சூரியாவின் ‘கங்குவா’ படத்துடன் வெற்றிப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபயர்’ டீசர் நவம்பர் 14 அன்று திரையிடப்படுகிறது
பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் முன்னோட்டம் (டீசர்) சூரியா நடித்துள்ள ‘கங்குவா’ படத்துடன் நவம்பர் 14 முதல் திரையரங்குகளில் காண்பிக்கப்பட உள்ளது.
முன்னதாக, இன்று (நவம்பர் 13) மாலை முன்னணி திரை பிரபலங்கள் ‘ஃபயர்’ டீசரை சென்னையில் வெளியிட்டனர்.
‘ஃபயர்’ திரைப்படத்தை இதுவரை பார்த்துள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகள் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்சார் போர்டின் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் சென்சார் அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. சமுதாயத்திற்கு தேவையான துணிச்சலான கருத்துடன் உருவாகியுள்ள ‘ஃபயர்’, வயது வந்த அனைவரும் கட்டாயம் காண வேண்டிய படமாக அமையும்.
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் ‘ஃபயர்’ திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த ஜே எஸ் கே, “இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும்,” என்று கூறினார்.
ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரும் பிரபல வசனகர்த்தவுமான எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை சி எஸ் பிரேம் குமாரும் கலை இயக்கத்தை தேவராஜும் கையாள, பாடல்வரிகளை ‘கே ஜி எஃப்’ புகழ் மதுரகவி இயற்றியுள்ளார், மானஸ் நடனம் அமைத்துள்ளார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஃபயர்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும் என்று ஜே எஸ் கே நம்பிக்கையுடன் தெரிவித்தார்.