ரணம் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கிறது – நடிகர் வைபவ்

125

 

சரோஜா காலத்தில் இருந்தே வெங்கட் பிரபு எனக்கு கதை சொல்லியது கிடையாது – நடிகர் வைபவ்

தளபதி 68 படத்தின் கதை எனக்கு தெரியாது – நடிகர் வைபவ்

உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா…? அனைவரும் வியந்து பார்க்க வைக்கும் ரணம் – நடிகர் வைபவ்

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது,

வெளிநாட்டில் வேலை செய்து செட்டிலாகிவிட்டு, தன் கனவை துரத்தி, தன் ஆசையை நோக்கி வந்து தமிழ்நாட்டில் “ரணம்” அறம் தவறேல் படம் எடுத்திருக்கிறார்கள். அதையும் மூன்று நான்கு வேலைகளில் ஒன்றாகக் கருதாமல், அதற்கென்று பிரத்யேகமான கவனம் கொடுத்து அர்ப்பணிப்புடன் அதை உருவாக்கி இருக்கிறார் மது நாகராஜன். இது சாதாரண விசயம் இல்லை. சமீபத்தில் தான் அறிமுகம் ஆனார். இன்று என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவராக இருக்கிறார். பேசும் போது ஒரு மணி நேரத்தில் முக்கால் மணி நேரம் சினிமாவைப் பற்றிப் பேசுவார். மீதி பத்து நிமிடம் அவரின் குழந்தைகளைப் பற்றிப் பேசுவார். அந்த குழந்தைகள் மேல் எந்தளவிற்கு அன்பும் கவனமும் செலுத்துவாரோ அதே அளவிற்கு சினிமாவையும் நேசிக்கிறார். அவரது புரொடெக்ஷன் பெயரே குழந்தைகளின் பெயரையும் உள்ளடக்கி, மிதுன் மித்ரா மதுநாகராஜன் என்பதன் சுருக்கமாக MMM என்று வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அதுமட்டுமின்றி இது நாயகன் வைபவ் அவர்களுக்கு 25வது படம். அவர் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். 250 படங்கள் நடிக்க வேண்டும். அவருக்கு வாழ்த்துக்கள். நாயகி சரஸ் மேனன் உடன் பல படங்களில் பணியாற்றிவிட்டேன்… மிகச்சிறந்த திறமைசாலி, அட்டகத்தி நந்திதா, தான்யா ஹோப் என எல்லோருமே மிகச்சிறந்த தேர்வு. அறிமுக இயக்குநர் இப்படத்தை மிகவும் ரேசியாக எடுத்துச் சென்றிருக்கிறார். மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தை புதிய கோணத்தில், இப்படியெல்லாமா இருக்கும் என்று ஆச்சரியப்படுத்தும் தளத்தில் காட்டியிருக்கிறார். படத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படிப்பட்ட காலகட்டத்திலா நாம் வாழ்கிறோம் என்பதான எண்ணத்தை ஆழ்மனதில் இப்படம் விதைக்கும். அறம் தவறாமல் நாம் வாழும் போது, அது இந்த சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதைப் பற்றிப் பேசும் படமாக இருக்கும். கொஞ்சம் கூட யோசிக்க முடியாத நாம் நினைத்தே பார்த்திராத திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் சேர்த்து சிறப்பாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஷெரீஃப். நல்ல ரைட்டிங் மற்றும் நல்ல இயக்கத்தை இப்படத்தில் நான் பார்க்கிறேன். இப்படம் நமக்குள் மிகச்சிறந்த விவாதங்களை உருவாக்கும். தரமான ஒரு படத்துடன் மிதுன் மித்ரா ப்ரெண்ட்ஸ் உள்ளே வந்திருக்கிறார்கள். இப்படம் வெற்றி அடைய வேண்டும். மிதுன் மித்ரா நிறைய படங்கள் செய்ய வேண்டும். ஒரு வருடம் முழுக்க புதுமுக இயக்குநர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்து தொடர்ச்சியாக படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் கம்பெனியாக இது வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்” என்று பேசினார்.

கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசுகையில்

ஷெரீஃப் என் தம்பி போன்றவர். பாலாஜி, மது சார் மற்றும் உதய் போன்றோர் இப்படம் மிகச்சிறப்பாக வர உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. உதய் இப்படத்திற்கு ஸ்டிராங் ஆன நிர்வாக தயாரிப்பாளர் என்றார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா பேசும் போது,

”ரணம்” படத்தை நானும் ஷெரீஃப்-ம் கோவிட் காலத்தில் தான் துவங்கினோம். இரவு பகலாக அமர்ந்து விவாதித்து நாங்கள் இந்தக் கதையை உருவாக்கினோம்.  அடுத்து இப்படத்தை யார் தயாரிப்பார்கள் என்கின்ற சந்தேகம் எங்களுக்கு வந்தது..? ஏனென்றால் இக்கதையை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இக்கதையில் இருக்கும் ஒரு ப்ளாஷ்பேக் போர்ஷனைப் பார்த்து எல்லோருமே தயங்கினார்கள். மேலும் பல ஹீரோக்களும் கூட அதே காரணத்தினால் இப்படத்தில் நடிக்க தயங்கினார்கள். இதற்கு முன்னர் மது சார் தயாரிப்பில் ஒரு படம் பண்ணப் பேசி, அது நடக்காமல் போய்விட்டது. அப்பொழுது இருந்தே மது சார் ஒரு தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல நண்பராகப் பழகி வந்தார். அவர் என்னிடம் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்; படம் பண்ணலாம் என்று சொன்னார். அப்பொழுது நான் மற்ற தயாரிப்பாளர்களைப் போலத்தான் இவரையும் நினைத்தேன். சொல்லிவிட்டு போய்விடுவார்கள் என்று. அது போல் அவரும் அமெரிக்கா போய்விட்டார். அடுத்து 6 மாத காலம் கழித்து அவர் வரும் போது, அவரை சந்தித்து கதையைக் கூறினோம். ஒரு வாரம் கழித்து மது சார் கதையை ஓகே செய்துவிட்டார். ஏற்கனவே அவரது தயாரிப்பில் துவங்கிய முந்தைய படம் முடிவடையாமல் இருக்கும் போது, இவரைப் போல் யாரும் அவ்வளவு எளிதாக அடுத்த படம் தயாரிக்க ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால் மது சார் சம்மதித்தார். அவரால் தான் இன்று நானும் செரீஃப்பும் இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கிறோம். அதற்காக அவருக்குப் பெரிய நன்றி.

இப்படம் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை. நாயகன் வைபவ் இக்கதையைக் கேட்டு எனக்குக் கதை பிடித்திருக்கிறது, நான் நடிக்கிறேன் என்று சொன்னார். மிகவும் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் சில நாயகர்கள் இப்படத்தில் நடிக்க பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். ஹீரோயின் வேண்டும் என்றார்கள்.. டூயட் வேண்டும் என்றார்கள். இப்படிப்பட்ட சூழலில் இக்கதையை கேட்டவுடன் ஒப்புக் கொண்டார் வைபவ். அதிலும் முக்கியமாக ஹீரோ இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தான் வர வேண்டும். பிற நாயகர்கள் தயங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். எல்லோரும் விஷ்வல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்னோடு பணியாற்றிய சக தொழில்நுட்பக் கலைஞர்களின் பணி. அவர்களுக்கு நன்றி. அதையும் விட மேலான மற்றொரு காரணம் நீங்கள் முதல் முறையாக வைபவ் அண்ணனை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பார்க்கிறீர்கள். அதனால் விஷ்வல்ஸ் உங்களுக்குப் பிடித்திருக்கிறது,.

இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

இசையமைப்பாளர் அரோல் கரோலி பேசியதாவது,

எல்லோரும் கூறியதைப் போல் எனக்கும் ரணம் ரொம்பவே முக்கியமான திரைப்படம். எல்லோரும் மிக நேர்மையாக கடுமையாக உழைத்திருக்கிறோம். இப்படம் ஒரு நல்ல த்ரில்லராக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாக இருக்கும். திரைக்கதை கிரிப்பாக இருக்கும். ஒரு வருடத்திற்கு முன்பு இயக்குநர் செரீஃப் இக்கதை குறித்து என்னிடம் பேசும் போது, முழு ஸ்கிரிப்ட் இருக்கிறதா….?? என்று கேட்டிருந்தேன். அவர் உடனே வாய்ஸ் நோட் அனுப்புகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார். எனக்கு கொஞ்சம் குழப்பமாகவும், சிறிது ஆச்சரியமாகவும் ஒரு புது அனுபவமாகவும் இருந்தது. வாய்ஸ் நோட் கேட்கும் போது எனக்கு அது உண்மையாகவே Inspring ஆக இருந்தது. கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த ரணம் திரைப்படத்தின் மூலமாக எனக்கு ஒரு நண்பர்கள் குழு கிடைத்திருக்கிறது.. பாலாஜி, ஷெரீஃப், தயாரிப்பாளர் மது சார், வைபவ், என நிறைய பேர். படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

நடிகை தான்யா ஹோப் பேசும் போது,

எல்லோருக்கும் வணக்கம். இன்று முழுவதும் ரணம் அணியினருடன் இருந்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது, இந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும். நான் இப்படத்தில் ஒரு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்த சக நடிகர் நடிகைகள்:, பிற தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். நீங்கள் படத்தைப் பாருங்கள். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகை சரஸ் மேனன் பேசும் போது,

பத்திரிக்கையாளர்கள், ரணம் படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். ஒரு புராஜெக்டில் நாம் இணைவதற்கு முன்னர் நடிகர் நடிகைகளுக்கு ஆடிஷன் நடக்கும். எனக்கும் சில புராஜெக்ட்கள் காலதாமதமாகி இருக்கிறது. அப்பொழுது நான் ஒரு வெஃப் சீரிஸில் கிரியேட்டிவ் வொர்க் மற்றும் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த ஸ்பாட்டில் என்னோடு ஒளிப்பதிவாளர் செல்வா மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் உதய் போன்றோர் பணியாற்றி வந்தனர். அப்பொழுதே எனக்குத் தெரியாமல் அவர்கள் என்னை ஆடிஷன் எடுத்திருக்கிறார்கள். எனக்கு அது தெரியாது. எனவே இதன் மூலம் இப்படத்தில். எனக்கு உதவி இயக்குநராக நடிக்கவே ஆடிஷன் இல்லாமலே வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நான் நான்கு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருப்பதால் எனக்கு இக்கதாபாத்திரம் செய்வது எளிதாக இருந்தது. ஷெரிஃப் மற்றும் மது சார் இருவருக்கும் என் நன்றிகள். என்னுடன் நடித்த தான்யா ஹோப் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். வைபவ் சாரின் காமெடி சென்ஸ் மிகவும் பிடிக்கும். அவரின் 25வது படத்தில் நடித்திருப்பது பெருமை. இசையமைப்பாளர் அரோல் கரோலி அவர்களுக்கு நன்றி. சக்திவேலன் சாருக்கு நன்றி. அவர் வெளியிடும் படங்கள் என்றால் நல்ல படமாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது இந்தப் படத்திற்கும் பொருந்தும். இப்பொழுது சக்திவேலன் சார் தான் எல்லோருக்குமான லக்கி சேம்ப் (LUCKY CHAMP). இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கின்றன. அதனால் எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்து பெண்கள் அனைவரும் ஆற்றலைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள்.” என்றார்.

தயாரிப்பாளர் மது நாகராஜ் பேசியதாவது,

எல்லோருக்கும் முதற்கண் வணக்கம். நான் எப்போதுமே பேசும் போது, ஒரு Quote சொல்லித் தான் பேசத் துவங்குவேன். ஏனென்றால் எங்கள் டீமில் நாங்கள் எப்போதுமே ஏதாவது Quote சொல்லிக்கொள்வோம், இல்லையென்றால் சொல்லச் சொல்லிக் கேட்போம். “TEAM WORK MAKES THE DREAM WORK” என்று அடிக்கடி சொல்வார்கள்.  இதற்கு அர்த்தம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஒரு வேலையை செய்தோமானால் அது கண்டிப்பாக வெற்றி அடையும்.. ஒரு அணியில் இருப்பவர்கள் ஒரே விசயத்தை வேறு வேறு கோணங்களில் பார்ப்பார்கள். எனக்கு குழு உழைப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. என் குழு தான் இங்கே இருக்கிறார்கள்.

”ரணம் அறம் தவறேல்” இந்தப் படம் எப்படி துவங்கிச்சிங்குற சம்பவத்தை உங்களோட பகிர்ந்துக்கணும்னு நெனைக்கிறேன்.. எனக்கு சினிமாத் துறையில் இருந்து முதன் முதலில் அறிமுகமானவர்கள் பாலாஜி மற்றும் லைன் புரொடியூஷர் செல்வம் இந்த இரண்டு பேர் தான்.. ஒரு நல்ல கதை இருக்கிறது படம் தயாரிக்கிறீர்களா..? என்று கேட்டார்கள். நான் உடனே அங்கு இருப்பவர்களே படம் எடுக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நான் வேறு எடுக்க வேண்டுமா…? நான் இங்கு U.K வில் இருக்கிறேன். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் எப்படி எடுப்பது என்று கேட்டேன். எங்களிடம் நல்ல டீம் இருக்கிறது. உங்களுக்கு ஓகே என்றால் உங்களுக்கு எந்த வித சிரமமும் இல்லாத வகையில் படம் தயாரிக்கலாம் என்று சொன்னார்கள். உடனே யார் இயக்குநர்…? ஒரு மூன்று நான்கு படமாவது செய்திருக்கிறாரா…? என்று கேட்டேன். எதிர்தரப்பில் அமைதியாக இருந்துவிட்டு பிறகு இல்லை அவர் அறிமுக இயக்குநர் என்றார்கள். ஸ்கிரிப்ட் அனுப்பினார்கள். எனக்குப் படிக்கும் பழக்கம் இல்லை என்பதால் வாய்ஸ் நோட் அனுப்பச் சொன்னேன். அனுப்பினார்கள். கேட்டேன். பின் என் மனைவி கேட்டார். என்னை மீண்டும் கேட்கச் சொன்னார்கள்,. கேட்கும் போது அதில் பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களை Address செய்யும் தன்மை இருப்பதை உணர்ந்தேன். என் மனைவியிடம் அதைக் கூறியவுடன் தயாரிக்கலாம் என்றார். பிறகு எந்த ஹீரோ ஒத்துக் கொள்வார் என்று கேட்டேன். ஏனென்றால் ஹீரோ ஒத்துக் கொள்ளாமல் ஒரு புராஜெக்ட்டை துவங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பின்னர் வைபவ் அவர்களுக்கு கதை பிடித்திருக்கிறது என்று கூறினார்கள். உடனே இரண்டு தினங்களுக்குள் சென்னை வந்து அவரை சந்தித்தேன். அவர் மிகச் சிறந்த மனிதர், மிகச் சிறந்த நண்பரும் கூட, அன்றிலிருந்து ஸ்பாட்டில் நாங்கள் ஒன்றாகத் தான் சாப்பிடுவோம். அவரின் கதாபாத்திரம் மிக வித்தியாசமான கதாபாத்திரம் என்பதை எல்லோரும் சொல்லிவிட்டார்கள். என்னைப் பொருத்த வரை வைபவ் அவர்களுக்கு இப்படம் கேம் சேஞ்சர் ஆக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்து நாயகிகள் என்றவுடன் யாரை தேர்ந்தெடுப்பது  என்ற கேள்வி வந்தது. ஏனென்றால் கதாபாத்திரங்கள் வித்தியாசமானவை. தான்யா ஹொப் சொன்னது போல் இதுவரை அவர் நடித்திராத போலீஸ் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். மற்றொரு நாயகி நந்திதா ஸ்வேதா உடல்நலக் குறைபாட்டால் இன்று வர இயலவில்லை. அவரின் வாழ்த்துக்களையும் வருத்தங்களையும் எல்லோருக்கும் தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கின் போது ஆக்ஷன் காட்சிகளில் கூட சிறப்பாக நடித்திருக்கிறார்,. ஒரு முறை காயம் ஏற்பட்ட போது பேக்-அப் சொல்ல வேண்டியது வருமோ என்று நினைத்தேன். ஆனால் வெறும் முதல் உதவி செய்துவிட்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்தார். அவரின் கேரவன் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு, படியில் அமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு நன்றி. சரஸ் மேனன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் எப்போதும் சிரித்துக் கொண்டே அவரது வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். அதில் முதன்மையாக இயக்குநர் ஷெரீஃப். ஒரு கதை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்கின்ற அறிவு ஞானம் அவருக்கு இருக்கிறது. பிறகு ஒளிப்பதிவாளர் பாலாஜி. அவர் ஒரு சூப்பர் ஹியூமன், ஒரு ஷாட் எடுக்கும் போது பத்து நிமிடம் வீணடிப்பார். ஆனால் அவர் ஏன் அந்த பத்து நிமிடம் எடுத்துக் கொண்டார் என்பது அந்த ஷாட்டைப் பார்க்கும் போது, அந்த பத்து நிமிடம் வொர்த் என்று தோன்றும். லைன் புரொடியூசர் செல்வத்தை நம்பி சொத்தைக் கூட எழுதி வைக்கலாம். அவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர். பிறகு கலை இயக்குநர் மணி மொழியன். அவரை நான் அப்பு என்று தான் கூப்பிடுவேன். மழை என்று பார்க்காமல் போலீஸ் ஸ்டேஷன் செட்டப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு நன்றி.

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் உதய் என்ன நடக்க முடியாது என்று நினைப்போமோ அதை எளிதாக நடத்திக் காட்டிவிடுவார். பிரணதி சைல்ட் ஆர்டிஸ்ட், மற்றும் அவரின் பெற்றோருக்கும் நன்றி. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்து முன் வந்ததற்கு நன்றி. இப்படம் உருவாக காரணமாக இருந்த என் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் நன்றி. இப்படத்தை எப்படி கொண்டு போய் சேர்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் சக்திவேலன் அவர்கள் என் வாழ்வில் வந்தார்கள். He Means lots to me, அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் இருக்கிறார். இது தொழில் தாண்டிய நட்பு.” என்று பேசினார்.

இயக்குநர் ஷெரீஃப் அவர்கள் பேசும் போது,

அனைவருக்கும் என் முதல் வணக்கம். டிரைலர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். கடைசியாக பேசுவதால் என்ன பேச என்று தெரியவில்லை. ஏனென்றால் என்ன பேச நினைத்திருந்தேனோ அதை முன்னாள் வந்தவர்கள் அனைவரும் பேசிவிட்டார்கள். நானும் பாலாஜியும் தான் இப்படத்தை துவங்கினோம். வேறொரு படத்தை துவங்கலாம் என்று நினைத்த போது லாக்-டவுன் துவங்கியது. புராஜெக்ட்டும் முடிந்து போனது. வாழ்க்கையில் அடி மேல் அடி.. அப்படி இருக்கும் போது ஒரு செய்தி கண்ணில்பட்டது.. இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இக்கதையை பேசலாம் என்று முடிவு செய்து ஆத்திச்சூடியில் இருக்கும் அரணை மறவேல் என்கின்ற வரிகளை டைட்டிலாக வைத்தோம்..கருத்து சொல்வது போல் இல்லாமல் நேர்மையாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். நமக்கு மெச்சூரிட்டி வந்தப் பின்னர் வாழ்க்கையில் வாழ்ந்து முடிக்கும் முன்னர் கண்டிப்பாக அறம் தர்மம் செய்வதற்கு ஒரு வாய்ப்பு வரும்.

அந்த அறம் தர்மம் என்பது தானம் மட்டுமல்ல; உண்மைக்காக குரல் கொடுப்பது; அநியாயத்தை எதிர்ப்பது. இது எல்லாமே தர்மம் மற்றும் அறம் தான். அதை நாம் யோசிக்காமல் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ காலில் தான் கதை சொன்னேன். ஒரு வாரத்தில் ஓகே செய்து அக்ரிமெண்ட் சைன் செய்தேன். இதற்காக தயாரிப்பாளர் மது சார் அவர்களுக்கு நன்றி., வைபவ் சார் கதை கேட்டவுடன் ஒரு இயக்குநர் பேரைச் சொல்லி இது போலவா..? என்று கேட்டார். நானும் ஆர்வக் கோளாறில் ஆமாம் என்று சொல்லிவிட்டேன். அவர் தற்போது படம் பார்த்துவிட்டார். அவருக்குப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவருக்கு நன்றி. கலை இயக்குநர் விழா படத்தில் இருந்தே எனக்கு நல்லப் பழக்கம். அவருக்கும் நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த செல்வம், பாலாஜி, உதய் ஆகியோருக்கு நன்றி. இசையமைப்பாளர் அரோல் கரோலி அவர்களுக்கு நன்றி., அவரின் பின்ணனி இசை பேசப்படும். பிற நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி. எங்கள் படம் பற்றி பாசிட்டிவ் ஆக பேசிக் கொண்டிருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி சார் அவர்களுக்கு நன்றி.

பிள்ளைகளின் வெற்றி தான் பெற்றோரின் வெற்றி என்று கருதுகிறேன். ஏனென்றால் பெற்றோருக்கு தனிப்பட்ட வெற்றிகள் என்று ஏதும் கிடையாது. என் மனைவி, என் அம்மா, என் தங்கை என ஒட்டு மொத்தமாக என் குடும்பத்திற்கு மிக்க நன்றி. சில குறிப்பிட்ட இயக்குநர்களிடம் இருந்து வருபவர்கள் தான் சாதிக்க முடியும் என்று தவறான கருத்தாக்கம் இருக்கிறது. அது உண்மை இல்லை பொய் என்று நிருபிக்க விரும்பினோம்,. எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

நாயகன் வைபவ் பேசும் போது,

சக்திவேலன் பேக்டரி சக்தி அவர்களுக்கு மிக்க நன்றி. சரஸ் மேனன் செய்திருக்கும் கதாபாத்திரம் யாருமே செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். ஷெரிஃப் எப்படி சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. தான்யா ஹோப் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு நன்றி. ஷெரிஃப்  பற்றி இப்பொழுது தான் தெரியும். என்னிடம் யாரிடமோ வேலை பார்த்தேன் என்று தான் கூறினார். ஆனால் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். குறும்படம் எடுத்து இப்பொழுது மிகப்பெரிய இடத்தில் இருக்கும் இயக்குநர்கள் போல் ஷெரிஃப் வருவார். மது சாரை தமிழ் சினிமா உலகிற்கு வரவேற்கிறேன். உதய் என்னிடம் கணவன் மனைவி சண்டை போடுவது போல் சண்டை போடுவார். இன்று கூட ஒரு சண்டை நடந்தது.. ஒளிப்பதிவாளர் பாலாஜி அவர்களுக்கு நன்றி;. அவரின் பெயரை திரையில் பார்க்க வேண்டும் என்று விரும்பிய அவர் மனைவி இன்று உயிரோடு இல்லை. தாஸ் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா…? என்று அனைவரும் வியந்து போய் பார்ப்பார்கள்..

தளபதி படத்தின் கதை எனக்கு என்னவென்று தெரியாது. ஏனென்றால் வெங்கட் பிரபு சரோஜா காலத்தில் இருந்தே எனக்கு கதை சொல்லியது கிடையாது. ரஜினி சாருடனும் நடிக்க வாய்ப்பு அமைந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்.  எனக்கு எப்போதும் வரவேற்பு கொடுத்து வரும் நீங்கள் இப்படத்திற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.