந்த படத்தின் வெளியீட்டின் போது பைவ் ஸ்டார் செந்தில், விநியோகஸ்தர் சிதம்பரம்.. என பலரும் உதவி செய்தனர். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படமான ‘கருடன்’ படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கியதற்காக இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், கலை இயக்குநர் துரைராஜ், படத்தொகுப்பாளர் மற்றும் அவரது உதவியாளர்கள், விளம்பர வடிவமைப்பாளர் தினேஷ் அசோக், திங்க் மியூசிக் சந்தோஷ் & சரவணன்.. என இப்படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவானதற்கு சூரி தான் முதன்மையான காரணம். படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கல்களை தீர்த்து, வெளியீட்டிற்கு உதவியதற்காகவும் சூரிக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சூரியுடன் பதினான்கு ஆண்டு காலமாக பயணிக்கிறேன். அண்மையில் ஒரு நேர்காணலில் என்னை அவர் ‘தம்பி’ என்று குறிப்பிட்டார். இது என்னை மிகவும் நெகிழச் செய்தது ” என்றார்.

இயக்குநர் துரை செந்தில்குமார் பேசுகையில், ” ஒரு இயக்குநருக்கு சந்தோசம் அளிக்கும் விசயம் எதுவென்றால்… இது போன்ற ஒரு திரைப்படத்தை, தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்கிற.. ஊடகங்கள் ஆதரவு தெரிவிக்கின்ற.. விமர்சன ரீதியில் பாராட்டைப் பெற்ற ஒரு படத்தை உருவாக்குவது தான். இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமான ஒரு விசயம். அதுபோன்ற வெற்றி பெற்ற படமாக ‘கருடன்’ அமைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியதிலிருந்து அதன் பிறகு இயக்குநர் வெற்றிமாறன்… பிறகு சசிகுமார்…‌ ஆகியோர் இணைந்ததிலிருந்து..‌ நான் நேர் நிலையான அதிர்வை உணர்ந்தேன். ‘ஒரு படம் தனக்குத் தேவையானதை தானே தேடிக் கொள்ளும்’ என என்னுடைய குருநாதர் பாலு மகேந்திரா குறிப்பிட்டதாக சொல்வார்கள். அதை நான் இந்த திரைப்படத்தில் உணர்ந்தேன். படம் தொடங்கியதிலிருந்து படம் வெளியாகி வெற்றிகரகமாக ஓடும் இந்த தருணம் வரை இதில் பணிபுரிந்த அனைவரும் நேர் நிலையான எண்ணங்களுடன் இருந்தனர். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களும் … இந்த திரைப்படம் வெற்றி பெறும் என்று சொல்லிக் கொண்டே இருந்தனர். இந்த வெற்றியை அமைத்துக் கொடுத்த இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தருணத்தில் இந்த திரைப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போல் ஒவ்வொரு படத்திற்கும் அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.‌ அனைவருக்கும் இது போல் அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இந்த திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள்… தங்களின் வாய் மொழியிலான ஆதரவின் காரணமாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.‌ இதற்காகவும் அவர்களுக்கு நான் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார் .

இயக்குநர் – நடிகர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், ” இயக்குநராக இருந்த என்னை நல்லதொரு நடிகனாக மாற்றிய இயக்குநர் துரை. செந்தில்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் உடன் நடித்துக் கொண்டிருந்த நட்சத்திர நடிகர்கள் மதுரை வட்டார வழக்கில் பேசிக் கொண்டிருந்த போது.. இயக்குநரிடம் ‘அமைச்சர் கதாபாத்திரம் தானே.. எனக்குத் தெரிந்த கொங்கு தமிழில் பேசுகிறேன்’ என அனுமதி கேட்டேன். அவரும் சரி என்றார்.

படத்தில் நடிக்கும் போது தெரியவில்லை. ஆனால் கதாபாத்திரத்திற்காக பின்னணி பேசும்போது அருமையான திரைக்கதை இருக்கிறது என்பதை உணர்ந்து பூரித்துப் போனேன். அதிலும் இயக்குநர் வெற்றிமாறனின் ஆசீர்வாதத்தில் இந்த திரைப்படத்தின் பணிகள் நடைபெற்றது எனக் கேட்டபோது உண்மையிலேயே மகிழ்ந்தேன்.

துரை செந்தில்குமாரையும், வெற்றிமாறனையும் பார்க்கும் போது எனக்கு சற்று பொறாமையாக இருக்கிறது. இவர்கள் இருவரும் குருவை எப்போதும் போற்றும் மாணாக்கர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் தோல்வியடைய மாட்டார்கள். உலகத்தில் மிக உயர்ந்த பண்பு எது? என்றால்.. குருநாதரை நேசிப்பது. இயக்குநர் துரை. செந்தில்குமார் அவரது குருவான பாலு மகேந்திராவை எப்படி அரவணைத்தார் என்பதை வெற்றிமாறன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். பாலு மகேந்திராவின் ஆசி தான் இந்தப் படத்தில் வெற்றிக்கு காரணம்.

நாம் எவ்வளவு நாள் வாழ்ந்தோம் .. எத்தனை வெற்றிகளை பெற்றோம் என்பது முக்கியமல்ல. நாம் எத்தனை பேருக்கு முன்னுதாரணமாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

சூரியை ‘விடுதலை’ படத்தின் மூலம் தமிழ் உலகமே போற்றும் நாயகனாக உயர்த்திய இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

அந்த வெற்றிக்கு நிகராக ‘கருடன்’ திரைப்படத்தின் வெற்றியும் அமைந்திருக்கிறது.

சினிமாவில் போலி நண்பர்கள் அதிகம். இந்த சூழலில் நண்பர் சூரிக்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்லி.. இந்த படத்தில் நடித்த சசிக்குமாரின் பெருந்தன்மைக்கும், பெரிய மனதிற்கும் நன்றி. ” என்றார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில், ” தயாரிப்பாளர் குமார் முதலில் சக்சஸ் மீட் என்று சொன்னார். உடனே அவரிடம் சக்சஸ் மீட் என்று வேண்டாம். தேங்க்ஸ் கிவிங் மீட் என்று சொல்லுங்கள். அதனால் தற்போது நன்றி என்று மாற்றிவிட்டார்கள். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனெனில் தற்போதெல்லாம் ஓடாத திரைப்படங்களுக்கு தான் சக்சஸ் மீட் வைக்கிறார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறது.

அது ஏன்? என்றால் தோல்வி என்றாலே அனைவருக்கும் பயம்.‌ தோல்வியை யாரும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த திரைப்படத்தில் வெற்றி பெற முடியும். அதனால் ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தால்… அது தோல்வி அடைந்திருக்கிறது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தோல்விக்கு நாம் ஒரு காரணத்தை தான் சொல்வோம். ஆனால் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. இதனால் ஓடியது இவர்கள் நடித்ததால் தான் வெற்றி பெற்றது என்பார்கள். அதேபோல் கருடன் படத்தின் வெற்றிக்கு பல காரணங்களை சொன்னார்கள். சூரியினால்… சசிகுமாரால்… வில்லனால்.. இயக்குநரால்… என பல பல விசயங்களை குறிப்பிட்டார்கள். ஆனால் இந்தப் படத்தின் வெற்றிக்கு என்னை பொறுத்தவரை ஒரே ஒருத்தர் தான் காரணம். அது தயாரிப்பாளர் குமார் தான். ஏனெனில் இந்த திரைப்படத்தை வடிவமைத்ததே அவர் தான். என்னுடைய கதாபாத்திரத்திற்கும் நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்று தீர்மானித்தவரும் அவர்தான். இந்த கதாபாத்திரத்தை என்னிடம் விவரிக்கும் போது எனக்கு தெரியவில்லை.‌ இந்தப் படத்தின் கதையைக் கேட்டதிலிருந்து..
வெளியாகும் வரை இந்த படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தவர் தயாரிப்பாளர் குமார் மட்டும் தான். மற்ற அனைவரும் நான் உட்பட படம் வெளியான பிறகு தான் தெரியும் என்று இருந்தோம்.

பட வெளியீட்டிற்கு முன்னரே இந்த திரைப்படத்தை டிஜிட்டல் தளங்களில் விற்பனை செய்ய முடியவில்லை என்ற நிலை இருந்தது.‌ ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பியவர் தயாரிப்பாளர் தான்.‌ ஓ டி டி விற்பனை ஆகவில்லை என்றாலும் ரிஸ்க் எடுத்து படத்தை வெளியிட்டார்.‌

ஒரு திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையை இந்த ‘கருடன்’ ஏற்படுத்தி இருக்கிறது.‌ கருடன் படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகை தருகிறார்கள். எனக்கு இது மகிழ்ச்சியை தருகிறது.‌

‘கொடிவீரன்’ படத்தின் வெளியீட்டின் போது எனக்கு உதவியவர் தான் வினியோகஸ்தர் சிதம்பரம். இந்த படமும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொன்னவுடன் உண்மையில் மகிழ்ச்சி அடைந்தேன்.‌ படத்தை வழங்கியிருக்கும் பைவ் ஸ்டார் செந்தில் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர் வி உதயகுமார், வெற்றிமாறன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் சூரிக்காக நடிக்க வந்தேன். அது எனக்கு நல்ல விதமாக அமைந்து விட்டது. நான் ஒரு நல்ல விசயத்தை நினைத்தேன். அது எனக்கு மிகப்பெரிய நல்ல விசயமாக மாறிவிட்டது. இனிமேல் சூரியை யாரும் பரோட்டா சூரி என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அதையெல்லாம் தன்னுடைய சிறந்த நடிப்பால் அழித்துவிட்டார். இனி அவர் கதையின் நாயகனாகத்தான் இருப்பார். கதையின் நாயகனாக இருக்கும் வரை அவர் தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவார். அவர் கதாநாயகனாக மாறும்போதுதான் சற்று கடினமாக இருக்கும். ஆனால் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்த சூரியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய வெற்றியை.. நான் வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சி அடைகிறேன்.

படத்தின் வெற்றியை காண்பதற்காக திரையரங்குகளுக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். அவரிடம் இந்த வெற்றியை நீ தான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். ஒவ்வொரு திரையரங்கத்திலும் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும்போது நமக்குள் ஒரு பயம் ஏற்படும். அவர்கள் நம்பிக்கை கொடுக்கும் போது நமக்குள் ஒரு பொறுப்புணர்வு உண்டாகும். அந்தப் பொறுப்பை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் வரும். அந்த பயம் தான் நம்மை பல வருடம் தொடர்ந்து கடுமையாக உழைக்கத் தூண்டும். அதனால் சூரி வெற்றி பெற்றது நாம் அனைவரும் வெற்றி பெற்றது போலத்தான். சூரியின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இயக்குநர் துரை. செந்தில்குமாரிடமிருந்து நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.‌ எப்படி படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திர நடிகர்களை பொறுமையாகவும் சிரித்துக் கொண்டே கையாள்வது என்ற உத்தியை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் சில மாற்றங்களை செய்து கொள்ளலாமா? என கேட்டபோது அதனை உள்வாங்கிக் கொண்டு உடனடியாக ஏற்றுக்கொண்டு எங்களுக்கு சுதந்திரம் வழங்கினார். அவரும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். ” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ” கருடன் திரைப்படத்தை வெற்றி படமாக்கிய தமிழ் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி.

இன்றைய காலகட்டத்தில ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தர மறுக்கிறார்கள். டிஜிட்டல் தளங்களை நம்பித்தான் திரைப்பட வணிகம் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதைத்தான் நாம் மாடலாக வடிவமைத்து வருகிறோம். டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றிலிருந்து படத்திற்கான முதலீடு கிடைக்கும். திரையரங்க வெளியீடு என்பது கூடுதல் போனஸ். இதை இந்த வருடம் மாற்றிய சில படங்களில் கருடனும் ஒன்று. இரண்டாவது படம் என்றும் சொல்லலாம். திரைப்படத்தில் முதலீடு செய்த பணத்தை திரையரங்கத்தில் இருந்தும்…‌ திரையரங்கத்தின் வசூலில் இருந்தும் மீட்க முடியும் என்பதை நிரூபித்த படம் கருடன். டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்பனையை போனசாக வைத்துக் கொள்ளலாம் என்று உறுதிப்படுத்திய படம் கருடன்.

இந்த வகையிலான வணிகம் தான் ஜனநாயகம் மிக்கது என உணர்கிறேன். ஏனெனில் டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றிற்காக படத்தை உருவாக்கும் போது அவர்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் என்ன தேவையோ அதனைத்தான் அவர்கள் வாங்குவார்கள்.‌ அவர்களுக்கு தேவையானதை எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவார்கள். தேவையில்லை என்றால் அதனை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். இது ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும்.. ஒரு படைப்பாளியாக … ஒரு தயாரிப்பாளராக.. திரையரங்குகளில் வெளியிட்டு, நேரடியாக மக்களிடம் கொண்டு செல்கிற போது படைப்பு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இது டிஜிட்டல் தளங்களில் இல்லை.

இந்தப் படத்தின் வெற்றிக்கு நான் காரணமாக நினைப்பது இயக்குநர் துரை செந்தில்குமாரின் கடினமான திட்டமிட்ட உழைப்பு.‌ அவரைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் குமார். அவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன். அவரின் பங்களிப்பு குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார் பலமுறை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து படத்தில் நடித்த நடிகர்கள்.‌

இந்தப் படத்தில் சசிகுமார் இணைந்தது முதலில் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. படத்தை பார்த்த பிறகு சசிக்குமாருக்கு இந்த கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அவர் தனித்துவமான நடிப்பை வழங்கி இருக்கிறார் என உணர்ந்தேன்.

சூரியின் உழைப்பு அசாதாரணமானது. விடுதலை படப்பிடிப்பின் போது அவருக்கு வலது தோள்பட்டை அருகே காயம் ஏற்பட்டது. ஓய்வு எடுக்காமல் இந்தப் படத்தில் நடித்தார். காயத்தை மேலும் மோசமாக்கி கொண்டார். இருந்தாலும் அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக நூறு சதவீத உழைப்பை வழங்கி இருக்கிறார். அவர் இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடிகர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரை ஆச்சரியப்படுத்துவதற்கு எப்போதும் தயாராக இருப்பவர் நடிகர் சூரி.

காட்சியை படமாக்கும் போது கதாபாத்திரத்தில் உணர்வை உள்வாங்கிக் கொண்டு நடிக்க முயற்சிக்காமல்.. கதாபாத்திரமாகவே இருக்க முயற்சி செய்பவர் சூரி.‌ இதனை சூரி தொடர்ச்சியாக வளர்த்தெடுத்துக் கொண்டால்… இன்னும் சிறப்பான நடிகராக .. கூடுதல் உயரத்திற்கு செல்வார்.‌ ” என்றார்.

நடிகர் சூரி பேசுகையில், ” ஒரு படத்திற்கு கதையை தயார் செய்து யார் வேண்டுமானாலும் படப்பிடிப்புக்கு சென்று விடலாம்.‌ படப்பிடிப்பை நிறைவு செய்து விடலாம். படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளையும் நிறைவு செய்யலாம். கஷ்டப்பட்டு படத்தை வெளியிடவும் செய்யலாம். படம் வெளியான பிறகு இதுபோன்றதொரு மேடை கிடைப்பது கடினம். அந்த வகையில் நான் கதையின் நாயகனாக நடித்த இரண்டு படத்திற்கும் இத்தகைய மேடைக்கு வந்து விட்டேன். இதற்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட போது நான் என்னுடைய அலுவலகத்தில் இருந்தேன். மிகுந்த பதட்டத்துடன் இருந்தேன். பத்திரிக்கையாளர்களின் விமர்சனம் எப்படி இருக்கும் என்ற தவிப்பில் இருந்தேன். படத்தின் இடைவேளையின் போது போன் செய்து படம் நன்றாக இருக்கிறது என தகவல் சொன்னார்கள்.

அப்போதுதான் எனக்கு சற்று நிம்மதி பிறந்தது. அதன் பிறகு படம் நிறைவடைந்த உடன் பத்திரிக்கையாளர் அனைவரும் ஒருமித்த குரலில் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னவுடன் நம்பிக்கை பிறந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. உங்களின் வாய் முகூர்த்தம் தமிழகம் முழுவதும் பரவி இந்த படம் வெற்றி படமாக அமைந்து விட்டது. மக்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள். படத்திற்கு சிறந்த ஓப்பனிங்கும் கிடைத்தது.

இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட நிதி சார்ந்த சிக்கல்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நண்பர்களுக்கும் நன்றி.

என்னுடைய வாழ்க்கையில் விடுதலைக்கு முன்- விடுதலைக்குப் பின் என்ற நிலையை ஏற்படுத்திய வெற்றிமாறனுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.‌

இந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார், படத்தை பிரம்மாண்டமாக தயாரித்த தயாரிப்பாளர் குமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குமாருடன் பதினான்கு ஆண்டு காலம் பழகி இருக்கிறேன். அவர் ஒருபோதும் பணத்திற்கு ஆசைப்படாமல் என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். பணத்திற்காக என்னை எங்கேயும் விட்டுக் கொடுக்காமல் இதுவரை அழைத்து வந்திருக்கிறார். வெற்றிமாறனிடம் கதையின் நாயகனாக என்னை ஒப்படைத்த பிறகும், தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு தான் இந்த ‘கருடன்’. இன்று ஒரு வெற்றி படமாக அமைத்துக் கொடுத்ததற்காகவும் தயாரிப்பாளர் குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெளியீட்டு தருணத்தில் உதவிய விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி ”என்றார்.