‘டீசல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

10

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட், “‘கட்டா குஸ்தி’ படத்திற்கு பின்பு ஒப்பந்தமான படம் இது. படம் எல்லாம் முடிந்து ரீலீஸ் ஆக பல நாட்கள் ஆகிவிட்டது. என்னுடைய முதல் படமான ‘அங்காடித்தெரு’, ‘மதகஜராஜா’ எல்லாம் படப்பிடிப்பு முடிந்தும் பல வருடங்கள் காத்திருந்து வெளியாகி ஹிட்டான படங்கள். அதனால், நான் வேலை பார்த்த படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனாலும் அது ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி”.

எடிட்டர் சான் லோகேஷ், ” இந்த தீபாவளிக்கு நல்லதொரு முக்கியமான படமாகவும் ‘டீசல்’ அமையும். ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை இந்த படம் தெளிவாக பேசும். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி! படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்றார்.

கலை இயக்குநர் ரன்வன், “இந்த படத்தின் களமே எங்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது. டீசல் பின்னணியில் சரியான செட் அமைப்பதும் சவாலாக இருந்தது. அதை எல்லோரும் சரியாக செய்திருக்கிறோம் என நம்புகிறேன். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.

நடிகர் தங்கதுரை, “‘டீசல்’ படம் என் கரியரில் மிகவும் முக்கியமானது. நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். தினமும் ஷூட்டிங் போகிறோமா அல்லது நடிகர் சங்க மீட்டிங் போகிறோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு நிறைய நடிகர்கள் இருப்பார்கள். திருவிழா போல படம் எடுத்தார்கள்.
படமே ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சண்முகம் பல நாட்கள் தூங்காமல் வேலை பார்த்திருக்கிறார். ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ படங்களை அடுத்து ‘டீசல்’ படமும் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரும் வெற்றியாக அமையும். அதுல்யாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களைப் போலவே படமும் ஹிட்டாக வாழ்த்துகள்”.

நடிகர் பிரேம்குமார், ” எல்லாவிதமான அம்சங்களும் ‘டீசல்’ படத்தில் இருக்கும். டீசலுக்கு பின்னால் நடக்கும் மாஃபியா என்ன என்பதை மிகத் துல்லியமாக இந்த படத்தில் இயக்குநர் சண்முகம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். ஹரிஷ் கல்யாணுக்கு இப்போது திரைத்துறையில் சரியாக நேரம் கூடி வந்திருக்கிறது. அதுல்யா, வினய் என அனைவரும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ‘டீசல்’ தீபாவளியாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள்”.

நடிகர் ஜார்ஜ், “இந்த நல்ல படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது. மக்களாகிய நீங்கள் தீபாவளிக்கு படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்”.

நடிகர் மேத்யூ, ” படக்குழுவினர் அனைவரும் ஜாலியாக வேலை செய்தோம். எவ்வளவு காலதாமதம் ஆனாலும் சரி, பட்ஜெட் கூடினாலும் சரி, தான் நினைத்தபடி படம் வர வேண்டும் என்பதில் இயக்குநர் சண்முகம் உறுதியாக இருந்தார். படம் பார்க்கும்போது அது உங்களுக்கே புரியும். அனைவருக்கும் ‘டீசல்’ தீபாவளி வாழ்த்துக்கள்”.

நடிகர் ரமேஷ், “தயாரிப்பாளர் தேவா சாரை பார்த்தபோது முதலில் உதவி இயக்குநர் என்றுதான் நினைத்தேன். அந்தளவுக்கு மிகவும் எளிமையான மனிதர். இயக்குநர் சண்முகம், ஹரிஷ் கல்யாண் என எல்லோருமே கடின உழைப்பை இந்தப் படத்திற்காக கொடுத்திருக்கிறார்கள். படம் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்”.

நடிகர் ரிஷி ரித்விக், ” இந்த படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சண்முகம் அண்ணனுக்கு நன்றி. சினிமாவில் சண்முகம் அண்ணன் மிகப்பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள், ஹரிஷ் கல்யாண், வினய் சார், அதுல்யா மேம் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் தீனா, “நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்ற போட்டி ‘டீசல்’ படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே இருந்ததை பார்க்க முடிந்தது. சண்முகம் சாரின் கனவு படத்தில் நாங்கள் நடித்திருப்பது மகிழ்ச்சி. சின்னத்திரை நடிகர் ஆன எனக்கு இந்த படத்தில் தேவையான சுதந்திரம் கொடுத்தார்கள். எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவினரின் பணியும் பெரிய திரையில் பார்க்கும் பொழுது சிறப்பாக வந்திருக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் விவேக் பிரசன்னா, “தயாரிப்பாளர்கள் தரப்பு, இயக்குநர் சண்முகம், ஹீரோ ஹரிஷ் கல்யாண் என இவர்கள் எல்லோருக்கும் இந்த படம் எவ்வளவு முக்கியமானது மனப்போராட்டத்தையும் ஆர்வத்தையும் கொடுத்தது என்பது எனக்கு தெரியும். சரியான தருணத்திற்காக இந்த படம் காத்திருந்தது. பல தலைமுறைகளிடமிருந்து அரசியல் சூழல் பெரும் சொத்தை சுரண்டி அவர்களுக்கே தெரியாமல் எப்படி அவர்களை பலியாக்கினார்கள் என்பதை இந்த படம் சரியாக காட்டி இருக்கிறது. எரிசக்தி தொடர்பான அரசியல் பேசும் படமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும் இது இருக்கும். கரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஹீரோவாக மட்டுமல்லாது சரியான கதையில், தான் பொருந்திப் போகிறோமா என்பதில் ஹரிஷ் கல்யாண் கவனம் செலுத்தியதால்தான் தற்போது அவருடைய படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. 11 கோடி ரூபாய் எந்த ஹீரோ மீது முதலீடு செய்யலாம் என யோசிக்கும் பட்டியலில் ‘டீசல்’ படத்திற்கு பிறகு நிச்சயம் ஹரிஷ் கல்யாண் இணைவார். அதுல்யா, வினய், ரிச்சர்ட் சார், உடன் நடித்த அனைவருக்கும் நன்றி”.

நடிகர் வினய், “வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தேவா, இயக்குநர் சண்முகம் இருவருக்கும் நன்றி. என் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். படம் நன்றாக வந்திருக்கிறது. சினிமாவை வந்த புதிதில் ஈஸியாக நினைத்தேன். ஆனால், அது தவறு என்பதை என் குரு ஜீவா புரிய வைத்தார். அந்த கடின உழைப்பை ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார். திபு அழகான இசை கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் ஒளிப்பதிவு கதைக்கு மிகப்பெரும் பலம். எல்லோருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். தீபாவளிக்கு ‘டீசல்’ மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், “‘டீசல்’ எனக்கு நல்ல அனுபவம். ‘கனா’ படத்தில் இருந்தே இயக்குநர் சண்முகம் எனக்கு தெரியும் என்பதால் அவருடன் பணிபுரிய எளிமையாக இருந்தது. ‘பச்ச குத்திக்கிட்டு…’ என்னுடைய முதல் கானா பாடல். இந்தப் படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். காமன் மேன் கனெக்ட் உள்ள படம் இது. ஹரிஷ் கல்யாண், அதுல்யா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் ‘டீசல்’ தீபாவளி வாழ்த்துக்கள்”.

நடிகை அதுல்யா, “‘டீசல்’ படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் உட்பட எல்லோருமே இந்த படத்துடன் எமோஷனலாக கனெக்ட் ஆகி இருந்தோம். தயாரிப்பாளர் தேவா சாருக்கு நிச்சயம் இந்தப் படம் வெற்றி தேடி தரும். நாங்கள் எல்லோரும் ஒரு ஃபேமிலியாக வேலை பார்த்திருக்கிறோம். வாய்ப்பு கொடுத்த சண்முகம் சாருக்கு நன்றி. என் கரியரில் என்றும் நினைத்து பார்க்கும்படியான மிகப்பெரிய ஹிட் சாங் கொடுத்த இசையமைப்பாளர் திபு அவருக்கும் நன்றி. ஹரிஷை எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வம்பிழுப்பேன். வினய், பிரேம் அண்ணா, தங்கதுரை என எல்லோருடனும் பயணித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இவ்வளவு பெரிய நடிகர்கள் குழுவுடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. உங்கள் தீபாவளியை ‘டீசல்’ படத்துடன் சேர்ந்து கொண்டாடுங்கள்”.

இயக்குநர் சண்முகம் முத்துசாமி, “‘டீசல்’ படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடு வரை எந்த சோர்வும் இல்லாமல் இன்முகத்தோடு உழைத்த நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், பிரேம்குமார், தங்கதுரை மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஓப்பனிங் பாடல் பாடி கொடுத்த நடிகர் சிலம்பரசனுக்கு ஸ்பெஷல் நன்றி. இந்த காலத்தில் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்ட தயாரிப்பாளர் தேவராஜுலு மார்கண்டேய சாருக்கு நன்றி. காதல் படங்கள், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் நின்ற டேங்கர் லாரியிலிருந்து பக்கெட் பக்கெட் ஆக பெட்ரோல், டீசலை சிறுவர்கள் திருடி கொண்டிருந்தார்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்ற போது தான் இந்த அதிர்ச்சிகரமான உலகம் பற்றி தெரிய வந்தது. இதையே படமாக்கலாம் என்று உருவானதுதான் ‘டீசல்’. இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் நிறைய தெரிந்து கொள்ள முயற்சித்தபோது உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது. இந்த மாஃபியாவால் ஒரு சாதாரண மனிதன் எந்த அளவிற்கு நேரடியாக பாதிக்கப்படுகிறான் என்பதை இதில் சொல்லியிருக்கிறோம். இந்த ‘டீசல்’ படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கொட்டுவது போல தயாரிப்பாளர் தேவராஜூலு சார் இந்தப் படத்திற்காக பணம் கொட்டியிருக்கிறார். ‘பாகுபலி’, ‘கத்தி’ போன்று அடுத்தடுத்து ரூ. 100 கோடி வசூல் செய்யும் பெரிய படங்களை நீங்கள் தயாரிக்க வேண்டும். தீபாவளிக்கு ‘டீசல்’ படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் ஹரிஷ் கல்யாண், ” என்னை நம்பி இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சண்முகம் சாருக்கு நன்றி. ஆக்ஷன் படங்கள் மீது எனக்கு அதீத விருப்பம் உண்டு. ஆனால், அதற்கான சரியான கதை வரும் வரை காத்திருந்தேன். அப்படியான கதையாக எனக்கு ‘டீசல்’ அமைந்தது. தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாக பார்க்கப்படும் எரிபொருள் உலகத்திற்கு பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்த கதை சொல்லி இருக்கிறது. மக்கள் இந்த படத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். படத்தின் டிரைலர் வெளியான போது பெரிதாக யாரும் திட்டவில்லை. அதுவே எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. ஆக்ஷன் படத்திற்கான சரியான மீட்டரை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறேன் என்று டிரைலர் பார்த்த பலரும் பாராட்டினார்கள். பெட்ரோல், டீசல் என எளிய மக்களின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கும் இந்த பொருளுக்கு பின்னால் இப்படியான மாஃபியா நடக்கிறதா என்பதை கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கான படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சினிமாவை உண்மையாக நேசிக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்காகவே இந்த படம் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த படத்திற்காக 30 நாட்களும் மேலாக கடலில் ஷூட் செய்து இருக்கிறோம். இந்த சமயத்தில் எங்களுக்கு உதவிய அத்தனை மீனவர்களுக்கும் நன்றி. அதுல்யாவும் சூழலை புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்தார். படத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம். தீபாவளிக்கு என் படம் வருவது பெரும் மகிழ்ச்சி. எங்களுடைய முயற்சிக்கு உங்களுடைய ஆதரவும் அன்பும் தேவை” என்றார்.