பிரேமிள் கலையகம் வழங்கும் இயக்குநர் தங்கம் தயாரித்து இயக்கிய ‘பிரேமிள்’ விவரணப்படத்தின் முன்னோட்டம் & திரையிடல்

66

ஈழத்து எழுத்தாளர், கவிஞர், நவீன இலக்கிய மரபின் முன்னோடி பிரமிள் குறித்த முழு விவரணப்படத்தை பிரேமிள் கலையகம் சார்பில் தயாரித்து இயக்கி வருகிறார் இயக்குநர் தங்கம். அதில் இடம்பெறும் ஒருசில நிமிட பகுதியை விரித்து 32 நிமிட விவரணப்படமாக உருவாக்கியிருந்தார் இயக்குநர் தங்கம்.

இவ்விழாவில் நடிகர் திருமுருகன்
பேசும்போது,
————————————————-
“பிரமிளை கவிஞர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அவர் ஆகச்சிறந்த விமர்சகராக இருந்திருக்கிறார்; பிரமிள் எந்த நிலத்திற்கு சொந்தக்காரர் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அவர் தமிழர்களுக்கு சொந்தக்காரர்! அவர் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்படுவது அவசியமாகும். ஏனென்றால், அது நியாயமான கோரிக்கையே. அவர் தமிழகத்தில் குடியுரிமை பெற்றிருந்தார்; தமிழ் ஈழத்தின் தேசியக்கவியாக இருக்கிறார். தமிழ் ஈழ பிரச்சனைகளின் வலியை உணர்ந்து போராளிகளின் ரத்தம் சொட்டும் உணர்வுகளை பேனா மைகளில் நிரப்பி எழுதிய அவரது கவிதைகளும், அதை காட்சித் துண்டுகளாக சேகரித்து தங்கம் உருவாக்கியுள்ள பிரேமிள் விவரணப்பட முன்னோட்டமும் உணர்வுபூர்வமாக இருந்தது.” என்றார்.

எழுத்தாளர் அரவிந்த்குமார் பேசும்போது,
—————————————————–
“வடசென்னை வரலாற்றை மீனவர்களின் பார்வையை வைத்து ஒரு நூலாக எழுதிக் கொண்டிருந்த அந்நேரத்தில் பட்டினத்தாரில் தொடங்கி வள்ளலாரிடம் என் தேடல் முடிந்தது. அத்தேடலின் நீட்சியாய் நான் கண்டடைந்த தங்கம் இயக்குனர் தங்கம். ஒரு நீண்ட நெடிய தமிழ்க்கவி மரபில் பிரமிளுக்கான இடம் என்ன என்பதை எனக்கு அறிமுகப்படுத்தியவர் தங்கம்தான். அவருடனான உரையாடல்களில் எனக்கு மிகவும் புதிதான சில சொல்லாடல்களான ‘தெற்காசிய சதுரங்கம்’ போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் நான் இவையெல்லாம் கற்பனைகள் என மறுத்தபோது, இந்திய கிழக்கத்திய மெய்யியல் மரபு எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது? யாரெல்லாம் அதில் முக்கியமானவர்கள்? அதில் பிரமிளுக்கான இடம் என்ன? என்பதை தங்கம் எனக்கு எடுத்துரைத்தார். அதுவரை பிரமளை நான் ஒரு கவிஞராக தான் நினைத்தேன். மிக நீண்ட தொடர்ச்சியான உரையாடலுக்குப் பின் நான் மீண்டும் பிரமிளை மறுவாசிக்கு உட்படுத்தியபோதுதான் சில உண்மைகளை உணர்ந்தேன்.” என குறிப்பிட்டார்.

பிரேமிள் விவரணப்பட இயக்குநர் தங்கம் பேசும்போது..
——————————————–
“அரசியல், கலை, இலக்கிய உலகில் பிரமிளால் உருவாக்கப்பட்டவர்கள் வரும்போது தமிழ் இனத்திற்கு தேவையான எல்லா தீர்வுகளும் கிடைக்கும். அந்த அடிப்படையில் ‘பிரேமிள்’ விவரணப்படத்தின் முன்னோட்டம் நடத்தப்படுகிறது. ரஷ்யன் எம்பசியில் ஒரு நிகழ்வு நடத்துகிறார்கள். Pages of Wind (காற்றின் தீராத பக்கங்களில்) எனப்படும் பிரமிளின் புத்தக வெளியீடு ரஷ்யன் எம்பசியில் வெளியிடுகிறார்கள். தமிழின் விவரணப்படத்தை நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே அவர் பற்றிய இந்நிகழ்வும் எமது நோக்கம் 4 நிமிட அளவிலான காட்சி தொகுப்பு மட்டுமே. ஆனால் லயம் பதிப்பாளர் கால சுப்பிரமணியம் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 32 மணி நிமிட காட்சித் தொகுப்பாக இவ்விவரணப் படத்தை கொண்டுவந்திருக்கிறோம்.” என்றார்.

இயக்குநர் வ.கௌதமன்
பேசும்போது
———————————————
, “20 வயதில் தமிழ்நாட்டுக்கு வந்து 1960 முதல் கவிதை, சிறுகதை, நாவல், ஓவியம், சிற்பம், விமர்சகராக ஆன்மீக படைப்பாளியாக, ஜோதிடராக என இயங்கியுள்ளார் பிரமிள். இப்படி உலகில் எந்த கலைஞனும் பன்முகத்துடன் இல்லை. இப்படி ஒரு பெரும் கவிஞன் ஏன் திரிகோண மலையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். இயற்கை துறைமுகம் உள்ள உலகத்தின் மூன்று இடங்களில் ஒன்றான திரிகோணமலைக்காக தான் ஈழம் அழிக்கப்பட்டது.‌ திரிகோணமலையிலிருந்து 1960களில் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த பிரமிள், தன் இனம் குதறப்பட்டதை கதறி கதறி பதிவு செய்திருக்கிறார். இதை நினைவூட்டும் பிரமிளின் கவிதை ஒன்றில், ஜூலை கலவரத்துடன் தொடர்புபடுத்திய புகைப்படத்தை பிரேமிள் விவரணப்படத்தில் தங்கம் காண்பித்திருக்கிறார்.

ஈழத்தமிழன் தமிழ்நாடு தம்மை காப்பாற்றும் என நம்பினான். ஆனால் தமிழ்நாடு அவனை கொன்று புதைத்தது தான் உண்மை வரலாறு. அதனால் அந்த இனம் தலைநிமிரவும் நிம்மதியாக அந்த மண்ணில் வாழவும் நாம் தான் போராட வேண்டும்.தமிழினம் ஒன்றாக நிற்பதற்கு முதலில் ஆரியம் விடவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி அதிகாரத்தை ருசித்து கொண்டு வருகிற திராவிடம் விடவில்லை. பிரமிள் திராவிடத்தின் மிக முக்கியமான ஆளுமை என்று அவரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். எங்களுக்கு எதற்காக வண்ணம் பூசுகிறீர்கள்? எங்களுடைய வண்ணம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் கருப்பு தான். எங்களை ஏன் சிவப்பு என்கிறீர்கள்? மஞ்சள் என்கிறீர்கள்.. நீலம் என்கிறீர்கள்.. பச்சை என்கிறீர்கள்.. எதற்கு இந்த வண்ணங்களை பூசுகிறீர்கள்?

ஆண்டாளை ஆரியத் தாய் என்று ஒரு நேரத்தில் கொண்டாடினார்கள். சமஸ்கிருதம் தான் உன்னதமான பாஷை; தமிழ் நீச பாஷை; சமஸ்கிருதத்துக்கு கீழானது தமிழ் என்று சொன்னவர்கள் எதற்கு எங்கள் ஆண்டாளை கொண்டாடினீர்கள்? எங்கள் ஆண்டாள் எதில் பாடினாள்? தமிழில் தானே? என்று பேசினார்.