உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘எனை சுடும் பனி’ மார்ச் 21 ஆம் தேதி வெளியாகிறது!

29

இயக்குநர் ராம் சேவா இயக்கத்தில், எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிப்பில், நட்ராஜ் சுந்தர்ராஜ் நாயகனாகவும், உபாசனா நாயகியாகவும் நடிக்கும் படம் ‘எனை சுடும் பனி’. இதில் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, தலைவாசல் விஜய், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, சிங்கம் புலி, சித்ரா லட்சுமணன், மனோ பாலா, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வரும் மார்ச் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் செனையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றி தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

படம் குறித்து இயக்குநர் ராம் சேவா கூறுகையில், “பொள்ளாச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். பொள்ளாச்சி சம்பவம் என்றதும் பாலியல் குற்றம் என்று நினைக்க வேண்டாம். பொள்ளாச்சியில் நடந்த மற்றொரு சம்பவம் இது. இந்த படத்தை முடிந்து, வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது, இதற்கு காரணம் தயாரிப்பாளர்கள் தான். மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தை முடித்திருக்கிறார்கள். கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம், நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “எனை சுடும் பனி படத்தின் தயாரிப்பாளர்களை தான் முதலில் பாராட்டியாக வேண்டும். தன் மகனுக்காக வெளிநாட்டில் இருந்து வந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். அவர்கள் படம் தயாரிக்க தொடங்கியதில் இருந்தே, நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள், ஆனால் அனைத்தையும் எப்படியோ சமாளித்து இன்று படத்தை முடித்திருக்கிறார்கள். இன்றைய நிகழ்வில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள், ஆனால் முடியாமல் போய்விட்டது. சிறிய படங்களும் இப்போது ஓட தொடங்கியிருக்கிறது. அந்த வரிசையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள், என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ராம் சேவா நன்றாக இயக்கியிருக்கிறார். நாயகன் நட்ராஜ் இந்த படத்தை முடித்து தான் திருமணம் செய்து கொள்வேன், என்று இருக்கிறார். நாயகி உபாசனாவும் நன்றாக நடித்திருக்கிறார்.” என்றார்.

நடிகர் சித்ரா லட்சுமணன் படம் குறித்து கூறுகையில், “இந்த படத்தில் நான் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ராம் சேவா இயக்கிய அனைத்து படங்களிலும் நான் நடித்திருக்கிறேன். இதுபோன்ற சிறு முதலீட்டு படங்களால் தான் திரைத்துறை தொழிலாளர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய படங்கள் வருடத்திற்கு 10 படங்கள் தான் வெளியாகிறது, ஆனால் இதுபோன்ற சிறிய படங்கள் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்கள் வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இது முதல் படம் என்றாலும், அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் போல், மிக சிறப்பாக தயாரித்திருக்கிறார். எங்களையும் நல்லபடியாக கவனித்து, சரியான நேரத்தில் சம்பளம் கொடுத்தார். இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் வெற்றி பெற வேண்டும், தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும்.

கதையாசிரியர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒருவரது கதையை வாங்கி, அதற்கு மற்றொருவர் திரைக்கதை அமைத்து, அதை ஒருவர் இயக்கினார், அவர்களின் கூட்டு முயற்சியினால் அந்த படம் மிக சிறப்பாக வரும் என்பது என் கருத்து. சினிமாவில் கூட்டு முயற்சியினால் தான் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். எனவே கதையாசிரியர்களை அங்கீகரித்து, அவர்களுடைய படைப்புகளை பெற்று இயக்குநர்கள் படம் இயக்க வேண்டும், என்பதை நான் வேண்டுகோளாகவே வைக்கிறேன்.” என்றார்.

படத்தின் நாயகன் நட்ராஜ் சுந்தராஜ் பேசுகையில், “இந்த படத்தில் நான் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். ஐபிஎஸ் படிக்கும் போது ஜாலியாக இருக்கும் இளைஞன், பக்கத்து வீட்டு பெண்ணான நாயகியுடன் காதல் என்று ஒரு பக்கம் ஜாலியாக கதை பயணித்தாலும், மறுபக்கம் பாக்யராஜ் சார் மூல்ம் கிரைம் சஸ்பென் திரில்லர் ஜானரில் ஒரு கதை பயணிக்கும். இரண்டு கதைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பது தான் படம். படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. மார்ச் 21 ஆம் தேதி வெளியாகிறது, உங்கள் ஆதரவு வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

நாயகி உபாசனா பேசுகையில், “இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி. மறைந்த மனோ பாலா சாரின் மகளாக நடித்திருக்கிறேன். அவருடன் நடித்தது மகிழ்வான தருணங்கள். சிறிய படம் என்று சொன்னார்கள், இதுபோன்ற சிறிய படங்களுக்கு ஊடகத்தினர் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

இப்படத்தின் இயக்குநர் ராம் சேவா, தனது அடுத்த படத்தை முழுக்க முழுக்க லண்டனில் படமாக இருக்கிறாராம். அதற்காக விரைவில் லண்டன் பயணிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.