நடிகை சங்கீதா கல்யாண் குமார், வெளிவரவிருக்கும் ‘பராரி’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளார்!

54

‘பக்கத்து வீட்டு பெண்’ என்ற உணர்வை சில நடிகைகளே பார்வையாளர்களுக்கு தருவார்கள். இதில் நடிகை சங்கீதா கல்யாண் குமாரும் ஒருவர். சந்தானம் நடிப்பில் வெளியான ‘80ஸ் பில்டப்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ராஜு முருகனின் தயாரிப்பில் எழில் பெரியவாடி இயக்கிய ‘பராரி’ படத்தில் தனது இயல்பான தோற்றத்தால் ரசிகர்களின் ஆர்வத்தை கவர்ந்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. டிரெய்லரில் அவரது அற்புதமான திரை இருப்பு, நடிப்பு ஆகியவை கவனம் ஈர்த்துள்ளது. படம் வெளியான பிறகு நிச்சயம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷனை பட்டப்படிப்பாக முடித்த இவர் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் பற்றிய விசாலமான பார்வையைப் பெற்றிருக்கிறார். சென்னையை சேர்ந்த இவர் சினிமா மற்றும் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்.

ஒரு நடிகை ’ஹீரோயினா’க மட்டுமே படத்தில் வர வேண்டும் என்ற அவசியமில்லை. கதைக்கு தேவைப்படும் வலுவான கதாபாத்திரங்களிலும் நடிக்கலாம் என்கிறார் சங்கீதா. வெற்றிமாறன், செல்வராகவன், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் பல நடிகைகளுக்கு இதுபோன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களை கொடுத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தனது கனவு என்கிறார்.

மேலும் அவர் தனது கனவு கதாபாத்திரம் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “’கார்கி’, ’மகாநடி’ (நடிகையர் திலகம்), ’அருந்ததி’, ’சீதா ராமம்’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தத் திரைப்படங்கள் ஒருபோதும் பழையதாகாது. வருடங்கள் செல்லச் செல்ல இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். இந்தப் படங்களில் நடிகைகள் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஷெட்டி மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் இந்தப் படங்களில் மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கின்றனர். எந்த நடிகைக்கும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். எனக்கும் இருக்கிறது” என்றார்.