”ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்” ; நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை!

86

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்..

பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். “அப்பா” படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சிகளை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது, “ஆதிராஜன் நீண்ட நெடுங்காலமாகவே என்னுடைய தம்பியாக உடன் வருபவர். அவர் பத்திரிகையாளராக இருக்கும்போது சில புரட்சிகள் செய்தவர். நான் சில முறை ஜெயிலுக்கு போவதற்கும் அவர்தான் காரணம். ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் ஒரு படத்தின் தோல்விக்கான அம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்து ‘சிலந்தி’ படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.

‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கும்போதே படம் எப்படி இருக்கும் என்பது பற்றி சொல்லத் தேவையில்லை. மரியாதை குறைவான டைட்டிலாக இருந்தாலும் காதலின் நெருக்கத்தை சொல்வதற்கு பொருத்தமான டைட்டில் தான். இப்படத்தில் இளம் ஜோடிகளைப் பார்க்கும்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ கார்த்திக், ராதாவை பார்ப்பது போல இருக்கிறது.

இப்போது வரை சூப்பர் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழ் திரையுலகம் சார்பில் அவரை வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் என்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் செய்த தொண்டுகளில் 15 சதவீதமாவது செய்ய வேண்டும். மக்களிடம் இறங்கி வர வேண்டும். மேடையில் இருந்து கொண்டு புஷ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 200 கோடி சம்பளத்தையும் வேண்டாம் எனக் கூறி மக்களுக்காக இறங்கி இருக்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் நல்லது செய்வார் என நம்புவோம்” என்று கூறினார்.