இயற்கை விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய “வா வரலாம் வா” படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. ஆர்.

312

தேவாவின் இசையில் எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “வா வரலாம் வா”.

கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ள இயக்குனர் எல்.ஜி. ரவிசந்தர், தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

கதாநாயகனாக பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக “மைம்” கோபி, முக்கிய கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரெமா நடித்துள்ளார்.

மேலும் சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், மீசை ராஜேந்திரநாத், கிரேன் மனோகர், பிரபாகரன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் 40 குழந்தைகளும் நடித்துள்ளனர்.

தேவா இசையமைக்க, காதல் மதி, கானா எட்வின், எஸ். பி.ஆர் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகம்மது எடிட்டிங் செய்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னை சாலிகிராமம் பிரசாத் அரங்கில் நடைபெற்றது. முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு ‘வா வரலாம் வா’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலரை வெளியிட்டு வாழ்த்தினர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் எஸ்.பி.ஆரின் செயல் அங்கே இருந்தவர்கள் மத்தியில் உணர்ச்சிகரமான தருணத்தை உருவாக்கியது.

‘வா வரலாம் வா’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.பி.ஆர் தனது நண்பருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்து, அனைவரையும் நெகிழச் செய்துள்ளார். இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் எஸ்.பி.ஆரின் நண்பர் ஆறுமுகம், தனது நண்பரின் முதல் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, ஆரம்பம் முதலே துணையாக நின்று அனைத்து பணிகளையும் சொந்த பணியாகவே நினைத்து செய்துள்ளார்.

படப்பிடிப்பு முழுவதும் உணவு பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆறுமுகம், தரமான காய்கறிகள், சுகாதாரமான தண்ணீர், சுத்தமான எண்ணெய் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து உணவுகளை சமைத்து, வழங்கியுள்ளார். உணவு சுவையில் அசத்தியதுடன், ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி, படப்பிடிப்பு முடியும் வரை படக்குழுவினர் ஒருவருக்கு கூட சிறு மருத்துவ செலவுகள் கூட வராதவாறு கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்.

நண்பர் இயக்குநராக, தயாரிப்பாளராக களம் காணும் முதல் படம் என்பதால், வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையில் இரவு பகல் பாராது உழைத்த ஆறுமுகத்துக்கு, தயாரிப்பாளரும், மற்றொரு இயக்குனருமான எஸ்.பி.ஆர் உதவ முன்வந்த போதும், அதனை அன்போடு மறுத்துவிட்டார்.

இந்தநிலையில் நண்பர் ஆறுமுகத்துக்கு இன்ப அதிர்ச்சியாக, அவர் செய்து வரும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, மினி டிராக்டர் ஒன்றினை அன்பளிப்பாக இந்த இசை வெளியிட்டு விழாவின் வாயிலாக வழங்கி ஆறுமுகத்தின் உழைப்புக்கு பெருமை சேர்த்ததுடன், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக அன்பளிப்பை கொடுத்தது, அரங்கில் இருந்தவர்களுக்கு வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இவர்களின் நட்பு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.