கார்க்கி தமிழ்க் கழகம் மற்றும் சில்வர்சோன் அமைப்பு இணைந்து நடத்தும் “தமிழ் ஒலிம்பியாட் “

27

சென்னை, 19 அக்டோபர் 2024

கல்வியின் எதிர்காலம் 2024 எனும் மாநாடு ஐஐடி சென்னை ஆராய்ச்சிப் பூங்காவில் இன்று நடைபெற்றது. WASC மற்றும் AIAASC அமைப்புகளின் சார்பில் அமெரிக்கன் உலகப் பள்ளி ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் பாடலாசிரியர் மற்றும் தமிழ் மொழி ஆராச்சியாளர் மதன் கார்க்கி மற்றும் அவரது மனைவி நந்தினி கார்க்கி ஆகியோர் இணைந்து தங்கள் கார்க்கி தமிழ்க் கழகம் (Karky Tamil Academy) எனும் அமைப்பை அறிமுகம் செய்தனர்.

பள்ளிகளில் வேதியல் இயற்பியலுக்கு ஆய்வகங்கள் இருப்பது போல் முதன் முதலாக தமிழ் ஆய்வகம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் மொழியை மாணவர்கள் ஆர்வத்தோடு பயிலும் வண்ணம் மென்பொருள் கருவிகள், தமிழ் சொல் மற்றும் இலக்கண விளையாட்டுகள், தமிழ் வழியாக உலக அறிவு, பாடல்கள், கதைகள், நூல்கள், போட்டிகள் என்று இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பல்வேறு பள்ளிகளில் இந்த ஆய்வகம் தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்வின் முக்கியமான அறிவிப்பாக உலகின் முதல் ‘தமிழ் ஒலிம்பியாட்’ துவங்கப்பட்டது. ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற துறைகளுக்கு நடத்தப்படும் உலகளாவிய ஒலிம்பியாடை உலகெங்கும் உள்ள தமிழ் மாணவர்கள் எழுதும் வண்ணம் கார்க்கி தமிழ்க் கழகமும் Silver Zone அமைப்பும் இணைந்து இந்த தமிழ் ஒலிம்பியாடை நடத்துகின்றன.

தமிழ்நாடெங்கும் இருந்து வந்திருந்த பள்ளிகளின் மாணவர்களின் முன்னிலையில் ‘தமிழ் ஒலிம்பியாட்’ அறிமுகம் செய்யப்பட்டது. மாணவர்களின் பலத்த கைதட்டலுக்கிடையில் இந்த அறிமுகம் நிகழ்ந்தது. WASC மற்றும் AIAASC அமைப்பின் நிர்வாகிகள் கல்வியாளர்கள் முனைவர் மோகனலட்சுமி, முனைவர் செந்தில், மற்றும் குமரேஷ் அவர்களோடு இணைந்து மேடையில் மதன் கார்க்கியும் நந்தினி கார்க்கியும் அறிவிப்பை வெளியிட்டனர்.

ஃபியூச்சர் ஆஃப் எஜ்ஜுகேஷன் மாநாட்டில் கல்வியின் எதிர்காலம் குறித்து, பயிற்று முறை, உணவு, தேர்வு முறை போன்ற பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்கள் உரையாற்றினர். சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு தமிழின் மீதும் அறிவின் மீதும் ஆர்வத்தைத் தூண்டவேண்டும் என்ற நோக்கில் கார்க்கி தமிழ்க் கழகம் தமிழ் ஆய்வகங்கள் மற்றும் தமிழ் ஒலிம்பியாடுக்கான பணிகளை மேற்கொள்கிறது.