18ஆம் வருடத்தில் சண்டக்கோழி ; விஷால் நெகிழ்ச்சி

141

நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்து விட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்று விடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம். ஆனால் அந்த வெற்றியை தக்கவைத்து திரையுலகில் நிலைத்து நின்று பயணிக்க வேண்டும் என்றால், ரசிகர்கள் மனதில் தங்கள் உருவத்தை அழுத்தமாக பதிய வைக்க வேண்டும் என்றால், அது நிச்சயமாக ஒரு ஆக்சன் படம் மூலமாக தான் அமையும்.

நடிகர் விஷாலுக்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக இயக்குநர் லிங்குசாமி மூலமாக கிடைத்த அப்படி ஒரு திருப்புமுனை தான் சண்டக்கோழி திரைப்படம். அந்த படம் அவருக்கு அழகான ஒரு ஆக்சன் பாதையை போட்டுக் கொடுத்தது.. இன்றுவரை அவர் அதில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். இன்றும் தொலைக்காட்சிகளில் ‘சண்டக்கோழி’ ஒளிபரப்பாகும்போது அதை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

‘சண்டக்கோழி வெளியாகி’ இன்று 18 வருடங்கள் ஆன நிலையில் தனது உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஷால். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது..

“18 வருடங்களுக்கு முன்பு 2005 டிசம்பர் 16 அன்று தமிழ் சினிமாவில் ‘சண்டக்கோழி’ என்கிற மேஜிக் மூலமாக வெள்ளித்திரையில் ஒரு ஆக்சன் ஹீரோவாக என்னுடைய திரையுலக பயணத்தை துவக்கி வைத்த இந்த நாளை இப்போதும் நம்ப முடியவில்லை அல்லது என் உணர்வுகளை, எண்ணங்களை வார்த்தைகளில் அடக்க முடியவில்லை. இன்றுவரை அனைவராலும் என்மீது காட்டப்பட்டு வரும் அன்பு மற்றும் ஆதரவு என்கிற ஒரே காரணத்திற்காக அப்போதிருந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பார்வையாளர்களில் ஒருவனாகவே தொடரும் நான் அப்போது என்னை திரும்பி பார்க்கவே இல்லை.

எனக்கு மேலே உள்ள கடவுளுக்கும் மற்றும் கடவுள்கள் போன்ற என்னுடைய பெற்றோர், என்னை நம்பிய என்னுடைய இயக்குநர் லிங்குசாமி, மேலும் கடைசியாக உலகெங்கிலும் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் உருவில் நான் பார்த்த கடவுள்களுக்கும் தலைவணங்கி நன்றி சொல்கிறேன். எப்போதுமே உங்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளதுடன், என்னுடைய தந்தை ஜி.கே ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் சார் ஆகியோரின் கனவை தொடர்வேன். உங்களுக்கு நன்றி சொல்வது என்பது மட்டுமே போதுமானது அல்ல.. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என்று கூறியுள்ளார்.