சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்!

18

பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்!

இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் இந்திய திரைவானின் உச்சநட்சத்திரமான கமல்ஹாசன்.

இந்தச் சந்திப்பைக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன்,

சினிமா தொடங்கி கணினித் துறை வரை உபகரணங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால், அடுத்து என்ன என்கிற நமது தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘ஒரு சமயத்தில் ஒரு கேள்வி’ என்ற முறையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கவிருக்கும் அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. க்யூரியாசிடி கில்ஸ் த கேட் என்று ஆங்கிலத்தில் ஒரு மரபுத் தொடர் உண்டு. ஆனால், இங்கே க்யூரியாசிடி பூனையைக் கொல்லவில்லை; அரவிந்த் ஸ்ரீநிவாஸை உருவாக்கியிருக்கிறது! என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

அரவிந்த் ஶ்ரீநிவாஸ் ட்வீட்

கமல்ஹாசன் அவர்களுடனான சந்திப்பைப் பற்றி, பெர்ப்லெக்ஸிடி தலைமைச் செயலதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிடும்போது, “பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்னும் கற்பதிலும், அசுரத்தனமாக வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தை திரைப்பட உருவாக்கத்தில் இணைத்துக்கொள்வதிலும் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் பிறருக்கு முன்னுதாரணமானது. நீங்கள் இப்போது பணியாற்றிவரும் ‘தக் லைஃப்’ திரைப்படமும், அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.