மக்கள் பிரச்சினையைப் பேசினால் அது நல்ல படம்: ‘பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!

141

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.
கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.எடிட்டிங் இத்ரிஸ்.

இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

‘பாய் ‘படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தியான ஸ்ரீ நியா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் ஸ்ரீ நியா பேசும்போது,

“பாய் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இதில் நிறைய திருப்பங்களும் அழகழகான முடிச்சுகளும் இருக்கும். இன்றைய சமுதாயத்தில் நடக்கிற விஷயம் மட்டுமல்ல நடக்கப் போவதையும் இப்படத்தில் கூறியிருக்கிறோம் .தமிழ் சினிமாவிற்கு இந்தக் கதை புதிதாக இருக்கும் . கொரோனா சவால்கள் எல்லாம் நிறைந்த காலத்தில் கடினமான நேரத்தில் இதை எடுத்தோம். படக் குழுவினர் கடினமாக உழைத்து தங்கள் உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் ” என்றார்.

தயாரிப்பாளர் சங்கம் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது,

“இந்தப் படத்தின் இயக்குநர் எப்படியோ இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு இந்தத் தலைப்பை வாங்கி விட்டார். இதன் ட்ரெய்லர் பார்க்கும் போது பெரிய வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை தருகிறது. இந்தப் படத்தில் எல்லா நல்ல அம்சங்களும் உள்ளன பணியாற்றிய அனைவரும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர்”என்றார்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது,

“இந்த பாய் படத்தின் மூலம் படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர், இயக்கி உள்ள இயக்குநர்,நடித்துள்ள கதாநாயக நடிகர் வெற்றி பெற வேண்டும். உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும்.

பாய் என்றால் சகோதரன் என்ற பொருள். நாம் அனைவருமே சகோதரர்கள்.இந்தப் படமும் சகோதரத்துவத்தைத் தான் பேசுகிறது .இந்த உலகத்தில் சகோதரத்துவம் வளர வேண்டும். மனிதநேயம் வளர வேண்டும்.
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர். அதாவது கொடுப்பவன் பெரியவன் .கொடுக்காதவன்கீழ்குலத்தோன் இவ்வளவுதான்.வேறு எந்தப் பிரிவும் கிடையாது.

இது மாதிரி மேடைகளில் பேசும்போது எங்களுக்கு ஒளிவு மறைவு கிடையாது . வெளிப்படையாகத்தான் பேசுவோம். ஆனால் வாழ்த்த அழைக்கும்போது சுமாராக உள்ள படத்தைக் கூட வாழ்த்தி விட்டுத் தான் வருவோம். ஆனால் இதன் ட்ரெய்லர் நன்றாக உள்ளது.

உடுமலை நாராயணகவியின் கொள்ளுப்பேத்திதான் ஸ்ரீநீயாதான் இங்கே தயாரிப்பாளராக வந்துள்ளார்.அவர் ஆங்கிலம் கலந்து பேசினார் .தமிழையும் மறக்கக்கூடாது.

ஒரு முறை எம்ஜிஆரிடம் நீங்கள் வாரி வாரி வழங்குகிறீர்களே என்று கேட்டபோது,அவர் அதற்குக் காரணம் என் குருநாதர் என்எஸ்கே தான் என்றார்.ஏனென்றால் என் எஸ் கே நாடகக் குழுவில் எம்ஜிஆர் மாத சம்பளத்தில் நடித்தவர். எம்ஜிஆரே போற்றக்கூடிய அளவுக்கு வாரி வழங்கியவர் என் எஸ் கே. அவர் கடைசிவரை கொடுத்துக் கொண்டே இருந்தார். அந்தளவுக்கு மனிதநேயம் கொண்டவர்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இதை உலகத்தில் யாருமே இதைச் சொல்லவில்லை. ஒருவனை பழிவாங்க அவனுக்கு நல்லதுதான் செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் தான் கூறினார். அப்படி மனிதநேயத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும்.
உலகத்தில் சிறந்தது மனித நேயம் தான் என்று
அப்படி ஒரு அற்புதமான கருத்தை இந்தப் படம் கூறியுள்ளது .நல்ல படத்திற்குரிய அனைத்து தகுதிகளும் இந்த படத்திற்கு உள்ளன. படத்தின் தயாரிப்பாளர் நாயகன் இயக்குநர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

படம் பற்றி இயக்குநர் கமலநாதன் புவன் குமார் பேசும்போது,

“இன்று படம் எடுப்பது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் முக்கியம் மட்டுமல்ல சிரமமானதும் கூட. அந்தப் பணியில் இருக்கும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

இதை நன்றி கூறும் விழாவாகத்தான் நான் பார்க்கிறேன் .முதல் வார்த்தையே நன்றி என்று தான் கூற வேண்டும்.
நானும் நாயகன் ஆதவா ஈஸ்வராவும் நண்பர்கள்.அவர் என்னிடம் பேசும்போது நீங்களும் வளருங்கள் நானும் வளர்கிறேன் என்று தான் சொல்வார் . அப்படி சம மரியாதை கொடுப்பவர்.
நான் சோர்டைந்த நேரத்தில் எல்லாம் என்னை அருகில் வைத்துக் கொண்டு ஊக்கப்படுத்துவார். எங்களிடம் இருப்பது நட்பைத் தாண்டிய நல்ல உறவு.இது தொடர வேண்டும்.இந்தப் படத்திற்காக
எத்தனை பேருக்கு நன்றி சொல்வது?அத்தனை பேரும் இந்த படத்திற்காக அந்த அளவுக்கு உழைத்து உள்ளார்கள்.தொழில் நுட்பக் கலைஞர்களை நண்பர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் அப்படி அமைந்தது ஒரு வரம் என்றுதான் நான் கூறுவேன்.

பாய் என்றால் சகோதரன் மட்டுமல்ல நண்பன் என்றும் சொல்லலாம்.

இது ஒரு NON-LINEAR வகை திரைப்படமாக உருவாகியிருக்கிறது . படத்தின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் எந்த மதத்தையும் புண்படுத்தவில்லை. மனித நேயம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்கிற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.வேறு எதுவும் படத்தைப் பற்றி நான் கூற விரும்பவில்லை பார்த்து விட்டு நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார்.

நடிகர் லொள்ளு சபா ஜீவா பேசும்போது,

“நான் படத்தின் தலைப்பைப் பார்த்து விட்டு விழாவிற்கு வரத் தயங்கினேன் .ஆனால் படம் எப்படிப்பட்டது என்று பிறகு புரிந்தது.ஏனென்றால் இன்று சமூக ஊடகங்களில் நாம் ஏதாவது ஒன்றை நினைத்து சொல்லி அதை வேறு வகையாக எடிட் செய்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி விடுகிறார்கள். எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள் ஜாதி மதம் பாராமல் பகிர்ந்து கொள்வது அன்பு மட்டும்தான்.

இந்த படத்தின் போஸ்டரை பார்த்தேன் குல்லா, விபூதிப் பட்டை, கையில் சிலுவை என்று உள்ளது .இது தலைவரின் ஜக்குபாய் ஸ்டைல் ஆச்சே என்று இயக்குநரிடம் கேட்டேன் அவரும் தலைவரின் விசிறி என்றார்.

இந்த மனித குலத்தை அழிக்கும் ஆயுதங்களைத் தான் உலக நாடுகள் அதிக செலவு செய்து வாங்குகின்றன. உலக நாடுகள் இந்தியா உள்பட ராணுவத்திற்குச் செலவு செய்யும் தொகை தான் அதிகமாக இருக்கிறது. வேறு நல்ல விஷயங்களுக்கு அவ்வளவு செலவு செய்வதில்லை. மனிதர்களை அழிப்பதற்கு இவ்வளவு ஆயுதங்கள் எதற்கு? இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்த பிறகு அது ஏன் என்ற கேள்வி எழுகிறது.அன்பு மட்டும் தான் உருவம் இல்லாதது.
அதனால் தான் அன்பே சிவம் என்றார்கள்.அன்பு தான் உயர்வானது.
அடுத்த தலைமுறைக்கு நாம் இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டியது அன்பையும் நல்லவற்றையும் மட்டும் தான்.

இப்படி மனிதநேயத்தை பேசும் இந்தப் படம் சரியான நேரத்தில் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்று எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

புயல் வெள்ளப் பாதிப்புகளை பார்த்தோம்.நம்மாழ்வார் ஐயா இதைப் பற்றி முன்பே கூறியிருக்கிறார்.இனி வருங்காலத்தில் வரப்போவது எல்லாம் பருவம் மழை அல்ல, புயல் மழை தான் என்று.காலம் தவறித்தான் இனி மழை வரும். ஒவ்வொரு மழையிலும் பள்ளிகள் விடுமுறை இன்று விடுவார்களா என்று குழந்தைகள் பதற்றத்துடன் இருக்கின்றன .எனவே கோடை விடுமுறை என்பதை மாற்றி மழைக் காலத்தில் விடுமுறை விடலாம் என்று அரசுக்கு நான் ஒரு யோசனை வைக்கிறேன். இதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.
இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும் போது,

” முதலில் இந்தப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் துறைக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.பாய் என்று தலைப்பு வைத்து, அந்தப் படத்தை எப்படி சென்சாருக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஒரு வழியாக சென்சார் முடிந்துள்ளது அதற்காகப் பாராட்டுகிறேன்.
இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும்.

இஸ்லாமியர்களை நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் பழகுவோம்.எல்லாருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர் இருப்பார். எங்கோ ஏதோ ஒரு இடத்தில் மதப் பிரச்சினை வந்தால் அதை அரசியலாக்கி விடுகிறார்கள்.
ஆனால் நாம் அப்படி நினைப்பதில்லை.

படத்தில் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் வருகிறது. மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல. மனிதாபிமானம் தான் மதம் .மனிதாபிமானம் இருந்தால் எந்த மதமும் தேவையில்லை.

தீவிரவாதி என்றாலே அவன் எந்த மதமும் கிடையாது. அவன் மனித ஜாதியே கிடையாது .அவன் மிருகஜாதி.
ஒரு குண்டு வைத்து 100 பேரைக் கொல்கிறான் என்றால் அவன் இஸ்லாமியனாக இருக்க முடியாது .இந்துவாக இருக்க முடியாது .வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க முடியாது.

அன்னை தெரசா கருணையின் உருவம். அவரை யாராவது ஒரு கிறிஸ்தவப் பெண்மணியாக பார்க்கிறோமா?

அப்துல்கலாமை யாராவது இஸ்லாமியராகப் பார்க்கிறோமா?
அவரை மனிதநேயம் உள்ள இந்தியனாகத் தான் பார்க்கிறோம்.

கர்மவீரர் காமராஜர் இந்துவாக பிறந்தவர் தான். ஆனால் அவரை யாராவது இந்துவாகப் பார்க்கிறோமா? மனிதநேயம் உள்ள ஒரு சிறந்த ஆட்சியாளராகத்தான் பார்க்கிறோம்.

மக்கள் இன்று எல்லா பிரச்சினைகளையும் வெறும் செய்தியாகக் கடந்து போகிறார்கள். அதற்குத் தீர்வு என்ன என்று பார்ப்பதில்லை. இது பற்றி ஆட்சியாளர்கள் யாரும் யோசிப்பதில்லை.

ஒரு சிறந்த படம் என்பது எது? நல்ல கதையா? திரைக்கதையா?. வசனமா? பாடல்களா? சண்டைக் காட்சிகளா? எந்த திரைப்படம் சமூக பிரச்சினையைச் சொல்கிறதோ அது சிறந்த படம் தான்.மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்வது சிறந்த படம் தான்.அப்படிப் பார்க்கும் போது பாய் மிகச் சிறந்த படம்.இந்த காலகட்டத்தில் நல்ல படங்களை மக்கள் வரவேற்கிறார்கள் கொண்டாடுகிறார்கள்.
இன்று குறைந்த முதலீட்டுப் படங்களும் நன்றாக இருந்தால் ஓடுகின்றன.நல்ல படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள்.
இந்தப் படத்திற்கும் மக்கள் ஆதரவு தந்து கொண்டாட வேண்டும்” என்றார்.

நாயகன்ஆதவா ஈஸ்வரா பேசும்போது.

“நாங்கள் எங்கள் உழைப்பை இந்த படத்திற்கு நூறு சதவீதம் கொடுத்துள்ளோம்.திரை உலகத்தில் சிறிய படம் பெரிய படம் என்கிற பாகுபாடு தேவையில்லை. இது ஒரு படம் அவ்வளவுதான்.சிறிய படத்திற்கும் பெரிய படத்திற்கும் எல்லாருமே உழைக்கிறார்கள் அதைவெளியிடுகிற திரைகளின் எண்ணிக்கை தான் வேறுபடுகிறது.
அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.அந்த நிலையில்தான் இந்தப் படத்தை அனைவரும் எங்கள் உழைப்பைக் கொடுத்து எடுத்திருக்கிறோம்” என்றார்.

விழாவில் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி. எஸ். ஆர். சுபாஷ், படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் அக்ஷய் , நடிகர் தீரஜ், பாடலாசிரியர் சங்கத் தலைவர் தமிழமுதன் இயக்குநர் ஷிவானி செந்தில், மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.