‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’: அதிகாரப் போட்டியில் சிக்கிய ஒரு மண்ணின் கதை நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகிறது

14

தமிழகத்தின் தவிர்க்க முடியாத நிலப்பரப்பான கொங்குப் பகுதியை பின்னணியாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், இது வரை சொல்லப்படாத கதையை விவரிக்கும், காட்டப்படாத களத்தை காண்பிக்கும் திரைப்படமான‌ ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ அதிகாரப் போட்டியில் சிக்கிய ஒரு மண்ணின் கதையை திரையில் பேசுகிறது. இப்படம் நவம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

திருமலை புரொடக்ஷன் பேனரில் கே. கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் இயக்கியுள்ளார். கொங்கு வட்டார மக்களின் வாழ்வியில் முறை, சிறு தெய்வ வழிபாடு நம்பிக்கை, அவர்களின் நிலத்தின் இன்றைய நிலமை பற்றி படம் பேசுகிறது. ஒரு கிராமத்தில் வாழ்த்து வந்த உணர்வை நிச்சயம் கொடுக்கும் நல்ல படமாக இது உள்ளது என்று இது வரை இத்திரைப்படத்தை பார்த்த எழுத்தாளர்களும் திரை பிரமுகர்களும் பாராட்டியுள்ளனர்.

புதிய சிந்தனைகள், புதிய நடிகர்கள், புதிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கூட்டணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடாவும்’ திரைப்படம், சமகால யதார்த்தத்தைப் பேசும் ஓர் உன்னதக் கதைக்களம். அதிகாரப் போட்டிகள், உழைப்புச் சுரண்டல் மற்றும் நிலவுரிமைப் போராட்டங்களை மிக நுட்பமாக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது.

இப்படத்தில் நல்லபாடனாக ‘பரோட்டா’ முருகேசன் நடிக்க கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவை ஜெ.டி. விமல் கவனிக்க, ‘மூடர்கூடம்’ நடராஜன் சங்கரன் (NTR) இசையமைத்துள்ளார். கலையை J K ஆண்டனியும் சண்டைப்பயிற்சியை ‘மாஸ்’ மோகனும், படத்தொகுப்பை சதிஷ் குரோசோவாவும் கையாண்டுள்ளனர். இணை தயாரிப்பு: அமராவதி

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுகவனம், “நிலத்தில் நன்றாக உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்றும் அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இம்மண்ணில் நிலங்களற்று உழைக்கும் மனிதர்களின் கதை தான் இது. ஒண்டிமுனி எனும் சிறு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் இவர்கள். அவர்கள் கொண்ட கடவுள் நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை, நல்லபாடனின் போராட்டம் உள்ளிட்டவற்றை இப்படம் பேசுகிறது. படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கிராமத்தில் வாழ்த்த உணர்வை கதை ஏற்படுத்தும். இது மக்களுக்கான கலை, நிச்சயம் மக்களை சென்றடையும் என நம்புகிறேன்,” என்று தெரிவித்தார். 

திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ திரைப்படம் நவம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.