ஹனு மேன் திரைப்படத்தின் மூலம், இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களை மறுபரிமாணம் செய்த தொலைநோக்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா (Prasanth Varma)மற்றும் ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) இணைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ‘மஹாகாளி’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மஹாகாளி’ படத்தின் நாயகியாக பூமி ஷெட்டி (Bhoomi Shetty) நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காட்சிப் பிரமாண்டத்திற்கான மேடையை அமைத்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 50% முடிவடைந்துள்ளதுடன், தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது. நட்சத்திர நடிகர்கள் இல்லாத இப்படத்தில், மிகப்பெரிய தயாரிப்பு செலவினை மேற்கொள்வதில் தயாரிப்பாளர்கள் எந்த தயக்கமும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகைகள் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டாலும், கதையின் உண்மைத்தன்மை மற்றும் ஆழத்தினை வெளிப்படுத்தும் கருமை நிறத்திலான புதிய முகத்தை தேர்வு செய்வதில் இயக்குநர் பிரசாந்த் வர்மா கதைக்கு உண்மையாகவும், உறுதியாகவும் இருந்துள்ளார்.
மஹாகாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீவிர தெய்வீக ஆற்றல் மற்றும் மர்ம அழகுடன் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. சிவப்பு மற்றும் பொன்னிறத்தில் தோன்றும் பூமி ஷெட்டி, தாயான மஹாகாளியின் ஆற்றல், அழிவு மற்றும் மறுபிறப்பின் இரட்டை முகங்களையும் பிரதிபலிக்கும் சக்தியின் வடிவமாக காட்சியளிக்கிறார். பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் புனித குறியீடுகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாகாளியின் பார்வை, கொந்தளிப்பு மற்றும் கருணையின் கலவையாக ஃபர்ஸ்ட் லுக் ஒளிர்கிறது.
“ஹனு மேன் யுனிவர்ஸிலிருந்து” என்ற டேக்லைன், இந்த படம் பிரசாந்த் வர்மாவின் விரிவடைந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த முக்கிய அத்தியாயம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் புராணம் மற்றும் நவீன சினிமா இணையும் இந்தியாவின் தனித்துவமான மித்திக் சூப்பர் ஹீரோ யூனிவர்ஸை உருவாக்கும் முயற்சி மேலும் வலுப்பெறுகிறது.
ஆர்கே துக்கல் ( RK Duggal) மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் ஆகியோரின் ஆதரவுடன், ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) ‘மஹாகாளி’யை மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது. பிரசாந்த் வர்மாவின் கற்பனை திறன் மற்றும் பூஜா அபர்ணா கொல்லூருவின் இயக்கமும் இணையும் இப்படம், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அடுத்த பெரிய சினிமா அனுபவமாக உருவாகிறது.