ஜப்பான் ஸ்பெஷல் கார்த்தி பேட்டி

141

*படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா?*

ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை. இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கியிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தத் தேடலில் கிடைத்தது தான் இந்தத் தோற்றம், குரல் மாற்றம் எல்லாம்.

*பருத்திவீரனிலிருந்து ஜப்பான் வரை உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. ஜப்பானில் எனன் ஸ்பெஷல்?*

நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான பயணம் என்பதையும் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படமும் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்துக் கடந்து வந்திருக்கிறேன். தவறுகள் செய்யும்போது சரி செய்ய முயற்சித்திருக்கிறேன். இந்தப் பயணம் அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டது. அதனால்தான் 17 வருடங்களில் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன்.
இயக்குநர் தான் திரைக்கதையை எழுத வேண்டும், நம் பணி நடிப்பது மட்டுமே. அதனால் பல படங்களை ஒப்புக்கொண்டு நடித்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு படமும் நமக்குப் பிடித்தது போல, வெவ்வேறு வித்தியாசமான விஷயங்களை நாம் முயல் ஏதுவாக இருக்கும்படி தேர்வு செய்திருக்கிறேன். அதனால் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். முதலில் மக்களின் அன்பைப் பெறுவதே மிகப்பெரிய விஷயம். நம்மை பிடிக்க வைக்க முடியாது. நாம் இயல்பாக இருப்பது மக்களுக்குப் பிடிக்க வேண்டும். அப்படி அமைந்தது பெரிய ஆசிர்வாதம்.
25வது படம் மட்டுமல்ல, என் ஒவ்வொரு படமுமே ஒரு மைல்கல்லாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி இந்தப் படம் அமைந்ததில் மகிழ்ச்சி. ராஜு முருகன் மாதிரியான அழுத்தமான எழுத்தாளர், இலக்கிய வாசிப்பு இருப்பவர்கள் சினிமாவுக்கு வரும்போதுதான் நமக்கு வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்கள், சூழல்கள் கிடைக்கும். இந்த ஜப்பான் கதாபாத்திரத்தை அவர் எங்கு பார்த்திருப்பார், எப்படி இதை உருவாக்கினார் என்று ஆச்சரியப்பட்டேன்.
அவர் கம்யூனிச சித்தாந்தத்தைக் கொண்டவர் என்பதால் ஜோக்கர், குக்கூ என அவர் படங்களில் பொதுநலன் சார்ந்த விஷயங்களையே அதிகம் பேசியிருக்கிறார். அவர் நினைப்பதை ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்தில் சொல்லலாமே என்று யோசிக்கும்போதுதான் ஜப்பான் அமைந்தது. ட்ரெய்லர் பார்த்தவர்கள் இது ஒரு வழக்கமான மசாலா படமாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் கண்டிப்பாக அப்படி இருக்காது. நிறைய ஆச்சரியங்கள் இருக்கும். அந்த வகையில் பார்க்கும்போது இது எனது 25வது படமாக இருப்பதில் விசேஷமாக உணர்கிறேன்.

*ராஜு முருகன் சமுதாயத்துக்காக யோசிக்கும் இயக்குநர். ஜப்பானில் அப்படி என்ன செய்தி சொல்லியிருக்கிறார்?*

அவர் இயல்பிலேயே வழக்கமான கதைகளை படமாக எடுக்கக்கூடாது என்ற கொள்கையுடன் தான் இருக்கிறார். அதனால்தான் நிதானமாகத் தேடித் தேடிப் படம் எடுக்கிறார். சமீபத்தில் கூட அவர், ‘நான் கேமராவைக் கொண்டு போய் ரோட்டில் வைத்து படம் எடுப்பவன். எனக்கு இவ்வளவு பெரிய பொருட் செலவுடன் படம் எடுப்பது இதுவே முதல் முறை. புதிதாக ஒரு விஷயத்தைக் கற்கிறேன்’ என்று ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்படியான சிந்தனை கொண்டவர்களுக்கு பணம் மீது பெரிய நாட்டம் இருக்காது. மக்கள் அன்பின் மீது, வெற்றி மீது கவனம் இருக்கும். அவ்வளவு நேர்மையாக இருப்பவர்களுக்கு இன்னும் பெரிய வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை.
அப்படி ஒரு நபர் படம் எடுக்கும்போது நிச்சயமாக அது வழக்கமான ஒரு படமாக இருக்காது. கண்டிப்பாதி இதில் அவர் பாணியில் ஒரு விஷயம் இருக்கிறது. அது மிகச் சுவாரசியமாக இருக்கிறது. ஜப்பான் கெட்டவன் தான், ஆனால் இங்கு திருடன் என்று தனியாக ஒரு ரகம் இருக்கிறதா என்பதே ஜப்பானின் கேள்வி. இதைத்தான் ராஜு முருகன் சொன்னார். அந்தக் கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த மாதிரியான விஷயங்கள் தான் எனக்கு ஆர்வத்தைத் தூண்டின.

*சுனில், விஜய் மில்டன், ஜித்தன் ரமேஷ் என பெரிய நடிகர் கூட்டம் படத்தில் இருக்கிறதே?*

ராஜு முருகன் எழுதிய கதையில் மற்ற கதாபாத்திரங்களும் யூகிக்க முடியாத வகையில் நடந்து கொள்பவர்களே. வழக்கமாக இவர் இப்படியான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்று சொல்வார்கள் இல்லையா. அப்படி இல்லாத வகையில் நடிகர்கள் வேண்டும் என்று நினைத்தோம். அப்படித்தான் தேர்வு செய்தோம். வாகை சந்திரசேகர் அவர்களும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்திரசேகர் 21 வயதில் நாயகனாக நடித்தவர். இன்று வரை நடித்து வருகிறார்.
ஆனால் படப்பிடிப்பில் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை அர்ப்பணிப்போடு தருவார். அவர் கதாபாத்திரத்தின் பெயரே பேரின்பம். மிகவும் சுவாரசியமான, மக்கள் ரசிக்ககூடிய கதாபாத்திரம். அதிக கடவுள் பக்தி கொண்டவர் ஆனால் ஒரு திருடனோட சுற்றிக் கொண்டிருப்பார். இப்படி கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சுவாரசியமாக இருப்பதினாலேயே அதில் நடிக்க சுவாரசியமான நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

*உங்கள் ஜோடியாக நடித்த அனு இம்மானுவேல் கதாபாத்திரம் பற்றி சில வார்த்தைகள்…*

நடிக்க எளிதான கதாபாத்திரம் அல்ல. அவர் எப்படி இதில் பொருந்துவார் என்று நாங்கள் யோசித்தோம். ஆனால் இந்த கதாபாத்திரத்தை அவர் சரியாகப் புரிந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது. இந்த இரண்டு கதாபாத்திரங்கள் தனியாக சந்தித்து பேசிக் கொள்ளும் காட்சிகளில் ராஜு முருகன் அவ்வளவு அற்புதமாக வசனங்கள் எழுதியிருந்தார். அதை அவர் எப்படிப் பேசப் போகிறார் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் அவர் அதை சிறப்பாகப் புரிந்து கொண்டு நடித்தது ஆச்சரியமாக இருந்தது. ஒரு காட்சியில் அடிபட்டு எலும்பு முறிவே ஏற்பட்டது. அவர் பேக்கப் சொல்லியிருந்தால் யாரும் எதுவும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் அவர் தொடர்ந்து வலியுடனே நடித்தார். அந்த உண்மையான உழைப்பு பாராட்டப்படவேண்டியது.

*ராக்கெட் ராஜாவுக்கும் ஜப்பானுக்கும் என்ன ஒற்றுமை?*

மக்களுக்குக் கெட்டவனாக நடித்தால் பிடிக்கிறது என்று நினைக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏனென்றால் அதன் தன்மை அப்படி. அந்த சுதந்திரம் ராக்கெட் ராஜாவிலும் இருந்தது, இதிலும் இருக்கிறது. அதனால் இரண்டையும் ஒப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். பருத்தி வீரனுக்குப் பிறகு ஒரு கதாபாத்திரம் பேசும் எல்லா வசனங்களும் மாஸாக இருப்பது ஜப்பானில் தான்.
அந்த தோற்றம் முடிவு செய்தவுடனேயே எனக்கு பாதி நம்பிக்கை வந்துவிட்டது. ஒரு நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அந்தத் தோற்றத்தில் தெருவில் நடந்தேன். சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்து ’என்ன சார் புள்ளீங்கோ மாதிரி இருக்கீங்க’ என்று கேட்டனர். ‘அவங்களைப் பாத்துதான்யா காப்பி அடிச்சேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.