நீட் தேர்வை மையப்படுத்திய ’அஞ்சாமை’படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் முதன்முதலாக பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்

115

தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன.
நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை மையப்படுத்தி இதுவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘அஞ்சாமை’. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
’அஞ்சாமை’ படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனை திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் டாக்டர் எம்.திருநாவுக்கரசு. மனநல மருத்துவர், பேராசிரியர் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்தவர் எம்.திருநாவுக்கரசு. நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து ‘அஞ்சாமை’ படத்தினை முதல் படமாக தயாரித்துள்ளார்.
’அஞ்சாமை’ படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. எப்போதுமே நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முதன்முதலாக ’அஞ்சாமை’படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் பெற்று வெளியிடுகிறது. இதன் மூலம் தொடர்ச்சியாக நல்ல படங்களை முழுமையாக பெற்று வெளியிடவும் முடிவு செய்திருக்கிறது.