செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’

38

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமார் வித்தியாசமாக தோன்றுவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் ‘7 ஜி ரெயின்போ காலனி ‘, ‘ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள’ ( தமிழில் – ‘யாரடி நீ மோகினி’) ஆகிய காதல் படைப்புகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் காதல் திரைப்படமாக ‘மெண்டல் மனதில்’ உருவாகிறது என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே அழுத்தமான படைப்புகளை வழங்கி ரசிகர்களிடத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கும் இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் முதன்முறையாக ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பதால்.. ‘மெண்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.