ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் ஓசை பிலிம்ஸ் வழங்கும் “அந்தோனி” முழுநீளத் திரைப்படம்.

49

ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், நாயகனாக கயல் வின்சன்ட் மற்றும் நாயகியாக காதலிக்க நேரமில்லை TJ.பானு ஆகியோருடன் பெரும்பான்மையான ஈழத்திரைக் கலைஞர்களும் பிரபல இந்தியக் கலைஞர்களும் இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கின்ற புதிய திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார் Maestro “ இசைஞானி” இளையராஜா அவர்கள்.

அந்தோனி திரைப்படமானது
இலங்கை – யாழ்ப்பாணத்தில் கடந்த 05.03.2025 ல் பூசையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 45 நாட்களுக்கு மேலாக இரவு பகல் பாராது படப்பிடிப்புகள் நடைபெற்று 30.04.2025 ல் நிறைவுபெற்றிருந்தது. திரைப்படத்தின் Post Production பணிகள் சித்திரைமாதம் படத்தொகுப்புடன் (எடிற்றிங்) வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுப் பின்னர் குரல்ப்பதிவுகள் (டப்பிங்) நிறைவுசெய்யப்பட்டு 10.08.2025ல் இசையமைப்புக்குத் தாயாராகியது. எமது ஈழத்தமிழ் சினிமாவுக்கு ஒரு உலகறிந்த இசையமைப்பாளரை ஒழுங்கு செய்வதே சிறந்ததாக இருக்கும் எனும் எண்ணம் படத்தயாரிப்புக் காலங்களிலேயே கலந்துரையாடப்பட்டதால் இசைஞானி இளையராஜாவே அவர்கள் இத்திரைப்படத்திற்கு தகுந்த இசையை வழங்குதல் சிறப்பாக இருக்கும் என்பது தீர்மானிக்கப்பட்டு அவரை அணுகுவது என்றிருந்தோம். அவ்வாறே அவரை கடந்த மாதம் அணுகிய வேளை கதையைக் கேட்டதும் எந்தவித மறுப்புமின்றி ஒத்துக்கொண்டார். அதேவேளை படத்தையும் பார்த்தார். இசையமைப்பு வேலைகள் இரண்டு நாட்களிலேயே ஆரம்பமாகி தற்பொழுது இறுதி நிலைக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரு காதல் கதைக்களத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைப்பதும் ஈழத்திரைப்படத்திற்கு இசையமைப்பதுவும் இதுவே வரலாற்றில் முதற்தடவையாகும்.

இந்தியாவில் பல மொழி திரைப்படங்களில் பல்வேறுபட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் எமது சிம்பொனி தொட்ட சிகரம் என பல கோடி மக்களால் போற்றப்படும் இசைஞானி இளையராஜா அவர்கள் ஈழத்தமிழ் மக்களின் திரப்படமான அந்தோனி திரைப்படம், இளையராஜா அவர்களின் 1524வது திரைப்படமாகவும் ஈழத்தின் முதற்படமாகவும் வரலாற்றில் பதிவாகிறது. தனது 82 வயதிலும் 1500 படங்களை தாண்டி, 8000 பாடல்களுக்கும் மேலாக இவரது இசை இன்று வரை உலகமெங்கும் மக்களை வாழ வைக்கும் உயிரோட்டமாகவே திகழ்கின்றது.

ஐரோப்பிய நாடுகளில் பல கோடி தமிழ் மக்களின் பார்வைக்காக காத்திருக்கும் “அந்தோனி” திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்கியிருக்கின்றனர். இதன் இணை இயக்குநராக கலைவளரி சக இரமணா இருப்பதோடு இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களாக ஓசை பிலிம்ஸ் நிறுவனர் கலைவளரி சக இரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் தயாரிக்கின்றனர். இணைத் தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ்) ஆகியோர் இணைந்து கொண்டிருப்பதோடு, லைன் புரடியூசராக விக்கி (கனா புரடக்‌ஷன்ஸ்) இணைந்து கொண்டிருக்கின்றார்.

இலங்கையில் வெளிவந்த திரைப்படங்களை பொறுத்தவரை தனித்தன்மை கொண்ட எமது மண் சார்ந்த சினிமாவை எடுத்து காட்டுகின்ற திரைப்படமாக இந்த அந்தோனி திரைப்படம் அமையும் என்பதால், இத் திரைப்படம் ஐரோப்பிய அளவிலும் உலகத்தமிழ் மக்கள் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கின்றது.

பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் அந்தோனி திரைப்படத்தின் மேலதிக இறுதிக்கட்ட (Post Production) பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்க வெளியீட்டு திகதி பற்றிய அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும் என்பதைத் தெரிவிப்பதோடு,
இசைஞானி இளையராஜா அவர்களின் பொன்விழாவான இன்று 13.09.2025ல் எமது அந்தோனி திரைப்படத்தின் இவ் அறிவிப்பை பெருமையுடன் உலகத்தழிழ் உறவுகளுக்கு அறியத்தருவதில் ஓசை பிலிம்ஸ் மற்றும் குறிஞ்சி கிறியேஷன் பெருமகிழ்வடைகிறது. நன்றி