‘கெவி’ படத்திற்காக தேனிசை தென்றல் தேவா பாடிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’

90

ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம் சங்கரபாண்டியன், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தை சுற்றி, அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஜி.பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார்.

படத்தின் முக்கியமான காட்சியில், கதைக்களத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை சொல்லும் விதமாக,

“மா மலையே – எங்க மலைச் சாமியே ஓம் மடியில் – எங்க உசுரு கெடக்குதே
இத்துப்போன சாதிசனம் என்னைக்காச்சும் வாழுமா?
மூங்கில் மரத்துல – உள்ள முள்ளு பழுக்குமா?”

என்கிற ஓபனிங் பாடல் ஒன்றை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார்.

இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இன்னும் வெளியாகாத நிலையில் இந்தப்பாடலால் ஈர்க்கப்பட்ட கவிப்பேரரசு வைரமுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடல் வரிகளை ஒரு வீடியோவுடன் பகிர்ந்து கொண்டு

“மலைவாழ் பழங்குடி மக்களின் துயரப் பாடலொன்று..
காட்டுமுள் கிழித்த மாமிசத்தில் வழியும் இரத்தம்..
தேவா உயிர்கலந்து பாடினார் ஒலிப்பதிவில் உடனிருந்தேன்..
பாலசுப்ரமணியம் இசை.. தமிழ் தயாளன் இயக்கம்..”

என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் தமிழ் தயாளன் கூறும்போது, “இந்த கதைக்கு ஏற்ற வகையிலும் அதேசமயம் ஒட்டுமொத்த மலைவாழ் மக்களின் வாழ்க்கையை சொல்லும் விதமாகவும் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என நினைத்தோம். இதற்கான அற்புதமான வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து கொடுத்தார். இந்த பாடலை எழுதி முடித்ததுமே இது மலைவாழ் மக்களின் கீதமாக இருக்கும் என கவிப்பேரரசு வைரமுத்து கூறினார். அதற்கேற்ப இந்த பாடல் கேட்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, நம்மை சேர்ந்த ஒருவர் இதை பாடுகிறார் என எண்ண வைக்கும் விதமாக இருக்கவேண்டும் என்பதற்காக தேனிசை தென்றல் தேவாவை இந்த பாடலை பாடும்படி கேட்டுக் கொண்டோம். அவரும் முற்றிலும் வித்தியாசமான பாணியில் இந்த பாடலை பாடியுள்ளார்.

கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே கிட்டத்தட்ட 110 நாட்கள் தங்கி இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். எங்களது மூன்று வருட தவம் இந்த படம் என்று சொல்லலாம். இந்த பாடல் வெளியாகும்போது நிச்சயமாக மலைவாழ் மக்களின் கீதம் என சொல்லும் விதமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்பது உறுதி” என்று கூறுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பாளர் ; பெருமாள் G – ஜெகன் ஜெயசூர்யா

இணை தயாரிப்பாளர்கள் ; ஜெக சிற்பியன், வருண்குமார், ஆதவன், உமர் ஃபரூக், மணி கண்ணன்

எழுத்து – இயக்கம் ; தமிழ் தயாளன்

பாடல் ; கவிப்பேரரசு வைரமுத்து

பாடகர் ; தேனிசைத் தென்றல் தேவா

இசை ; பாலசுப்பிரமணியன் ஜி

ஒளிப்பதிவு ; ஜெகன் ஜெயசூர்யா

படத்தொகுப்பு ; ஹரி குமரன்

சண்டை பயிற்சி ; டான் அசோக்

வசனம் ; ராசி தங்கதுரை, கிருபாகரன் ஏசய்யா

மக்கள் தொடர்பு ; A. ஜான்