விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

168

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இதில் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை ஆர்.கே. செல்வா மேற்கொண்டிருக்கிறார்.

கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியாடிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 118 நாட்கள் நடைபெற்று முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கென பிரத்யேக புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இயக்குநர் பா. ரஞ்சித்… கதையின் நாயகன் சீயான் விக்ரம்… நாயகி மாளவிகா மோகனன்.. ஆகிய மூவரும் வித்தியாசமான ஒப்பனையில் வண்ண கண்ணாடி அணிந்து தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமும் பெரிதும் எதிர்பார்க்கும் படைப்பாக ‘தங்கலான்’ இடம் பிடித்திருக்கிறது. கதைக்களம்- கதை சம்பவம் நடைபெறும் காலகட்டம்- பிரபலமான நட்சத்திர நடிகர்கள்- திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள்- அனுபவமிக்க தயாரிப்பாளர்.. ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ திரைப்படம், உலகளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.