இரத்த தானம் செய்த ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டி, விருந்தளித்து மகிழ்ந்த நடிகர் கார்த்தி

88

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க இரத்த தானம் முகாம்கள் நடைபெற்றது. இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் முதற்கட்டமாக வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 ரசிகர்களை நடிகர் கார்த்தி ஞாற்றுக்கிழமை அன்று நேரில் சந்தித்தார்.

சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன்பின் நடிகர் கார்த்தி பேசும் போது, “அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது பிறந்தநாளில், இரத்த தானம் செய்த போதே, உங்களுடன் கலந்து கொள்ள நினைத்தேன். எனினும், உடல்நிலை சரியில்லாததால் கலந்து கொள்ள முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் உங்களுடன் இணைந்து கொள்வேன். நீங்கள் அனைவரும் இரத்தம் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.”

“நான் மருத்துவர்களுடன் குழுவில் இருக்கிறேன். அவர்கள் இரத்தம் இல்லை என்று கூறுவதை கேட்டிருக்கிறேன். முக்கியமாக அரசு மருத்துவமனைக்கு பெரிய அளவில் யாரும் இரத்தம் கொடுப்பதில்லை. அவரவர் தங்களின் உறவினர்களுக்கு கொடுத்துக் கொள்வார்கள்.

யாரென்றே தெரியாதவர்களுக்கு இரத்தம் கொடுத்துள்ளீர்கள். அது சாதாரண விஷயமே கிடையாது. அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் அரசு மருத்துவமனையில் செய்ததற்கு நன்றி. அடுத்த வருடம் உங்களுடன் இணைந்து முதலில் நான் துவங்கி வைக்கிறேன்.”

“அனைவரும் உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். நாம் செய்த நல்ல விஷயங்கள் அவர்களுக்கு சென்று சேர வேண்டும். அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.”

“இரண்டு படங்கள் முடிந்துவிட்டன, விரைவில் அவை ரிலீஸ் ஆகிவிடும். அடுத்து சர்தார் 2 துவங்க இருக்கிறது. அடுத்த வருடம் லோகேஷூடன் மீண்டும் பிரியாணி பக்கெட்டை எடுக்க வேண்டும்,” என்றார்.