ஈரானிய படங்களுக்கு நிகராக தமிழில் உருவாகியுள்ள ‘ஹபீபி’

17

நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹபீபி’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் இந்தப்படத்தை வெளியிடுகிறது. ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மீரா கதிரவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. சமீபத்தில் ஹபீபி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

ஈஷா என்கிற இளைஞன் இதில் அறிமுகமாக, இயக்குனர் கஸ்தூரிராஜா ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘ஜோ’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மாளவிகா மனோஜ் இதில் நாயகியாக நடித்திருக்கிறார்.

கவிஞர் யுகபாரதி பாடல்கள் எழுத, இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடித்தவர்களில் ஒருவரான சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் ஒரு சிறப்பம்சமாக நவீன AI தொழில்நுட்பத்தில் இசை முரசு நாகூர் E.M ஹனீஃபா அவர்களின் குரலில் ‘வல்லோனே வல்லோனே’ என்கிற பாடலையும் இந்தப்படத்திற்காக உருவாக்கி இருக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறுகையில், “உலகம் முழுவதும் சுமார் 250 கோடி இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் சமூக பொருளாதார வாழ்வியல் சூழலை மையப்படுத்தி ஆயிரக்கணக்கான படங்கள் வருகின்றன. இந்தியாவிலும் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை. பேசுகிற படங்கள் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் தொடர்ந்து வெளி வருகிறது. அதற்கான ஒரு வியாபாரம் தளமும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. தமிழ் திரைப்பட வரலாற்றில் தமிழகச் சூழலில் அந்த இடம் நிரப்பப்படவில்லை என்றே கருதுகிறேன். ஆகவே தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முழுமையான இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையைப் பேசுகிற சினிமாவாகவும் அதேவேளை, எல்லோருக்குமான சினிமாவாகவும் இதை உருவாக்கியிருக்கிறேன்.

ஏற்கனவே நவீன AI தொழில்நுட்பத்தில் மறைந்த மலேசியா வாசுதேவன், எஸ் பி பாலசுப்ரமணியம், சாகுல் அமீது , பம்பா பாக்கியா முதல் பலரின் குரலையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த வரிசையில் ‘வல்லோனே வல்லோனே’ பாடலில் ஏறக்குறைய நாகூர் E.M ஹனீஃபாவின் குரலை கொண்டு வந்திருக்கிறோம் என்பதை பாராட்டுக்களின் வழியாக அறிகிறோம்/

உலக சினிமா என்கிற வார்த்தையை உச்சரிக்கும்போது ஈரான் என்கிற நாடு நம் எல்லோருடைய நினைவுக்கும் வரும். உலகம் முழுவதும் அந்தத் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் உண்டு.. அப்படி ஒரு படைப்பாக ‘ஹபீபி’யை நம் ரசிகர்களுக்கு தர முயற்சித்து இருக்கிறோம்” என்கிறார்.

சித்திரம் பேசுதடி, படத்தில் தொடங்கி இப்போது ஜெயம் ரவியின் ஜீனி வரை மோஸ்ட் வான்டட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் மகேஷ் முத்துசுவாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.. தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்கிறார். மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த மாலிக் படத்திற்காக கேரள அரசின் சிறந்த கலை இயக்குனர் விருதை பெற்ற அப்புன்னி சாஜன் என்பவர் இந்த படத்தின் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

விரைவில் ‘ஹபீபி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

மக்கள் தொடர்பு ; A.ஜான்