நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

42

நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் …

நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், இந்த மேடை எனக்கு மிக மிக முக்கியமான மேடை. ரொம்ப ரொம்ப எமோஷனல் ஆக உள்ளது. ஒரு புதிய முகத்திற்கு இவ்வளவு பெரிய கேரக்டர் தருவது, மிகப்பெரிய விசயம், ஆனால் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை எனக்கு தந்தார் இயக்குநர் சரவணன் சார், அவருக்கு நன்றி. திரைத்துறைக்கு வந்த பிறகு, இது மிகப்பெரிய இண்டஸ்ட்ரி, இதில் தினமும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பது புரிந்தது. நான் இனிமேல் நாயகியாக நடிப்பேனா என்பது தெரியாது, ஆனால் என்றென்றைக்கும் இந்த திரைப்படம், என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கும், ஆதரவு தந்ததற்கும், அனைவருக்கும் என் நன்றிகள். சசிகுமார் சாரை, வேறு நிறைய படங்களில் ஹீரோவாக பார்த்திருக்கிறேன், ஆனால் கூட நடிக்கும் போது, மிக மிக எளிமையாக என்னிடம் பழகினார், நிறைய சொல்லித் தந்தார். மிக ஆதரவாக இருந்தார். அவருக்கு நன்றிகள். இந்த படத்தில் உடன் நடித்த அனைவருக்கும் எனது நன்றிகள். கண்டிப்பாக உங்களை இந்த படம் மகிழ்விக்கும், அனைவருக்கும் நன்றி.

Trident Arts ரவீந்திரன் பேசியதாவது…

இந்த படத்தை பற்றி எனக்கு முதலில் எதுவுமே தெரியாது. சசி சார் கூப்பிட்டு, சார் ஒரு படம் செய்திருக்கிறேன், வந்து பாருங்கள் என்றார். படம் ஆரம்பிக்கும் போது டைட்டில் கூட அப்போது ரெடியாகவில்லை, இது கமர்சியல் படம் இல்லை, வித்தியாசமான படம் பாருங்கள் என்றார். படம் பார்த்து அதிர்ந்து விட்டேன். தமிழ் சினிமாவுக்கு என, சில மரபுகள் இருக்கும், படம் ஆரம்பிக்கும் போது, கோயில், பசு மாடு, என காட்சி வைப்பார்கள், ஆனால் இந்த படத்தில் காலணியை குளோசப்பில் காட்சிபடுத்தி இருந்தார்கள். படம் முடிக்கும் போது எனக்கு அத்தனை பிரமிப்பாக இருந்தது, எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. உடனடியாக இந்த படத்தை நாம் தான் வெளியிடுகிறோம் என்று சொல்லி, ஒப்பந்தம் செய்து விட்டேன். ஒரு வாழ்வியலை சினிமாவாக கொண்டுவர, மிகவும் மெனக்கெட்டு, இப்படத்தை செய்துள்ளார்கள். படத்தில் யாருமே நடிகர்களாக இல்லை, ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்கள். சசிகுமார் அப்படியே உருக்கிவிட்டார். இத்தனை வருட சினிமா அனுபவத்தில் ஒரு திரைப்படத்தை பார்த்து, பிரமிப்பது புதிதாக இருந்தது. எங்களின் அனைத்து படத்திற்கும் தந்த ஆதரவைப் போல, இந்த படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஹெச். வினோத் பேசியதாவது…

நண்பர் இரா. சரவணன் இப்படத்தை பார்க்க சொல்லி, கடந்த சில மாதங்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன், அவரது முந்தைய படம் “உடன்பிறப்பே” மிகவும் மிகவும் எமோஷனலான படம், அதனால் அவர் படமே வேண்டாம் என, தவிர்த்து வந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது. நான் கிராமத்திலேயே வளர்ந்து இருந்தாலும், படம் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன், அந்த வகையில் இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது. சசிகுமார் பொருட்காட்சியில் வைக்கும் அளவு, சிறந்த மனிதர் என்பதாலோ, சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலோ, இதை சொல்லவில்லை, உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் இரா சரவணன் பேசியதாவது…

சினிமாவிற்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. முதல் இரண்டு படங்களுக்கு மேடை எதுவும் அமையவில்லை, இது இதுதான் எனக்கு முதல் மேடை, முதல் இரண்டு படங்களுக்கும் சேர்த்து பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் பேச வேண்டிய விசயங்கள் எல்லாவற்றையும், எல்லோரும் பேசி விட்டார்கள். அண்ணன் சீமான் எப்போது இந்த நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டாரோ, அப்போதே நந்தன் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக ஆகிவிட்டது. அண்ணன் அவர் நண்பர்களோடு, குடும்பத்தோடு, இந்த திரைப்படத்தை பார்த்து, பாராட்டிய அன்றுதான், நாம் ஒரு நல்ல திரைப்படத்தை செய்திருக்கிறோம், என்ற நம்பிக்கை வந்தது. அண்ணனுக்கு என் நன்றிகள்.

ஒரு படத்தின் பிசினஸ் என்பது பொண்ணு பார்ப்பது மாதிரி, பொண்ணு எவ்வளவு அழகாக இருந்தாலும், பெர்ஃபெக்ட்டாக இருந்தாலும், வரதட்சணைக்கு கூட்டி கேட்பதற்கு, ஏதாவது குறை சொல்லி பேசுவது தான் வழக்கம். அது போல் தான் படம் பார்க்க வருபவர்களும்.. பிசினஸுக்காக படம் பார்க்க வருபவர்களும், படம் பார்க்கும் போது சிரிக்க கூட மாட்டார்கள், ஆனால் Trident Arts ரவீந்திரன் சார் படம் பார்த்துவிட்டு, பிஸினஸ் பேசாமல், ஒன்றரை மணி நேரம் படத்தைப் பற்றிய என்னிடம் பேசினார். சார் படத்தின் பிசினஸ் என்று நான் ஆரம்பித்த போது, இந்த படத்தை நான் தான் வெளியிடுவேன் என்றார், சார் உங்கள் மனதுக்கு என் நன்றிகள்.

இந்த விசயத்தையும் சாத்தியப்படுத்தி தந்ததும் சசிகுமார் சார் தான். இந்த படத்தின் கதையை எழுதியபோது, வேறு சில ஹீரோக்களை மனதில் வைத்து தான் எழுதினேன், அவர்களை தேடித்தான் போனேன், ஆனால் நாம் மனதில் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடாது. ஆனால் எப்போதும் எனக்கு அண்ணனாக, முதுகெலும்புவாக இருக்கும் சசிகுமார் சார், சரி நான் செய்கிறேன் வா என்று என்னை அழைத்து சொன்னார். அந்த பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. ஆனால் என்னை நம்பி வந்த சசிகுமார் சாரை, நான் எவ்வளவு மரியாதையாக நடத்தி இருக்க வேண்டும், ஆனால் நான் அப்படி நடத்தவில்லை, இனிமேல் உதவியே செய்யக்கூடாது என அவர் நினைக்கும் அளவு, கொடுமைப்படுத்தினேன். அந்த அளவு படப்பிடிப்பின் கடைசி சில நாட்கள், அவரை பாடாய்படுத்தினேன். முழு மக்களின் கூட்டத்திற்கு நிறுத்தி அடி வாங்கவிட்டேன். முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரமாக மாறி, இந்த படத்திற்காக அவர் முழுதாக உயிரையே தந்து நடித்த தந்தார். உண்மைக்கும் துளியும் குறையாத அளவு எடுக்க வேண்டும் என்று தான் அப்படி நடந்து கொண்டேன்.

இந்த படத்தை நாங்கள் எடுத்தோம் என்றாலும், இந்த படத்தின் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு, இன்று இந்த மேடை வரை கொண்டு வந்தது, Think Music சந்தோஷ் அவர்கள் தான். அவர் எத்தனையோ பேருக்கு, நல்லது செய்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவர்தான் ஜிப்ரானையும் பரிந்துரைத்தார். நான் முதலில் இந்த படத்திற்கு இமான் அவர்களை அணுக வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் சந்தோஷ்.. ஜிப்ரான் மிகச் சரியாக இருப்பார் என்றார். அவர் எப்படியும் படம் பார்த்துவிட்டு முடியாது என்று தான் சொல்வார் என்று நினைத்துதான் படத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் படத்தை பார்த்த உடனே போன் செய்து, இந்த படத்தை கண்டிப்பாக நான் செய்கிறேன் என்று சொல்லி, மிக அற்புதமான இசையை தந்துள்ளார். என் படத்தை நானே பார்த்து பிரமிக்கும் அளவு, ஒரு இசையை அவர் தந்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். நண்பர் இயக்குநர் வினோத் இந்த படத்திற்கும், எனக்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவர் இருக்கும் சூழலில் இங்கு என்னை வாழ்த்த வந்ததற்கு நன்றிகள்.

நடிகை ஸ்ருதிக்கு இது முதல் படம் என்றாலும், நான் எழுதிய கதாபாத்திரத்தை, அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அந்த ஊர் மொழியை கூட அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

படத்தின் இரண்டாவது கதாநாயகன் பாலாஜி சக்திவேல். அவரிடம் சொல்லும்போது சார் இந்த படத்தில் நீங்கள் தான் நாயகன் என்று தான் சொன்னேன், முதல் பாடலே அவருக்கு தான் வைத்திருக்கிறேன், எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும், சிரித்த முகத்துடன் நிதானமாக இருங்கள் எனும் ஒரு மிகச் சிறந்த பண்பை, அவரிடம் கற்றுக் கொண்டேன்.

இப்படத்தை நான் நினைத்தபடி எடுக்க உதவியாக இருந்த ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், எடிட்டர் என அனைவருக்கும் என் நன்றிகள்

இந்தப் படத்துக்காக உழைத்து மறைந்து போன மூன்று பேரை இந்த இடத்தில் நினைவு கூறுகிறேன், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…

நந்தன் – ஒரு நல்ல கதையை நாம் எழுதிவிட்டால் போதும், அதுவே அதனை உருவாக்கிக் கொள்ளும், நாம் யாரையாவது நினைத்து எழுதியிருப்போம், ஆனால் அது முடிவு செய்வதுதான். அப்படித்தான் சசிகுமார் இந்த படத்திற்குள் வந்திருக்கிறார். அப்படித்தான் இந்த கதையில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் என்னையும் நடிக்கச் சொன்னார்கள், நன்றி மகிழ்ச்சி. முதல் இரண்டு படங்களில், இரா சரவணனுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அதை இந்தப் படம் நிவர்த்தி செய்யும்.

சசி என் நண்பன், அவனைப் பொத்தி பொத்தி பார்த்துக் கொள்வேன், ஆனால் இந்த படத்தில் அத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறான். நடிக்க தெரிந்தவர்கள் மத்தியில் சண்டை காட்சிகள் வைத்தால், பார்த்து நடந்து கொள்வார்கள், ஆனால் மக்கள் மத்தியில் விட்டுவிட்டால் அவர்கள் அடித்தேகொன்றுவிடுவார்கள், அது போல் தான் இந்த படத்திலும் நடந்தது, ஆனால் அவன் பட்ட கஷ்டத்திற்கெல்லாம், இந்த படம் அவனுக்கு பெருமை தேடித் தரும். நந்தனுக்கு முன் – நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான்.

சுருதி உங்களை இனி தமிழ்நாடு கொண்டாடும். சிறப்பாக நடித்துள்ளீர்கள். இந்த படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற தவிப்பு என்னிடம் இருந்தது, மிகச்சரியாக வந்து சேர்ந்தார் ரவீந்திரன் சார், மகிழ்ச்சி.

இன்றைய காலகட்டத்திலும் இது நடந்து கொண்டிருக்கிறது, அதை மாற்றி மனிதனாக மாற வேண்டும் என்பதுதான் இந்த திரைப்படம், இது சின்ன மாற்றத்தை ஏற்படுத்தினாலும், படத்தின் மிகப்பெரிய வெற்றி தான். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..

நண்பர் சந்தோஷ் தான் முதலில் போன் செய்தார், பின் இயக்குனர் வினோத்தும் இந்த படத்தை பார்க்க பரிந்துரைத்தார். அப்போதுதான் இந்த படத்தை பார்த்தேன், இந்த படத்தை பார்த்தவுடனே, இயக்குனர் சரவணனுக்கு ஃபோன் செய்து, இந்த படத்தை கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இந்த படம் கண்டிப்பாக பெரிய ஒரு தளத்திற்கு செல்லும், அதில் நாமும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்று தோன்றியது. கண்டிப்பாக இந்த படம் பேசும் அரசியல் முக்கியமானது, நான் இந்த படத்திற்குள் இருக்கிறேன் என்பதுதான் எனக்கு பெருமை, நான் எந்த உதவியும் செய்யவில்லை. படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது, இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத்தார்கள், நன்றி.

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் பேசியதாவது…

எங்களை வாழ்த்த பல வேலைகளுக்கு மத்தியில் இங்கு வந்திருக்கும் சீமான் அண்ணன் அவர்களுக்கும், இயக்குநர் வினோத் முதலான பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

இயக்குநர் சரவணனை எப்போது பார்க்கும்போதும் என் படத்தின் ஒரு வசனம் தான் எனக்கு ஞாபகம் வரும், ‘உங்க நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது, ‘ என்கிற வசனம் தான் அது. உண்மையிலேயே சரவணன் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குடும்பம் குழந்தை என அனைத்தையும் விட்டுவிட்டு, சென்று நிற்பவர் தான் சரவணன், இப்போது அவர் பின்னால் நிற்பவர்கள் பார்க்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

இயக்குநர் பின்னால் எப்போதும் துணையாக நிற்பது அவர் மனைவி கலா அக்கா தான், அவர் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு வந்து, இந்த படத்திற்காக பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தார். நாங்கள் பட்ட கஷ்டத்தை எல்லாம் விட, அவர் பட்ட கஷ்டம் தான் அதிகம். அதையெல்லாம் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும், நாங்கள் பட்ட கஷ்டத்திற்கு பின்னால் விருதுகளே கிடைக்கும்.

இந்த படத்தை முதலில் நான் தயாரிப்பதாக தான் இருந்தது, அப்போது நான் நான்கு நாட்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன் ஆனால் இறுதியில் நான் நாயகனாக மாறிவிட்டேன். முதலில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் தான் நான் நடிப்பதாக இருந்தது, பின்னால் அவர் படும் கஷ்டத்தை பார்த்து, நானே செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

உங்களை வேறு மாதிரி பார்க்கிறேன், எப்படி இந்த கேரக்டரில் கஷ்டப்படுத்துவது என தயங்கினர், ஆனால் நான் அவரை சமாளித்து, நடித்திருக்கிறேன். எங்கள் படத்தை நாங்களே நன்றாக இருக்கிறது என்று சொல்வதை விட , நீங்கள் பார்த்து சொல்லுங்கள், இந்த திரைப்படம் உங்கள் எல்லோரையும் கண்டிப்பாக திருப்தி செய்யும்.

இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற போது, நான் யோசித்தது ரவி சாரை தான், அவர் மிக கறாராக இருக்க கூடியவர். ஆனால் அவரே படத்தை துளி துளியாக ரசித்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி கண்டிப்பாக மக்கள் எல்லோரும் ரசிப்பார்கள். அனைவருக்கும் நன்றி.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியதாவது….
இன்று நந்தன் இசை வெளியீடு, இறைவனைக் காண இசை பாடல் பாடிய வரலாறு நம்மிடம் இருக்கிறது. ஆனால் இந்த இசை வெளியீடு, இறைவனைக் காண அல்ல, மனிதனைக் காண !. மனிதனைக் காண்பதற்கு வெளியிடும் இசைதான் இந்த நந்தன். நாம் ரசிப்பதற்கு அல்ல, இந்த இசை, நாம் ஆழ்ந்து யோசிப்பதற்குத் தான் இந்த இசை. இந்த இசையை உருவாக்கி இருக்கும் நண்பர் ஜிப்ரானுக்கு என் வாழ்த்துக்கள்.

ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான், நாம் பார்த்த பிறகும் நம் மனதில் தாக்கத்தை உருவாக்கும் படி இருக்கும். அப்படி ஒரு திரைப்படத்தைத் தான் நம் நண்பர் நம் இயக்குநர் இரா சரவணன் உருவாக்கி இருக்கிறான். பல நூறு ஆண்டுகளாக இந்த இனம் தூக்கிச் சுமந்து வரும் வலியை, திரை மொழியில் பதிவு செய்து இருக்கிறான் இரா சரவணன்.

இந்தப்படம் மிகப்பெரும் தாக்கத்தைப் பார்த்த பிறகும் இன்றும் தந்துகொண்டு இருக்கிறது. என் தம்பி சசி நடித்த அயோத்தி திரைப்படத்தைப் பார்த்து நான் பாராட்டி இருந்தேன். அந்த திரைப்படத்தில் அவன் சசியாகவே இருந்தான், ஆனால் இந்த நந்தன் திரைப்படத்தில் முதல் காட்சியிலிருந்தே கூழுப்பானையாகவே மாறி இருக்கிறான் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான். அப்படி ஒரு உடல் மொழி, அருமையான உச்சரிப்பு, அவ்வளவு அருமையான நடிப்பு, அதே போல் மிகச்சிறப்பான நடிப்பை, வழங்கி இருக்கிறார் நடிகை ஸ்ருதி. அவர் நடிப்பும் கண்டிப்பாகப் பேசப்படும். அதேபோல் மிக முக்கியமான பாத்திரத்தில் நண்பன் சமுத்திரகனி மிக அருமையாக நடித்து இருக்கிறான். படத்தை தாங்கி நிற்கும் தூணாக மிக முக்கியமான பாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார்.

மிக அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார் ஜிப்ரான், ஒருவர் கூட ஒரு சிறு முகச்சுழிப்பை கூட தவறாக நடிக்கவில்லை, அத்தனை அற்புதமாக நடித்துள்ளனர்.

மனதைத் தாக்கும் மிக நல்ல படைப்புகளை பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற ஆளுமைகள் வழங்கி வந்தார்கள். இப்போது அப்படியான படைப்புகள் வருவதே இல்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் ஒரு சிறந்த படைப்பாக இந்த திரைப்படம் வந்திருக்கிறது. மிக அருமையாக நாம் வாழும் நிலத்தின் கதையை வழங்கி இருக்கிறான் சரவணன். வலியின் மொழி தான் இந்த திரைப்படம், வலி உங்களுக்குப் புரிந்தால் இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு ஒரு ஆகச் சிறந்த படைப்பு, என் தம்பிகள் இணைந்து மிகச் சிறந்த படைப்பை வழங்கியிருக்கிறார்கள். அவனோடு இணைந்து ஒத்துழைத்து, இப்படைப்பை வழங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.