இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

13

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் ‘ப்ராமிஸ்’

ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும். எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம் அதாவது ப்ராமிஸ் .அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் போது முதலில் ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ என்று சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லப்படும் ப்ராமிஸ் எனப்படும் அந்த சத்தியத்தின் பின்னே இருப்பது உண்மையும் நம்பிக்கையும் உறுதிப்பாடும் தான். இறுதியில் அதுதான் ஜெயிக்கும்.அதனால்தான் நமது தேசியச் சின்னத்தில் ‘சத்தியமேவ ஜெயதே’ ,அதாவது வாய்மையே வெல்லும் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்திய மக்களிடம் புகழ்பெற்ற உண்மையையே பேசிய அரிச்சந்திரனும் அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக இருப்பதை அறியலாம்.

அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ப்ராமிஸ்.

கதையின் நாயகனாக நடித்து இந்தத் திரைப்படத்தை அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக வினோத்குமார் DFT பணியாற்றி உள்ளார்.
சரவண தீபன் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு ஸ்ரீராம் விக்னேஷ், பாடலாசிரியர் பாலா, DI மணிகண்டன், நடனம் அகிலா பணியாற்றியுள்ளனர்.

நாயகன் அருண்குமார் சேகர னுடன் கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். படத்தின் பிற கதை மாந்தர்களாக சுஜன், அம்ரிஷ் ,பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

படம் பற்றி இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது,

“இந்த உலகில் ப்ராமிஸ் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதைப் பற்றி இந்தப் படத்தில் பேசி இருக்கிறோம். அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது.உணர்ச்சிகரமானது. எனவே யாரும் அம்மா மீது அப்படி ப்ராமிஸ் செய்ய மாட்டார்கள். கணவன் மனைவிக்குள் காதலர்களுக்குள் இருக்கும் ப்ராமிஸ் என்பது மிகவும் மதிப்புள்ளது என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்.
ஒரு கட்டத்தில் அந்த ப்ராமிஸ் உடைக்கப்படும் போது, அந்த நம்பிக்கை சிதையும் போது அந்த வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன.
அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா இல்லையா?என்பதே இந்தப் படத்தின் கதை”என்கிறார்.

படப்பிடிப்பு நடந்த இடங்களைப் பற்றிக் கூறும் போது,
“ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள வெயில் நகரங்களான வேலூர், ராணிப்பேட்டை ஆற்காடு ,குடியாத்தம், வாணியம்பாடி, ஒடுகத்தூர் அணைக்கட்டு போன்ற இடங்களில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.பிச்சாவரம், கடலூர் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது எனவே இந்தப் படத்தில் உயிரோட்டமான கதை மட்டுமல்ல,உணர்ச்சிகரமான கதை மாந்தர்களும் உள்ளனர்.அது படத்தின் மீது எங்களுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் அம்சங்கள் ஆகும்”என்கிறார் இயக்குநர்.

படப்பிடிப்பு நடைபெற்று படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.படத்தின் டிரெய்லர் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப் பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.

‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்கள்.