நியூட்டன் சினிமா தயாரிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் வழங்கும் “மயிலா”, 2026 ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக திரையிடப்படுகிறது.

14

நடிகை -எழுத்தாளர்-இயக்குனர் செம்மலர் அன்னம் அவர்களின் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான “மயிலா” திரைப்படத்தை, நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிப்பில் பிரபல திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் வழங்குகிறார். நியூட்டன் சினிமா தயாரித்த இப்படம், 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR)-வில் நடைபெறும் “பிரைட் ஃப்யூச்சர்” (Bright Future) பிரிவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8, 2026 வரை திரையிடப்படும் அனைத்து மொழித் திரைப்படங்களில் ஒன்றாக மயிலா படமும் திரையிடப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணியாகக் கொண்ட “மயிலா” திரைப்படம், தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது. அவளது மகளான சுடர் என்பவளின் பார்வையில், தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அன்பும் வேதனையும் தாங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை இப்படம் மூலம் பிரதிபலிக்கிறது.

“ மயிலா படம் மூலம் சொல்ல வரும் செம்மலரின் குரலா(கருத்து)னது தனித்துவமானது மற்றும் துணிச்சலானது,” என நியூட்டன் சினிமாவின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் ஆண்டோ சிட்டிலப்பிள்ளி கூறியுள்ளார். மேலும் கூறுகையில், “அவரது இந்த இயக்கம் உணர்ச்சிக் குவியல்களுக்கு மத்தியில், ஒரு ஆழமான சமூகப்பார்வையை முன் வைக்கிறது. இந்தக் கதையை ஆரம்பத்தில் இருந்து நம்பிய பா. ரஞ்சித், ஸ்ரீகர் பிரசாத், இயக்குநர் ராம் மற்றும் பிறருக்கு நன்றியுடன், செம்மலரை ஆதரிப்பதில் எங்களுக்கு பெருமை.” என்று கூறினார்.

இயக்குனர் பா ரஞ்சித் மயிலா படம் மற்றும் இயக்குனர் செம்மலர் அன்னம் பற்றி கூறுகையில் :

‘மயிலா’ எளிய பின்னணியிலிருந்து வரும் உழைக்கும் பெண்களின் வாழ்வியல் சிக்கல்களை; அவர்களின் மன ஓட்டத்தை; உலகை மிக அற்புதமாகப் பேசியிருக்கிறது. எளிய திரைமொழியில், மிக இயல்பாகவும் மிக நுட்பமாகவும் பேச வேண்டிய ஒரு பெண்ணுலகைப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் செம்மலர் அன்னம். படத்தில் திரைக்கலைஞர் மெலோடியும் சிறுமியும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த படைப்பின் மூலம் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறார் செம்மலர். ‘மயிலா’ ஒரு கவிதையைப்போல எனக்குள் அழகான பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது!’

இத்திரைப்படத்தில் மயிலாவாக மெலோடி டார்கஸ் நடித்துள்ளார். அவர் பத்தாண்டுகளுக்கும் மேலான மேடை அனுபவம் கொண்ட திறமையான நாடக நடிகையாவார். வி. சுடர்கொடி தனது முதல் திரைப்படப் பாத்திரமாக பூங்கொடியின் மகளாக மிக இயல்பாக நடித்துள்ளார். நடிகர்கள் பட்டியலில் மேலும் கீதா கைலாசம், சத்யா மருதானி, ஆட்டோ சந்திரன், RJ பிரியங்கா, மற்றும் ஜானகி சுரேஷ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இத்திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் வினோத் ஜானகிராமன் (ஒளிப்பதிவு), ஏ. ஸ்ரீகர் பிரசாத் (படத்தொகுப்பு), மீனாட்சி இளையராஜா (பின்னணி இசை மற்றும் Vocals), மற்றும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (ஒலியமைப்பு) ஆகியோர் இணைந்துள்ளனர்.

P.S.G கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கோயம்புத்தூர்)-யில் Visual Communication and Journalism துறையில் கல்வி பயின்று, சுயாதீன திரைப்பட இயக்குனர் அருண்மொழி சிவபிரகாசம் அவர்களிடம் பயிற்சி பெற்ற செம்மலர் அன்னம், பல புகழ்பெற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவரும் ஆவார். தங்கள் அடையாளம், தன்னம்பிக்கை மற்றும் எதையும் தாங்கும் குணம் ஆகியவற்றை பினைப்பாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த “மயிலா” திரைப்படம், செம்மலர் அன்னம் நடிகையிலிருந்து இயக்குனராக அவதரிப்பதற்கான முக்கியமான படைப்பாகும்.

நியூட்டன் சினிமாவிற்கு, “மயிலா” திரைப்படத்தின் மூலம் அதன் சமூக அடிப்படையிலான துணிச்சலான திரைப்பட முயற்சிகளால், உண்மையான இந்தியக் குரல்களை உலகளவில் கொண்டு செல்லும் அடுத்த கட்டமாக அமைந்துள்ளது.

நியூட்டன் சினிமா பற்றி

நியூட்டன் சினிமா சமூக நெறிகளை சவால் செய்யும், மற்றும் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கும் சிறப்பான கதைகளைச் சொல்லுகிறது. புறக்கணிக்கப்பட்டோரின் குரல்களை வலுப்படுத்துவதன் மூலம், இது உறவையும் மனிதாபிமானத்தையும் வளர்க்கிறது; மேலும் அமைதியான உலகை நோக்கி பாடுபடுகிறது. நிலைத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டின் அடிப்படையில், நியூட்டன் சினிமா, சினிமாக் கலை வழியாக சமூக, சுற்றுச்சூழல், மற்றும் பொருளாதார மாற்றங்களை ஊக்குவிக்கிறது.

திரைப்பட விவரங்கள்

தலைப்பு: மயிலா
மொழி: தமிழ்
வகை: டிராமெடி (Dramedy)
நேரம்: 97 நிமிடங்கள்
நாடு: இந்தியா
தயாரிப்பு நிறுவனம்: நியூட்டன் சினிமா
உலகத் துவக்க வெளியீடு: ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR) 2026 — பிரைட் ஃப்யூச்சர் பிரிவு