ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் திரைப்படம் ‘மங்கை’

97

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் பெண்மையின் பெருமையை எடுத்துரைக்கும் திரைப்படமாக ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் ‘மங்கை’ உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வையை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர்.

வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில் அமீர் இயக்கத்தில் அசார் மற்றும் மைதீன் ஆகியோர் நடிக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்,’ மற்றும் வசந்த் ரவி நடிக்கும் ‘இந்திரா’ ஆகிய திரைப்படங்களையும் ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் பேனரில் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் முதல் பார்வை ஏ.ஆர். ஜாபர் சாதிக்கின் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ‘மங்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் மையக்கருவை பிரதிபலித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் முதல் பார்வை அமைந்துள்ளது.

‘மங்கை’ குறித்து பேசிய இயக்குநர் குபேந்திரன் காமாட்சி, “ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘மங்கை’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் கதையின் நாயகியாக ஆனந்தி நடிக்கிறார். துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சசிகுமார் இயக்கத்தில் உருவான ‘ஈசன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடந்துள்ள துஷி, தயாரிப்பாளரும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்து வருபவருமான ஜெயப்பிரகாஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மங்கை’ திரைப்படம் பெண்ணை பற்றிய ஆணின் பார்வையை பேசும் விதமாகவும் ஒரு பயணத்தில் பெண் சந்திக்கும் நிகழ்வுகளை சொல்லும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் மூணாறு, பூப்பாறை, தமிழ்நாட்டின் தேனி, கம்பம், கூடலூர், லோயர் கேம்ப் மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “‘மங்கை’ திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கும் என நம்புகிறேன்,” என்று தெரிவித்தார். பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி இயக்குநர்களோடு இணை இயக்குநராகவும் வசனகர்த்தாகவும் குபேந்திரன் காமாட்சி பணியாற்றியுள்ளார்.

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில் இப்படத்தின் இசையை பிப்ரவரியிலும் திரைப்படத்தை மார்ச் மாதத்திலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.