விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

82

கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ விஷ்ணு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசுகையில், ”எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், படக் குழுவினருக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. எம் சினிமா புரொடக்ஷன் எனும் பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி, முதல் தயாரிப்பாக ‘லாந்தர்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் ஜூன் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன் பேசுகையில், ”சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று பள்ளியில் மாணவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். மாணவர்கள் முன்னிலையில் என்னை மேடையேற்றி பாடுமாறு ஆசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னால் பாட முடியவில்லை.‌ அப்போது அந்த ஆசிரியர், ‘இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் நீ நன்றாக பாடுவாய்’ என ஊக்கமளித்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் எனக்கு அது மிகப் பெரிய தோல்வியாக மனதில் பட்டது. மேடை ஏறுவதற்கு முதல் நாள் முழுவதும் பயிற்சி அளித்தார்கள். மேடை ஏறி ஒரு வரியை கூட பாடாமல் இறங்கி விட்டேன்.‌ இதனால் எனக்கும், இசைக்கும் தொடர்பே இல்லை என நினைத்து விட்டேன்.

சிறிது நாள் கழித்து நான் விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது அங்கு ஒருவர் பழைய ஹார்மோனிய இசைக்கருவியை இசைத்துக்கொண்டிருந்தார். நான் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து இசைக்கிறாயா என கேட்டார். இல்லை எனக்கும், இசைக்கும் வெகு தூரம் என்று சொல்லிவிட்டு, அவர் வாசிப்பதை தொடர்ந்து கவனிக்க தொடங்கினேன். அவர் சிறிது நேரம் வாசித்து விட்டு வெளியே சென்று விட்டார்.‌ அப்போது ஹார்மோனியத்தை வாசித்துப் பார்க்கலாமே என வாசிக்க தொடங்கினேன். அருகில் இருக்கும் ஆலயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பக்தி பாடலுக்கு ஏற்ப என்னுடைய கைவிரல்கள் தானாகவே ஹார்மோனியத்தில் வாசிக்கத் தொடங்கின. ஒரு புள்ளியில் தான் நான் அதனை கவனித்தேன், எனக்கும் இசை வருமென்று உணர்ந்தேன்.‌ பாடல்களைக் கேட்டு வாசிக்க முடியும் என நம்பினேன். அப்போதுதான் என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. என்னுடைய பெற்றோர்கள், ‘இசையை கற்றுக்கொள். ஆனால் ஒருபோதும் படிப்பை கைவிடாதே’ என்றனர்.

கல்லூரி படிப்பை நிறைவு செய்தவுடன், இசையில் ஏதாவது சாதிக்கலாம் என நினைத்தேன். அப்போதுதான் பாடலாசிரியர் தேவாவின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. இருவரும் இணைந்து பாடல்களை உருவாக்கத் தொடங்கினோம். பிறகு திரைப்பட இயக்குநர்களை சந்தித்து வாய்ப்பு கேட்க தொடங்கினோம்.

ஒரு நாள் ‘ராட்சசன்’ பட வெளியீட்டின் போது இயக்குநர் சாஜி சலீமை சந்தித்தோம். அவரிடம் வாய்ப்பு கேட்டபோது, முதலில் எங்களது பாடல்களை கேட்டார். ஒரு பாடலை திரும்பத் திரும்பக் கேட்டார் அப்போது ‘இந்த இடம் நன்றாக இருக்கிறது. இந்த வரி நன்றாக இருக்கிறது’ என தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருந்தார். ஒரு கலைஞருக்கு பாராட்டு தான் சிறப்பாக இயங்க வைப்பதற்கான எனர்ஜி.

அதன் பிறகு நிறைய பாடல்களை நானும், தேவாவும் இணைந்து உருவாக்கினோம். எல்லா பாடல்களையும் இயக்குநர் சாஜி சலீம் கேட்டு தன் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்.