சென்னை, நவம்பர் 8: சென்னை மார்பக மையம் (Chennai Breast Centre) சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘எங்கள் உற்சவ்’ நிகழ்வில் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த 250-க்கும் மேற்பட்டோரும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
ஷரனா மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவக் கண்காணிப்பு, வாழ்க்கை முறை மாற்றங்கள், காப்பீட்டுத் திட்டங்களின் அவசியம் மற்றும் மார்பக மறுசீரமைப்பு சிகிச்சைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக சென்னை மார்பக மையத்தின் இயக்குநர் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா, வாழ்க்கை முறை மருத்துவ நிபுணரும், மகப்பேறு மருத்துவ ஆலோசகருமான டாக்டர் ஷீலா நம்பியார், சென்னை மார்பக மையத்தின் ஒட்டுறுப்பு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். வெங்கட் ராமகிருஷ்ணன், மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டாக்டர். எஸ். பிரகாஷ் உள்ளிட்டோர் விழிப்புணர்வு உரையாற்றினர்.
நிகழ்வில், டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா பேசியதாவது:
மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களில் பெரும்பாலானோர் வெளியே சொல்லாமல் பல கவலைகளை மனதுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு வாழ்கின்றனர். நோய் மீண்டும் நம்மை தாக்குமோ என்ற பயம் ஒருபுறம், தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்புக்கான பொருளாதார சூழல் குறித்த கவலை மறுபுறம் என உளவியல் ரீதியான சிக்கலுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். அதேபோன்று வாழ்க்கை முறை குறித்தும், மார்பக மறுசீரமைப்பு குறித்தும் பல குழப்பங்களும் அவர்களுக்கு உள்ளன. அவை அனைத்துக்கும் நிபுணர்களின் வழிகாட்டுதல் மூலம் தீர்வு காண்பேத இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்றார் அவர்.
தொடர்ந்து டாக்டர் ஷீலா நம்பியார் பேசுகையில், “ஒருவரது ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மட்டும் உறுதி செய்ய இயலாது. மாறாக, நோயாளிகளும் தங்களது நலன் காக்கும் நடவடிக்கைகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து, உடல் இயக்கம், போதிய உறக்கம், மன அழுத்தத்தைக் கையாளுதல் ஆகியவைதான் ஆரோக்கியம் பேணுவதற்கான உண்மையான அடித்தளங்கள். நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது மருத்துவர்களாக இருக்கலாம், ஆனால் உடல் நலனைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் ஆரோக்கியம் காப்பது நம் அனைவருடைய கடமை” என்றார்.
டாக்டர். வெங்கட் ராமகிருஷ்ணன் பேசுகையில், ” புற்றுநோய் பாதித்த மார்பகத்தை அகற்றிய பிறகு மேற்கொள்ளப்படும் மார்பக மறுசீரமைப்பு சிகிச்சையானது மருத்துவ ரீதியான நடவடிக்கை மட்டும் அல்ல. அது ஒரு பெண்ணின் உடலையும், உணர்வையும் ஒரு சேர மீட்டெடுக்கும் அத்தியாவசிய சிகிச்சை.
மேற்கத்திய நாடுகளில் 65% க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். துரதிருஷ்டவசமாக இந்தியாவில் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதாரக் காரணங்களாலும் 1%க்கும் குறைவான பெண்களே அந்த சிகிச்சை மேற்கொள்ள முன்வருகின்றனர். தற்போதைய மருத்துவ வளர்ச்சியின் பயனாக மார்பகங்களை அகற்றும்போதே, நோயாளியின் சொந்த திசுக்களைக் கொண்டு அதனை மறுசீரமைப்பு செய்யும் நுண் அறுவை சிகிச்சைகள் வந்துவிட்டன. அதுதொடர்பான புரிதல்தான் மேம்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் டாக்டர். எஸ். பிரகாஷ் பேசியதாவது: