‘தாத்தா ‘குறும்படம் விமர்சனம்

108

தான் நினைத்த மாதிரி மகனை உருவாக்க முடியவில்லை என்றால் அந்தக் கனவை தனது பேரன்கள் மீது ஏற்றி மகிழ்வது தாத்தாக்களின் இயல்பு.
அதனால்தான் தாத்தாக்கள் பேரன்களுக்கு 200 சதவீதம் சுதந்திரம் கொடுத்து செல்லம் காட்டுகிறார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் வேலைகளையும் தாத்தாக்கள் செய்கிறார்கள் .இந்த உளவியல் உண்மை பேரன்களுக்கே தெரியாது.
அப்படி ஒரு தாத்தா ,தனது பேரனின் ஆசையை நிறைவேற்றும் கதை தான் ‘தாத்தா ‘ குறும்படமாக உருவாகி இருக்கிறது.

ஒரு தலைமுறையின் மகிழ்ச்சி ,போன தலைமுறையின் தியாகங்களால் கட்டப்பட்டது என்பதை அடுத்தடுத்த தலைமுறைகள் உணர்வதே இல்லை. தனது பேரனின் மகிழ்ச்சிக்காகத் தனது வாழ்க்கையின் வழித்துணை போலத் தொடர்ந்து கொண்டிருந்த சைக்கிளை விற்று அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கிறார் தாத்தா.

இதில் தாத்தாவாக ஜனகராஜ் நடித்துள்ளார் .அப்பாடா பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று தோன்றுகிறது.அவரது தோற்றமும், உடலும், உடல் மொழியும், குரலும் அச்சு அசலாக அந்த ஏழைத் தாத்தாவாகவே மாற்றி உள்ளன.இந்தச் சிறு படத்தில்தான் அவருக்கு எவ்வளவு முக பாவனைகள் காட்டக்கூடிய வாய்ப்புகள்.கடந்த கால ஏக்கம் ,காதல், அன்பு, பாசம், துயரம், பூரிப்பு என அனைத்தையும் தனது அனுபவத்தில் அனாயாசமாக நடிப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

 

சினிமாவிற்கான செயற்கை பரபரப்பின்றி யதார்த்த நோக்கில் இந்தப் படம் உருவாகி உள்ளது.குறும்படம் என்ற அளவில் இயக்குநர் நரேஷ் தன் கதை கூறும் முறையில் வெற்றி பெற்றுள்ளார். அவரது பெரும்பட முயற்சிக்கு வாழ்த்துகள்!

ஒவ்வொரு தாத்தாவின் முகச்சுருக்கங்களுக்குப் பின்னேயும் வலிகள் நிறைந்த பல முன்கதைச் சுருக்கங்கள் உள்ளன.

இளைய தலைமுறை மூத்த தலைமுறையின் தியாகங்களைப் புரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணமாக இந்த ‘தாத்தா’ குறும்படம் அமைந்துள்ளது எனலாம்.

ஜனகராஜ், ஏ.ரேவதி, ரிஷி, ஞான ஷ்யாம் , மோனிஷ்,கயல் தேவராஜ் ,தீபா , முருகன் மந்திரம், ராயல் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்கம்- நரேஷ்,.ஒளிப்பதிவு -வினோத் ராஜா ,இசை -அமினா ரஃபீக் – சந்தோஷ் ,கலை இயக்கம் – வீரசமர் ,எடிட்டிங் -நாஷ், உடைகள் – வாசுகி,மேக் அப் -கயல் , தயாரிப்பு நிர்வாகம் -எஸ். செளத்ரி .
இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் கவிதா .எஸ் தயாரித்துள்ளார். இந்தக் குறும்படம் ஷார்ட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.