உலக சுகாதார அமைப்பு வடிவமைத்துள்ள பாலியல் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பாலியல் மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை
உலக பாலியல் சங்கத்தின் (World Association for Sexology) முக்கிய அங்கமான ஏசியா ஓசியானியா பெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி( Asia-Oceania Federation of Sexology) அமைப்பின் துணைத் தலைவராக பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாலியல் நலம், பாலியல் உரிமைகள், பாலியல் நீதி, (Sexual Health, Sexual Rights, Sexual Justice) ஆகியவற்றை மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவைகளாக, உரிமைகளாக… கோடிக்கணக்கான மக்களின் ஆரோக்கியமான உடல் நலம் கருதி மக்களுக்கு சேவை செய்ய இந்த அமைப்பு (உலக அளவில்) செயல்படுகிறது.
இந்த அமைப்பின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஏ.ஓ.எப்.எஸ். அமைப்பின் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் ஃபாக்ஸ் ஆஸ்திரேலியாவில் இருந்து காணொலி மூலம் பேசியபோது கூறியதாவது:
சிய ஓசியானா அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதற்கு புதிய துணை தலைவராக தேர்வு பெற்றுள்ள டாக்டர் டி.காமராஜ் இந்தியாவில் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். இந்த திட்டங்கள் செயல்பட அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் டி.காமராஜ் கூறியதாவது:
பாலியல் மருத்துவத்தில் ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்வதும், பாலியல் நிபுணர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
பாலியல் நலம் என்பது பால் உறுப்புகள் மற்றும் பாலியல் நடவடிக்கை தொடர்பான ஆரோக்கியம் பற்றியதாகும். பாலுறவு மூலம் பரவும் நோய்கள் தடுப்பு, தேவையற்ற கருவுறுதல், பாலுறவு சார்ந்து எடுக்கும் முடிவுகளில் அதிக கட்டுப்பாடு போன்றவையும் பாலியல் நலத்தில் அடங்கும்.
மனிதனின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம்…இந்த மூன்றையும் வழக்கமாக குறிப்பிடுவார்கள். இவற்றோடு பாலியல் நலமும் அடிப்படை தேவையாக சேர்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் பாலியல் நலம் முக்கியம். அதோடு பாலியல் ரீதியான வன்முறை, கொடுமைகளை தடுப்பதும் முக்கியம்.
இன்று பரவலாக எல்லா தரப்பிலும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 70 கோடி மக்கள் இணையதளங்களை பயன்படுத்தி வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் ஆன்லைன் வழியாக துன்புறுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாக இருக்கிறது.
இணைய தள வசதிகள் அதிகரித்து விட்டதால் பரவலாக ஆபாச படங்கள் பார்ப்பது அதிகரித்து விட்டது. இதனால் தேவையற்ற பாலியல் ரீதியான குழப்பங்கள், பிரச்னைகள், சிக்கல்கள், சுரண்டல்கள் சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.
ஆபாச படங்களுக்கு அடிமையாகும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல கொரோனா பரவலுக்குப் பிறகு ஆண்களின் விந்தணு எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது எதிர்கால மனித சமூகத்திற்கு சவாலாக அமையலாம்.
இதைவிட மிகப்பெரிய சமூக சிக்கலாக மாறி வருகிறது போதைப்பொருள் பழக்கம். இந்தியா முழுவதும் இளம் வயதினர் போதை பொருள் பயன்படுத்துவது சகஜமாக மாறி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி, கல்லூரி மட்டுமல்லாமல் சினிமா துறையிலும் போதை கலாச்சாரம் வேரூன்றி விட்டது.
இன்டர்நெட், போதைப்பொருள் என்று ஏதாவது ஒரு போதைக்கு அடிமை ஆவது நமது சமூகத்திற்கு நல்லதல்ல. இதிலிருந்து மக்களை மீட்பதற்கு மருத்துவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பாலியல் வறட்சி தான் பல குற்றச் செயல்களுக்கு காரணமாகிறது. பாலியல் உறவு குறித்த புரிதல், அறிவியல் மனப்பான்மை இல்லாதது இன்றைக்கு சமூகத்தில் நடக்கும் பல பாலியல் கொடுமைகளுக்கும், தொல்லைகளுக்கும், சீண்டல்களுக்கும் காரணம்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்றுகிறார்கள் இவர்கள் அதிக நேரம் மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்துவதால் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படலாம் என்பதை எங்களைப் போன்ற பாலியல் மருத்துவர்கள் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இறுக்கமான ஆடைகள், காற்றோட்டம் இல்லாத உடைகள் ஆண்களுக்கு நல்லதல்ல. அதிக வெப்பம் மிகுந்த இடங்களில் பணியாற்றும் ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
இந்தியா முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சமீபகாலமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகிறது. இளம் தம்பதியர் இணக்கமாக வாழ முடியாமல் உடனே பிரிந்து போக விரும்புகிறார்கள்.
குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, விந்து முந்துதல், தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாதது, பயம், தயக்கம், தேவையற்ற கருவுறுதல், அபார்ஷன், திருமணத்தை தவிர்ப்பது, அதிகப்படியான பாலியல் நடவடிக்கைகள்…ஆகிய பிரச்னைகளுக்கு சிறந்த முறையில் வழிகாட்டுவது பாலியல் நிபுணர் கடமையாகும்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாலியல் நடத்தைகளை புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு சரியான முறையில் உதவவும் டிராஃபிக் சிக்னல் முறையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் அறிமுகம் செய்து உள்ளனர்.
இவ்வாறு டாக்டர் டி.காமராஜ் கூறினார்.
பேட்டியின்போது உலக பாலியல் சங்கம் சார்பாக டாக்டர் கே.எஸ்.ஜெயராணி கூறியதாவது:
பாலியல் கல்வி என்பது அசிங்கமானது என்று பலரும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். நம் நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரியும், அந்தந்த வயதுக்கு ஏற்ற மாதிரியும் வாழ்வியல், ஆரோக்கிய கல்வியை உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தயாரித்து உள்ளன.
இந்த மாதிரியான கல்வியை சில நாடுகளில் அமல்படுத்தியுள்ளதால் அங்கு பாலியல் தொடர்பான குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
எனவே, நம் நாட்டிலும் நமது கலாச்சாரத்திற்கு ஏற்றமாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள பாலியல் கல்வியை உடனே மத்திய, மாநில அரசுகள் உடனே நடைமுறைப் படுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ஜெயராணி காமராஜ் கூறினார்.