ஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான பிரத்யேக நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது

281

சென்னை, செப்டம்பர் 4, 2025: சென்னை, செப்டம்பர் 4, 2025: தென்னிந்தியாவின் முன்னணி பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளுள் ஒன்றான ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, ‘காவேரி மகளிர் நலவாழ்வு மையம்’ தொடங்கப்பட்டிருப்பதை பெருமிதத்துடன் இன்று அறிவித்திருக்கிறது. இந்த மையம், மகளிரின் பருவமடைதல், தாய்மை, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் அதற்குப் பிறகான காலம் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் நலவாழ்வின் மீது அக்கறையுடன், ஆலோசனையையும், சிகிச்சையையும் வழங்குவதை பிரத்யேக நோக்கமாக கொண்டுள்ளது. இம்மையத்தை, புகழ்பெற்ற திரைப்பட நடிகை திருமதி. ஷாலினி அஜித் குமார் முன்னணி மருத்துவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
காவேரி மகளிர் நலவாழ்வு மையம், பெண்களின் கருத்துகள் கேட்கப்படுவதையும், தாங்கள் மதிக்கப்படுவதையும், தங்களுக்கு திறனதிகாரம் அளிக்கப்படுவதை உணரும் வகையில், ஒரு பாதுகாப்பான, ஆதரவான மற்றும் முழுமையான சுகாதாரப் பராமரிப்பு மையமாக செயல்படுவதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் மருத்துவம், மார்பக ஆரோக்கியம், சிறுநீரியல், மற்றும் மூலம், பௌத்திரம், ஆசனவாய் வெடிப்பு போன்ற இடுப்புக்கூடு மற்றும் ஆசனவாய் சார்ந்த அறுவை சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற பெண் மருத்துவர்களைக் கொண்ட பல்துறை மருத்துவக் குழு இங்கு சேவையாற்றுகிறது. மேலும், வளரிளம் பருவத்தினருக்கான சிறப்புத் திட்டங்கள், பிசிஓஎஸ் (PCOS), ஃபைப்ராய்டு கட்டிகள், அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு, மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்திற்கான பராமரிப்பு, சிறுநீர் அடக்க இயலாமைக்கான சிகிச்சைப்பிரிவு மற்றும் தடுப்பூசிகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கீழ் இம்மையத்தில் வழங்கப்படும். இதன்மூலம் மகளிருக்கு விரிவான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கனிவான சிகிச்சை கிடைப்பது இம்மையத்தில் உறுதி செய்யப்படுகிறது.
மருத்துவ ஆலோசனைகள் அனைத்தும் பிரத்யேகமாக பெண் மருத்துவ நிபுணர்களால் மட்டுமே வழங்கப்படுவதால், தங்கள் பாதிப்புகளையும், பிரச்சனைகளையும் எவ்விதத் தயக்கமுமின்றி பெண்கள் வெளிப்படையாகப் பேசக்கூடிய ஒரு உகந்த சூழலை இம்மையம் வழங்குகிறது.
வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் மகளிரின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய, காவேரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை ஆலோசகர் மருத்துவர். ஸபீஹா TS கூறியதாவது: “ஒரு பெண்ணின் வாழ்வில் ஒவ்வொரு கட்டமும் தனித்துவமான சவால்களைக் கொண்டதாக இருக்கிறது. வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாதவிடாய் சார்ந்த சிக்கல்கள் முதல் கருவுறுதல், கர்ப்பகாலம் மற்றும் மாதவிடாய் நிறுத்தக்கால ஆரோக்கியம் வரை சவால்கள் பெண்களின் வாழ்க்கையில் தொடர்கின்றன. காவேரி மகளிர் நலவாழ்வு மையத்தில், நாங்கள் மருத்துவ நிபுணத்துவத்தையும் கனிவையும் ஒன்றிணைத்து, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை வழங்குகிறோம். எங்களது நோக்கம் சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல; நீண்டகால ஆரோக்கியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் ஒரு தரமான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி மகளிரை வழிநடத்துவது எமது குறிக்கோளாகும்.”
ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறிதல் மற்றும் நோய் வராமல் முன்தடுப்புப் பராமரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் முதுநிலை குடும்பநல மருத்துவர் கவிதா சுந்தரவதனம் மேலும் கூறியதாவது: “மகளிர் ஆரோக்கியத்திற்கு வழக்கமான உடல் பரிசோதனைகளைத் தாண்டிய ஒரு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. ஃபைப்ராய்டு கட்டிகள், சிறுநீர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மார்பக ஆரோக்கியம் சார்ந்த பல பாதிப்புகள் பெரும்பாலும் போதிய கவனம் பெறுவதில்லை அல்லது சரியான நேரத்தில் கண்டறியப்படுவதில்லை. ஆரம்பத்திலேயே பாதிப்புகளை கண்டறிவதும், நோய்த்தடுப்புப் பரிசோதனைகளை மேற்கொள்வதும் சிகிச்சை பலன்களை மேம்படுத்துவதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மையம், மகளிருக்கு மேற்கூறிய அனைத்துப் பிரிவுகளிலும் சரியான நேரத்தில், சிறப்பு கவனத்துடன் ஆலோசனையும், சிகிச்சையும் கிடைப்பதை உறுதி செய்கிறது.”

மகளிருக்கான இம்மையம் தொடங்கப்பட்டிருப்பதற்கான தொலைநோக்கு குறிக்கோள் குறித்து, காவேரி மருத்துவமனைகளின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: “மகளிர் ஆரோக்கியம் என்பது, பெரும்பாலும் நோய் அல்லது சிகிச்சையின் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையான நல்வாழ்வு என்பது நோய் வராமல் தடுத்தல், விழிப்புணர்வுடன் இருத்தல் மற்றும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தங்கள் ஆரோக்கியத்தின் மீது தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை பெண்கள் உணருமாறு செய்வதாகும். இந்த மகளிர் நலவாழ்வு மையத்தின் மூலம், நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சைகளை ஒருங்கிணைத்து, ஒரு அமைவிடத்தின் கீழ் நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் பெண்கள் சௌகரியமாகவும், மரியாதையுடனும், ஆதரவாகவும் உணரக்கூடிய சூழலையும், அமைவிடத்தையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த மையம், தங்கள் ஆரோக்கியத்திற்குப் பெண்கள் தயக்கமின்றி முன்னுரிமை அளிக்க ஊக்குவிக்கும்; மேலும் கனிவான, சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சை எப்போதும் எளிதாக இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.”
இந்த மகளிர் நலவாழ்வு மையத்தின் மருத்துவக் குழுவில் டாக்டர் மீனா உமாசந்தர் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் ஸபீஹா T S (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் வைஷ்ணவி லக்ஷ்மன் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் – சிறுநீர்ப்பை மருத்துவம்), டாக்டர் அனிதா S (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் ஸ்ருதி ஸ்ரீதர் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் அனு ரமேஷ் (முதுநிலை ஆலோசகர், சிறுநீர் பாதையியல்), டாக்டர் சாந்தி (பொது அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் அருள்மொழி மங்கை (ஆலோசகர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை), மற்றும் டாக்டர் கீர்த்தி (இணை ஆலோசகர், மார்பக அறுவை சிகிச்சை) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மகளிர் நலவாழ்வு மையத்தின் மூலம், காவேரி மருத்துவமனை மகளிர் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்கிறது. பெண்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெறவும், நோய்த்தடுப்புப் பராமரிப்பை மேற்கொள்ளவும் மற்றும் முழுமையான சுகாதார சேவைகளை ஒரு அமைவிடத்தின் கீழ் எளிதாக அணுகிப் பெறவும் உதவும் நோக்கத்துடன் மகளிர் நலவாழ்வு மையம் நிறுவப்பட்டுள்ளது.