முத்தமிழ் படைப்பகம் AJ பிரபாகரன் பெருமையுடன் வழங்கும், பிரபுதேவா நடிக்கும் “சிங்காநல்லூர் சிக்னல்” இன்று இனிதே துவங்கியது !!

97

முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர்  AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி என்டர்டெயினராக உருவாகும் “சிங்காநல்லூர்  சிக்னல்” படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது.

ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இளமைத் துள்ளலுடன்  சேட்டைகள் செய்யும், துறுதுறு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பிரபுதேவா நடிப்பில் வெளியான “மனதை திருடிவிட்டாய்” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கிறது.

கோலாகலமாக நடந்த படத்தின் பூஜையை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்…

முத்தமிழ் படைப்பகம் சார்பில் AJ பிரபாகரன் பேசியதாவது…
எங்களது லேபில் படைப்புக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கும், வரவேற்பிற்கும் நன்றி. லேபில் வெற்றியைத் தொடர்ந்து, ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்கும் நோக்கத்தில், இப்படத்தை உற்சாகமாகத் துவங்கியுள்ளோம். இப்படத்தில் நடனப்புயல் பிரபு தேவா அவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். அவர் ஆடினால் ரம்பா, ஊர்வசியே மயங்குவார்கள், நாமும் மயங்குவோம். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது எங்கள் கனவு. இயக்குநர் JM ராஜா இப்படத்தை இயக்கவுள்ளார். இசை ராஜா யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பவ்யா நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீமன் முக்கிய ரோலில் நடிக்கிறார். படம் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும். எல்லோருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது…
“சிங்காநல்லூர்  சிக்னல்”  படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள், தயாரிப்பாளர் நல்ல தமிழில் அழகாகப் பேசினார். இந்தப்படத்தில் புதிய இயக்குநராக  JM ராஜாவை அறிமுகப்படுத்துகிறார்கள். திரைத்துறையில் புதிதாகத் திறமையாளர்கள் வருவது நல்லது. இந்தப்படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசியதாவது…
மாஸ்டர் கமலஹாசன் மிஸ்டராகிவிட்டார் ஆனால் பிரபு தேவா மட்டும் இன்னும் மாஸ்டராகவே இருக்கிறார். முத்தமிழ் படைப்பகம் என் வீடு மாதிரி, மிக மிக நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். பிரபு தேவா சார், சமீபத்தில் நான் நடித்த படத்தில் மிகவும் உதவியாக இருந்தார். அவர் நடனப்புயல் மட்டுமில்லை, இயக்குநர் புயலும் தான். இந்தப்படத்தில் பணியாற்றும் அனைவருக்கும்  வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர், நடிகர் PL தேனப்பன் பேசியதாவது,
“சிங்காநல்லூர்  சிக்னல்”  படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். என்னை நடிக்க அழைத்தார்கள். இயக்குநர் எனது நெருங்கிய நண்பர், இந்தக்கதையை என்னிடம் சொல்லியுள்ளார். படம் கண்டிப்பாக நன்றாக வரும். என்னை நடிக்க அழைத்ததால் வந்தேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், நன்றி.

நடிகர் ஸ்ரீமன் பேசியதாவது…
“சிங்காநல்லூர்  சிக்னல்”   இந்த சிக்னல் எப்போதும் க்ரீனாகத்தான் இருக்கும், இன்று சினிமா இருக்கும் சூழ்நிலையில்,  தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் நிலையில், இப்படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ள பிரபாகரன் சாருக்கு நன்றி. அவர் படமெடுத்தால் கண்டிப்பாகத் திரைக்குக் கொண்டு  வந்துவிடுவார். மாஸ்டர் பிரபுதேவா, அவர் பாடலே பான் இந்தியா வெற்றி பெற்றது. நமக்கு பெருமை தேடித்தரும் மாஸ்டர், அவருடன் இது எனக்கு ஐந்தாவது படம் மகிழ்ச்சி. இயக்குநர் கதை வசனம் நிறைய எழுதியுள்ளார். 12 வருடமாக சினிமாவில் இருக்கிறார். கண்டிப்பாக இந்தப்படத்தை வெற்றிப்படமாக இயக்குவார். எல்லோருக்கும் நன்றி.

நடிகர் சுப்பு பஞ்சு பேசியதாவது…
முத்தமிழ் படைப்பகம் அவர்களுடன் லேபிலில் பணிபுரிந்தேன். மிகச் சிறப்பான தயாரிப்பு நிறுவனம், சொன்ன மாதிரி கச்சிதமாக நடந்து கொள்வார்கள். கண்டிப்பாக நல்ல படைப்பைத் தருவார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகை பவ்யா ட்ரிக்கா பேசியதாவது…
முத்தமிழ் பதிப்பகத்திற்கு என் நன்றிகள். வாய்ப்பு தந்த இயக்குநர் ராஜா சாருக்கு நன்றி. பிரபுதேவா சாருடன் நடிக்க வேண்டும் டான்ஸ் ஆட வேண்டும் என்பது என் கனவு. இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ரொம்ப நல்ல டீம், கண்டிப்பாக நல்ல படைப்பைத் தருவோம் நன்றி.

இயக்குநர் JM ராஜா பேசியதாவது…
எல்லா உதவி இயக்குநர் வாழ்க்கை போலத்தான் என்னுடையதும், கையில் பவுண்டோடு சுத்திக் கொண்டிருந்த போது கேமராமேன் பன்னீர்செல்வம் சார் பிரபு தேவா சாரிடம் கூட்டிட்டுபோனார், என் திரைக்கதையைப் படித்து விட்டு ஒகே சொன்னார் பிரபு தேவா சார். தயாரிப்பாளருக்காக அலைந்தோம், காம்பொ இயக்குநர்களைத் தேடும் சினிமாவில்,  என்னுடைய கதையை பிரபாகரன் சார் படித்துவிட்டு, ஓகே சொன்னார். மேஜிக் மாதிரி இப்படம் நிகழ்ந்தது. முழுக்க முழுக்க சிரித்து மகிழும் என்டர்டெயினராக இப்படம் இருக்கும். உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள் நன்றி.

நடிகர் பிரபுதேவா பேசியதாவது…
இங்கு நீண்ட காலம் கழித்து உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. இங்குள்ள பலரை எனக்கு பர்ஸனலாகத் தெரியும், எல்லோருடனும் படம் செய்துள்ளேன், ஸ்ரீமன் பல வருடமாக என் ஃபிரண்ட், அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் பற்றி எல்லோரும் சொன்னார்கள், இந்த கம்பெனியில் நாலைந்து படம் செய்தால் நன்றாக இருக்கும் என வேண்டிக்கொண்டேன். மிக கச்சிதமாகத் திட்டமிடுகிறார்கள். மிக நல்ல தயாரிப்பு நிறுவனம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பவ்யா ட்ரிக்கா நாயகியாக நடிக்கிறார். லேபில் வெப் தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஹரி சங்கர், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, ஹரிசங்கர், நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிஃபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீ ரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, PL தேனப்பன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைக் கோவையில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு : முத்தமிழ் படைப்பகம்
தயாரிப்பாளர்: A J பிரபாகரன்
இயக்குநர்: J M ராஜா
ஒளிப்பதிவாளர்: தினேஷ் கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
எடிட்டர்: பிரதீப் E ராகவ்
கலை இயக்குனர்: சம்பத் திலக்
சண்டைக்காட்சி : சக்தி சரவணன்
ஆடை வடிவமைப்பாளர்: அஞ்சு ஸ்ரீ
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஹரி சங்கர்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM