வாங்கண்ணா வணக்கங்கண்ணா திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாத்துளிகள்!

100

தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில் அறிமுக நடிகர் சுந்தர் மகாஸ்ரீ (Sundar Mahasri )கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ (Vaanganna Vanakkanganna ) எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சு திருநாவுக்கரசர் வெளியிட, அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எம். கே. மோகன் பெற்றுக்கொண்டார். இதன் போது திரைப்பட தயாரிப்பாளரும், விமர்சகரும், திரைப்படத்துறை ஆய்வாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன், ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு, ‘லொள்ளு சபா’ ஜீவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ராஜ் கண்ணாயிரம் (Raj Kannayiram ) இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ எனும் திரைப்படத்தில் செந்தில் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இவருடன் அறிமுக நாயகன் சுந்தர்
மகாஸ்ரீ, அபிநயாஸ்ரீ (Abinayasri), சந்தியா பாலசுப்பிரமணியன் (Sandhiya பாலா subramanian ), நதியா வெங்கட், பிரபு, சன்னி பாபு, மின்னல் ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெங்கட் முனிரத்தினம் (Venkat Munirathinam) ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோசப் சந்திரசேகர் (Joseph Chandrasekar) இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ராக் அண்ட் ரோல் புரொடக்ஷன் (Rock & Role Production) மற்றும் ஏ பி புரொடக்ஷன் (AP Production) ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் யாஸ்மின் பேகம் (Yasmeen Begam) மற்றும் மணிமேகலை லட்சுமணன் (Manimagali Lakshmanan ) ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது பட குழுவினருடன் தமிழ் திரையுடகத்தைச் சார்ந்த பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் லட்சுமணன் பேசுகையில், ” வாங்கண்ணா வணக்கங்கண்ணா படத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் பணிகளை நிறைவு செய்வதற்கு கடும் சவால்கள் இருந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறோம். விரைவில் படத்தையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். நல்லதொரு கருத்தை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறோம். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவுத் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் யாஸ்மின் வேகம் பேசுகையில், ” இது எனக்கும், எனது கணவருக்கும் முதல் மேடை. இந்தப் படத்தின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சுந்தர் மகாஸ்ரீ எனது கணவர் தான்.‌ நாங்கள் இருவரும் திரைத் துறையில் ஜூனியர் ஆர்டிஸ்டிகளாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினோம். அதன் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பிறகு ஒரு புள்ளியில் நான் நடிப்பதை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லத் தொடங்கினேன். ஆனால் சுந்தர் சினிமா தான் மூச்சு என வாழ்ந்தார். நடிகராக நடிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு கதை எழுதுவது.. திரைக்கதை உருவாக்குவது.. படத்தை இயக்குவது.. வசனம் எழுதுவது.. படத்தை தொகுப்பது.. என ஒரு படத்தினை உருவாக்குவதற்கான அனைத்து வேலைகளையும் கற்று தேர்ந்தார். அதன் பிறகு கதை எழுதி ஒவ்வொரு கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டார். கதை கேட்ட நிறுவனங்கள் காத்திருக்க சொல்லியது. வருடங்கள் ஓடியது. இதனால் எங்களுக்குள் சண்டையும் ஏற்பட்டது. பிறகு படத்தை சிறிய முதலீட்டில் தொடங்க திட்டமிட்டோம். இதற்கு நானும், எனது மாமியாரும் முழு ஆதரவு அளித்தோம். அதன் பிறகு திட்டமிட்டபடி இந்த திரைப்படத்தை இருபது நாளில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம் . இதற்காக கடுமையாக உழைத்த ஒட்டுமொத்த பட குழுவினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் பணிகளை தொடங்கும் போதே இதனை நாம் மட்டுமே நிறைவு செய்திட இயலாது என எண்ணிக் கொண்டிருந்தபோது.. தயாரிப்பாளர் லட்சுமணன் எங்களுக்கு அறிமுகமானார். அவரும் கதையைக் கேட்டவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டு படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

படத்தின் இயக்குநர் ராஜ் கண்ணாயிரம் பேசுகையில், ” இந்த படத்தின் தயாரிப்பாளர்களும், ,நாயகனும், நண்பனுமான சுந்தர் மகாஸ்ரீ எனக்கு அழைப்பு விடுத்து இந்த படத்தை இயக்கி தாருங்கள் என கேட்டார். சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் யூட்யூபர் ஒருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் பின் சட்டமன்ற உறுப்பினரின் கோபத்திற்கு யூட்யூபர் ஆளாகிறார். 24 மணி நேரத்திற்குள் அந்த யூட்யூபர் தப்பினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் செந்தில் மட்டும் தான் அனைவருக்கும் தெரிந்த நட்சத்திர நடிகர். அவர் எம்எல்ஏவாக நடிக்கிறார். அவர்தான் கதையின் நாயகன். மற்ற அனைவரும் புதுமுகங்கள் தான். இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இப்போது இந்தப் படத்தின் முன்னோட்டத்தையும் பாடல்களையும் பார்த்திருப்பீர்கள். விரைவில் இந்த ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ திரையரங்கில் வெளியாகும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் பேசுகையில், ” கணவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக உழைத்து ஈட்டிய பணத்தின் மூலம் படத்தை தயாரித்ததற்காக தயாரிப்பாளர் யாஸ்மின் பேகத்திற்கு முதலில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய கடின உழைப்பும், பேச்சுகளும் எங்களைப் போன்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது. உங்களுடைய எண்ணத்திற்காக இந்த படம் பெரிய வெற்றியை பெறும். தயாரிப்பாளர் லட்சுமணனும் அலுவலகத்திற்கு வருகை தந்து பணிவாகவும், மரியாதையாகவும் இப்படத்தின் விழாவிற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவருடைய உழைப்பிற்கும், நேர்மைக்கும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். படத்தின் நாயகனான சுந்தர் மகாஸ்ரீ கதை எழுதி இருக்கிறார். திரைக்கதை எழுதியிருக்கிறார். வசனம் எழுதி இருக்கிறார். நடித்திருக்கிறார். நடனமாடி இருக்கிறார். முதல் படத்திலேயே ரிஸ்க் எடுத்து நிறைய விசயங்களை செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இருபது நாட்களில் ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்வது என்பது எளிதானதல்ல. சினிமாவைப் பொறுத்தவரை நல்ல படைப்புகளை வரவேற்க மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். இன்றைக்கும் மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து நல்ல பொழுதுபோக்கு அம்சம் உள்ள படத்தை பார்த்து ரசிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் இதற்கு இருபது ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகி வெற்றி பெற்றுள்ள கில்லி படமே சாட்சி. அதே போல் இந்த திரைப்படமும் ரசிகர்களை மகிழ்வித்து பொழுது போக்கு அம்சங்களுடன் ஜாலியான படமாக இருந்தால் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும். ” என்றார்.

நடிகை அபிநயாஸ்ரீ பேசுகையில், ” புதுக்கோட்டையை அடுத்துள்ள சின்ன கிராமத்தில் பத்தாவது படிக்கும் போது டியூஷனுக்கு செல்கிறேன் என்று சொல்லி உள்ளூர் சேனல் ஒன்றில் தொகுப்பாளனியாக பணியாற்றினேன். கடும் ஊர் கட்டுப்பாடுகளையும் மீறி வி ஜே வாக தொடர்ந்தேன். அத்துடன் பத்தாவது… பன்னிரண்டாவது… நிறைவு செய்த பிறகு பொறியியல் பட்டதாரியாகி, தனியார் நிறுவனத்தில் இரண்டரை ஆண்டு காலம் பணியாற்றினேன். நல்ல சம்பளம் ஆரோக்கியமான பணிச்சூழல் இருந்தாலும் .. அதையெல்லாம் விட்டுவிட்டு எனக்கு பிடித்த மாதிரி நடிப்பை தேர்வு செய்து நடிக்க தொடங்கினேன்.

சினிமாவில் வருமானமும், வாய்ப்பும் ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும். இருந்தாலும் விடாப்பிடியாக சின்ன வயது கனவை துரத்திக் கொண்டே இருந்தேன்.‌ கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற வாய்ப்பு கிடைத்த போது.. கிடைத்த ஓய்வு நேரத்தில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருந்தேன். சின்னத்திரை தொடர்களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடிக்க தொடங்கினேன். மக்கள் டிவி, விஜய் டிவி, தற்போது ஆதித்யா டிவியில் தொகுப்பாளனியாக பணியாற்றி வருகிறேன்.

இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கும், நாயகனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றிகள். இந்தப் படத்தில் பணியாற்றிய போது எனக்கும் ஹீரோவுக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. ஆனால் அது குறித்து பிறகு சிந்தித்துப் பார்த்தபோது நான் செய்த தவறுகளை உணர்ந்து, படக் குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினேன். இந்தப் படம் இவ்வளவு வேகமாக நிறைவடைந்து திரைக்கு வரும் என்று நினைக்கவே இல்லை. இதற்காக உழைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி.. உங்களுடைய கவனம் + விருப்பம் எதில் இருக்கிறதோ.. அதற்கு மட்டுமே முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுங்கள். உங்களைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வரும். அதனைப் புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து முன்னேறுங்கள்.‌ ” என்றார்.