‘தலைவன் நீயே, தொண்டன் நானே’… விஜய்க்காக நடிகர் சௌந்தரராஜா உருவாக்கும் ஆல்பம் பாடல்

20

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மரம் வளர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சௌந்தரராஜா இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இதுதவிர நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியானது முதலே சௌந்தரராஜா அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த சௌந்தரராஜா, பிறகு கட்சியின் கொடி வெளியிட்டதும் அதனை மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பாக வழிபாடு நடத்தி இருந்தார். பின்னர் மாநாட்டுக்கு சைக்கிள் பேரணி ஆகியவற்றை முன்நின்று செய்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக ‘தலைவன் நீயே, தொண்டன் நானே…’ என்ற தலைப்பில் ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கும் பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த பாடலுக்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. டாக்டர் நந்துதாசன் நாகலிங்கம் இந்த பாடலை எழுத, சந்தோஷ் இசையமைக்கிறார்.

நிரோஜன் இயக்க இருக்கும் இந்த பாரலுக்கு நடன இயக்குநராக பிரசாந்த், புகைப்பட கலைஞராக சக்தி பிரியன் ஆகியோர் பணியாற்ற உள்ளார்கள். இந்தப் பாடலில் நடிகர் சௌந்தரராஜா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மதுரை டூரிங் டாக்கீஸ் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இப் பாடல் தொடர்பான இதர விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.