மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

109

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சத்யராஜ் சார் லெஜெண்ட்! வசந்த்ரவி சார், தான்யா ஹோப் இவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ராஜீவ் மேனன் சாருக்கு பிரேம் வைத்தது என்னுடைய பாக்கியம். படத்தில் என்னுடன் வேலைப் பார்த்த எல்லோருக்குமே நன்றி!”.

விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் கோகுல், “படத்தின் தயாரிப்பாளர் மன்சூர் சாருக்கும் இயக்குநர் குகன் சாருக்கும் நன்றி. நிறைய சிஜி பணிகள், கரெக்‌ஷன் செய்திருக்கிறோம். புதிய டெக்னாலஜி, ஏஐ உபயோகப்படுத்தி இருக்கிறோம். நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். சிறந்த பணியை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை உண்டு. நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “சமூகத்திற்கு தேவையான கருத்தோடு படம் வந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பிறகு ‘ராக்கி’ வசந்த்ரவி என்ற பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சென்று வெற்றிப் பெற செய்யுங்கள். ஆக்‌ஷன் – எண்டர்டெயினராக படம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்!”.

கலை இயக்குநர் சுபேந்தர், ”இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் குகன் சாருக்கு நன்றி. எல்லோருமே சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்”.

எடிட்டர் கோபி, “சூப்பர் ஹூயூமன் கான்செப்ட்டோடுதான் இந்தப் படம் வந்திருக்கிறது. படப்பிடிப்பு முடித்த பின்னர்தான் இந்த படத்தையே நான் பார்த்தேன். வழக்கமான நக்கல், நையாண்டி எதுவும் இல்லாத இளமையான சத்யராஜ் சாரை இந்தப் படத்தில் பார்க்கலாம். விஷூவலாக படம் நன்றாக இருக்கும். தமிழ் சினிமாவில் இது அடுத்தக் கட்டத்திற்கான நகர்வு ‘வெப்பன்’. வித்தியாசமான ஜானரில் படம் உங்களுக்கு புது அனுபவம் கொடுக்கும்”.

இயக்குநர் கார்த்திக் யோகி, “இயக்குநர் குகன், வசந்த் ரவி ஆகியோர் எனது நண்பர்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்!”.

இயக்குநர் அஸ்வின், “குகன், நான், கார்த்திக் யோகி மூன்று பேருமே நாளைய இயக்குநர் சமயத்தில் இருந்தே நண்பர்கள். குகனுக்கு இந்த படம் வெற்றி பெற வேண்டும்”.

இயக்குநர் எழில், “சினிமாவை நேசிக்க கூடிய தயாரிப்பாளர்களின் படம் இது என்று சொல்லலாம். செட் எல்லாமே ‘பாகுபலி’ படத்திற்கு இணையாக பிரம்மாண்டமாக இருந்தது. படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னார்கள். இப்போது தமிழ் சினிமாவுக்கு படம் வெற்றி அடைந்து மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்க வேண்டும்”.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “விஜயகாந்த் vs சத்யராஜ் என்று போட்டி ஆரோக்கியமாக இருந்த காலம் அது. அப்போதிருந்து இப்போது வரை சத்யராஜ் கலக்கி வருகிறார். அவர் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ‘வெப்பன்’ படத்தின் போஸ்டர், டிரெய்லர் வித்தியாசமாக இருக்கிறது. முதல் படத்திலேயே இப்படி ஒரு ஜானரை இயக்குநர் முயற்சி செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தொழில்நுட்ப குழுவினருக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள்! “.

ஸ்டண்ட் இயக்குநர் சுதீஷ், “பட்ஜெட் பற்றி யோசிக்காமல் படம் செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நிறைய ஆக்‌ஷன் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் செய்த சத்யராஜ் சாருக்கு நன்றி. வசந்த் ரவி 100% சிறப்பாக வர வேண்டும் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தார். உங்கள் எல்லோருடைய ஆதரவும் வேண்டும்”.

நடிகர் மைம் கோபி, “இயக்குநர் குகன் திறமைசாலி. சத்யராஜ் அண்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. பிரம்மாண்டமான படமாக இது இருக்கும். உங்கள் ஆதரவு தேவை!”

படத்தின் கதாநாயகி தான்யா ஹோப் பேசியதாவது, “இந்தப் படத்தில் நான் வேலை செய்ததை என்னுடைய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்!”

நடிகர் வசந்த் ரவி, “தமிழில் சூப்பர் ஹூ்யூமன் கதைகளை எடுத்து செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை இயக்குநர் குகன் விரும்பி செய்திருக்கிறார். சின்ன வயதில் இருந்தே நிறைய காமிக்ஸ் கதைகளை அவர் படித்து வளர்ந்ததால் சினிமாவில் அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முதல்படியாக ‘வெப்பன்’ படத்தை எடுத்திருக்கிறார். இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதை செய்து கொடுத்த மில்லியன் ஸ்டுடியோவுக்கு நன்றி. படத்தின் டிரெய்லரை நெல்சன் சாரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டினேன். ‘டிரெய்லர் ரொம்ப நல்லாருக்கு. இதுபோன்ற ஃபேண்டஸி ஆக்‌ஷன் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்றார். ’ராக்கி’ படத்தில் பாரதிராஜா சாருடன் நடித்தேன். பின்பு, ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன். அவர்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதேபோலதான், சத்யராஜ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன். மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அவர் எவ்வளவோ படங்கள் நடித்தி்ருந்தாலும் இந்த படம் அவரது கரியரில் மறக்க முடியாததாக இருக்கும். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. தான்யா இதுவரை நடித்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படமாக ‘வெப்பன்’தான் சொன்னார். நான் எவ்வளவோ ஜானர்களில் படங்கள் செய்து இருந்தாலும் சூப்பர் ஹூயூமன் என்பது புது ஜானர். ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்தைப் பாருங்கள். இது ப்ரீகுவல்தான். குகன் இந்த கதைக்கு ஒரு யுனிவர்ஸே வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் சத்யராஜ், “திரையில காட்டுவதை விட, தரையில வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இந்த மாதிரி படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். படத்தின் கதையை நம்பி மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தயாரிப்பாளர் மன்சூர் செய்துள்ளார். என் நண்பர் விஜயகாந்த்திற்கு ‘வானத்தைப் போல…’ என்ற அற்புதமான பாட்டைக் கொடுத்தவர் ஆர்.வி. உதயகுமார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களாக நான் நினைப்பது தயாரிப்பாளர் மன்சூரையும் இயக்குநர் குகனும்தான். தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ரொம்ப ஸ்டிராங்க். கட்டப்பா போல இந்தப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் காலத்தால் அழியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்!”.