தமிழகத்தில் ஸ்னூக்கர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்காக சென்னையில் அகாடமி துவங்குகிறார், முன்னாள் சர்வதேச வீராங்கனை நீனா பிரவீன்.
2010ம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்சூ நகரில் நடைபெற்ற ஆசிய கேம்ஸில் 8 பால் சாம்பியன்ஷிப்பிலும், 2013ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள இன்சியானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு கேம்ஸில் 6 ரெட் ஸ்னூக்கர் மற்றும் 9 பால் பூல் கேம் ஆகிய இரண்டிலும் பங்கேற்று விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்னூக்கர் வீராங்கனை நீனா பிரவீன்.
தென்கொரியாவில் 2 பிரிவு போட்டிகளில் விளையாடியதால், இந்தியாவிலிருந்து பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.
அதோடு 15க்கும் மேற்பட்ட உலக சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்று விளையாடியுள்ள நீனா பிரவீன், தனக்கு கிடைத்த அனுபவத்தின்மூலம் தமிழகத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்காக சென்னை வேளச்சேரியில் Ôசென்னை 147 ஸ்போர்ட்ஸ் அகாடமிÕ என்ற பெயரில் அகாடமியை துவங்குகிறார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலா¢ ஜெ.மேகநாதரெட்டி ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த அகாடமியை திறந்து வைத்தார்.
மொத்தம் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான இடத்தில் 3 ஸ்னூக்கர் டேபிள், 2 ஹே பால் டேபிள் மற்றும் 2 பூல் டேபிள் என மொத்தம் 7 டேபிள்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் அதிவேகமாக பிரபலமாகி வருவதும், பல வீரர், வீராங்கனைகளை ஈர்த்துவருவதும், ஏராளமான பரிசுத்தொகைகளை அள்ளித்தருவதுமான ஹே பால் விளையாட்டுக்கு தமிழகத்திலேயே முதன்முதலாக டேபிள் அமைத்து பயிற்சி கொடுக்கப்படுவது இங்குதான் என்று கூறினார் நீனா பிரவீன்.
விரைவில் ஒலிம்பிக்கிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஹேபால் விளையாட்டில் தமிழகத்தில் இருந்து ஒருவர் பதக்கம் வென்றுத்தர வேண்டும் என்பதே தனது இலக்கு என்று கூறுகிறார் நீனா பிரவீன்.
சென்னை 147 ஸ்போர்ட்ஸ் அகாடமியை துவக்கி வைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி பேசும் போது கூறியதாவது
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கி சாதனை புரியும் வீரர் வீராங்கனைகள் மீண்டும் விளையாட்டு துறைக்கு உதவிடும் வகையில் செயலாற்றுவது மிக மிக அரிது. அந்த வகையில் ஸ்னூக்கர் விளையாட்டில் சிறந்து விளங்கும் நீனா பிரவீன் இந்த விளையாட்டுக்கு பயிற்சி அளித்து சிறந்த வீராங்கனைகளை உருவாக்குவதற்காக இந்த அகாடமியை துவக்குவது பாராட்டுக்குரியது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு விளையாட்டு துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதற்கு தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் எடுத்து வரும் நடவடிக்கைகளே காரணமாகும்.
விளையாட்டு வீரர் வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4,600 பேருக்கு 160 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமன்றி வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசுப் பணிகளில் 3 சதவீதம் விளையாட்டு கோட்டாவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்லும் வீர வீராங்கனைகளுக்கு பல்வேறு உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்பதற்காக பீகார் சென்ற வீரர் வீராங்கனைகள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று கூட உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் 12 பேருக்கு தலா 2 லட்சம் வீதம் செலவினத்தொகை வழங்கப்பட்டது. இதில் கூட முதலில் 2, 3 பேர்கள் தான் விண்ணப்பித்தனர். ஆனால் இன்னும் சிலர் விடுபட்டது தெரிந்து அவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கான உதவிகளை நாங்களே ஓடி செய்தோம். சொல்லப்போனால் வீரர், வீராங்கனைகள் எங்களைத் தேடி வரும் நிலை மாறி, நாங்களே அவர்களைத் தேடிச் சென்று உதவும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவிலேயே இந்த மாதிரி தேடிச் சென்று உதவிகள் செய்யும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.