”புகழுக்கு பின்னால் ஓடும் ஆள் அல்ல ‘மெய்யழகன்’ இயக்குனருக்கு கார்த்தி புகழாரம்

53

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ……….. ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘மெய்யழகன்’ படம் வரும் செப்-27 (புரட்டாசி 11) ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் ( Traser ) வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி, அர்விந்த் சாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகை தேவதர்ஷினி பேசும்போது,

“96 படத்தின் இயக்கனருடன் அடுத்த படம் இது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்கும்போது, இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என இயக்குநர் பிரேம்குமார் கூறியதும் இரண்டு நாட்களுக்கு எனக்கு பேச்சே வரவில்லை. இந்த படத்தில் இருந்து ஒவ்வொருவரும் எதையோ ஒன்றை எடுத்துக் கொள்வீர்கள். 96ல் நமக்கு நடந்த அனுபவம் இதிலும் வேறு விதமாக தொடரும். பொதுவாக யாராவது ஒரு பெண்ணிடம் நீ என்ன ஐஸ்வர்யா ராயா என்றால் அதே போல ஆணிடம் நீ என்ன அர்விந்த்சாமியா என்று கேட்பதுதான் வழக்கம். அந்த அளவிற்கு கல்லூரியில் படிக்கும்போது அர்விந்த்சாமியின் தீவிர ரசிகையாக இருந்தேன். எங்களது கல்லூரி நிகழ்ச்சிக்கு ஒருமுறை அவர் வந்த போது அவரை எப்படியாவது பார்த்து விட பல வழிகளில் முயன்றேன். ஆனால் அவரது கால் நகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் இன்று அவருடனேயே இணைந்து நடித்திருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. நான் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடிப்பது குறித்து எனது சில கல்லூரி தோழிகளுக்கு மெசேஜ் அனுப்பிய போது சில பேர் கோபத்தில் என்னை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர். இதுவரை தமிழ் திரைப்படங்கள் பார்த்த எல்லோருக்குமே கார்த்தி இந்த படத்தில் செய்திருக்கும் கதாபாத்திரம் மிகமிக பிடித்தமான ஒன்றாக மாறிவிடும். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக நியாயம் செய்துள்ளார் கார்த்தி” என்றார்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜ் பேசும்போது,

“கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அர்விந்த்சாமி சார் எங்களை திருச்சியில் விருந்துக்காக அழைத்துச் சென்றார். அங்கே தான் அவருடைய வேறு ஒரு முகத்தை முதன்முறையாக பார்த்தேன். எங்களை மட்டும் அல்லாமல் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரையும் அக்கறையுடன் விசாரித்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒரு சாதாரண நாள் அன்று சிறப்பு நாளாக மாறிவிட்டது. அப்படி அவர் காட்டிய சின்ன சின்ன அன்பை உண்மையிலேயே மறக்க முடியாது. இந்த படத்தை பார்த்ததும் கார்த்தி சாரை போன்ற ஒருத்தர் நம் கூடவே வாழ்நாள் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும் என்று உணரும்படியாக அவரது கதாபாத்திரம் இருக்கும். அதை நாங்கள் படப்பிடிப்பில் நிஜத்திலேயே உணர்ந்தோம். கார்த்தி, அரவிந்த்சாமி, பிரேம்குமார் இந்த மூன்று பேர் கூட்டணியில் உருவாகும் படத்தில் என்னுடைய பங்கும் ஒன்று இருக்கிறது என சொல்லிக் கொள்வதில் உண்மையாகவே நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசும்போது,

“2டி நிறுவனத்துடன் 36 வயதினிலே படத்தில் முதன்முறையாக இணைந்தோம். அதற்கு அடுத்ததாக இப்போது மெய்யழகனில் இணைந்துள்ளோம். 96 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம்குமாருடனும் இது எங்களுக்கு இரண்டாவது படம். அதேசமயம் கார்த்தி சாருடன் எங்களுக்கு இது ஐந்தாவது படம். இந்த படத்தை பார்த்துவிட்டு அதிலிருந்து ஒரு வாரம் என்னால் வெளியே வரவே முடியவில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது, என்னுடைய உறவினர்கள் அனைவரும் இருப்பது எல்லாமே சென்னையில் தான். ஆனால் மெய்யழகன் படத்தை பார்த்தபோது தீபாவளி, பொங்கல் நல்ல நாட்களை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போகிறவர்களின் உணர்வை என்னால் அழகாக புரிந்து கொள்ள முடிந்தது. மெய்யழகன் படத்தின் பாடல்கள் இந்த வருடத்தின் சார்ட் பஸ்டர் ஆக அமையும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,

“சென்னையை இரண்டாவது தாய்மடி என்று சொல்வார்கள். என்னதான் இங்கே எல்லாமே கிடைத்தாலும் நமக்கு சொந்த ஊரில் தான் அதிகம் கிடைத்திருக்கிறது. விசேஷ நாட்களில் இங்கிருந்து நாம் சொந்த ஊருக்கு செல்லும் போது அந்த ஊருக்கும் நமக்குமான பிணைப்பு, அப்பா அம்மாவுக்கும் நமக்குமான பிணைப்பு என இந்த விஷயத்தை மிகச் சரியாக, மிக நுட்பமாக கையாண்ட திரைப்படம் இதுவரைக்கும் எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஒன்று நகரத்தை நோக்கிய படமாக இருக்கும். அல்லது கிராமத்தை நோக்கிய படமாக இருக்கும். கிராமத்தையும் நகரத்தையும் பக்காவாக இணைத்துள்ள படம் தான் இது.

ஒரு நகரவாசியாக இந்த மெய்யழகன் படத்தை உங்களால் நூறு சதவீதம் ரசிக்க முடிந்தால் முழுக்க முழுக்க கிராமத்தில் இருக்கும் ஒருவராலும் இந்த படத்தை அழகாக ரசிக்க முடியும். எல்லோரும் வாசித்து மனதில் பதிந்த பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக எடுத்தார்கள். ஆனால் இந்த மெய்யழகன் படத்தைப் பார்க்கும்போது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமமாக இருக்கும். படம் வெளியான பிறகு அர்விந்த் சாமியை ஒரு நடிப்பு அரக்கனாக பார்க்க முடியும். அவரது கதாபாத்திரத்தை அந்த அளவிற்கு வியந்து பார்ப்பீர்கள். இந்த படத்தின் ஒரு இடத்தில் கூட சோகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும்போது பல இடங்களில் உங்களை அறியாமலேயே அழுவீர்கள். நல்ல படங்களை பார்த்ததும் அதை உச்சி முகர்ந்து வரவேற்கும் பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் றெக்கை கட்டி பறப்பார்கள்” என்று கூறினார்.

நடிகை ஸ்ரீதிவ்யா பேசும்போது,

“96 படம் எந்தவிதமான மேஜிக்கை நிகழ்த்தியது என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த படம் அதுபோல என்ன செய்யப் போகிறது என்று பார்ப்பதற்கு உங்களை போல நானும் ஆவலாக இருக்கிறேன். எனக்கு ரொம்ப நாள் கழித்து இந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிடித்திருக்கிறது. கமல்ஹாசனின் அருமையான பாடல் வேற லெவலில் இருக்கிறது. கேட்கும் போதெல்லாம் அழுது கொண்டே இருந்தேன். என்னை அறியாமலேயே என் சின்ன வயதிற்கு சென்று விட்டேன். அம்மா ஞாபகம் வந்துவிட்டது. அந்த உண்மையான அன்பை அதற்குப் பிறகு இப்போது வரை அனுபவித்ததில்லை. இதுவரைக்கும் அந்த உண்மையான அன்பை தேடிக்கொண்டே இருக்கிறேன். அது கிடைத்ததில்லை. அதை இந்த பாடல் தொட்டது. இந்த படத்தில் நானும் ஒரு பாகமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது,

“96 படத்திற்கு பிறகு 6 வருடம் கழித்து இப்போதுதான் மீடியா முன் நிற்கிறேன். கடந்த நவம்பர் மாதம் படத்தை தொடங்கி இந்த செப்டம்பரில் அதுவும் ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்கிறோம். 96 படத்தில் நடித்த நட்சத்திரங்கள் யாரும் இந்த படத்தில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு தேவதர்ஷினியை தவிர வேறு யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. அதேபோல முதலில் இந்த படத்தில் இருக்கும் ஒரு தங்கை கதாபாத்திரத்திற்காக ஸ்ரீதிவ்யாவை அணுகினோம். அந்த சமயத்தில் அவரிடம் தேதிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆறு மாதம் கழித்து இப்போது அவர் நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக அணுகியபோது உடனே ஓகே சொன்னார். இந்த நேரத்தில் ஏன் இந்த படம் என்றால்..!
சமீப காலமாக சோசியல் மீடியாக்களிலும் வெளியிடங்களிலும் வெறுப்பு சிந்தனை பரவி வருவதை பார்க்க முடிகிறது. அன்பு தான் இதை மாற்றும். இந்த படம் அன்பை பற்றி பேசுகிறது. படத்தின் டைட்டிலில் இருந்து எல்லா விஷயங்களிலும் தமிழை முன்னிலைப்படுத்தி இருப்பதற்கு காரணம் தமிழ் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டே இருக்கிறது. மெய்யழகன் படம் அதை மாற்ற முயற்சி செய்யும்” என்று கூறினார்.

நடிகர் அர்விந்த்சாமி பேசும்போது,

“இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தை என்னை மனதில் வைத்துக்கொண்டு எழுதியதற்காக பிரேம் குமாருக்கு நன்றி. இது என் வாழ்க்கையில் நடந்த கதை. என்னை பாதித்த கதை. இப்போதும் பாதிக்கின்ற ஒரு விஷயம். அது பற்றி பட ரிலீசுக்கு பிறகு பேசுகிறேன். கார்த்தியுடன் இந்த படத்தில் நடித்த போது மட்டுமல்ல, அதன் பிறகு தற்போது வெளியேயும் நல்ல உறவில் நெருக்கமாகி விட்டோம். கார்த்தி அண்ணா என்னைப் பற்றி உங்களிடம் ஏதாவது சொல்வார். ஆனால் அதை எல்லாம் நம்பாதீர்கள். அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் கேட்பதாக சொன்னீர்கள் ஆனால் அப்படி கேட்பவர்களுக்கு என்னைப் பற்றி சரியாக தெரியாது என்று நினைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.

நடிகர் கார்த்தி பேசும்போது,

“96 எல்லோருக்கும் பிடித்த படம். கதை, உரையாடல் என ஒவ்வொரு விஷயத்தையும் பிரேம்குமார் பார்த்து பார்த்து இழைத்திருந்தார். அந்த படம் வெளியான பிறகு ஒரு நாள் ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் தான், பிரேம்குமார் இப்படி மெய்யழகன் படத்திற்காக பிரேம் ஒரு கதை வைத்திருக்கிறார் என என்னிடம் கூறினார். உடனே அவரை நானே நேரில் தொடர்பு கொண்டு பேசினேன். 96 படம் வெளியான பிறகு இந்த கதைக்காகவே ஆறு வருடங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் பிரேம் குமார். எப்படி அவரை தயாரிப்பாளர்கள், மற்ற ஹீரோக்கள் விட்டு வைத்தார்கள் என தெரியவில்லை. இதிலிருந்தே அவர் புகழுக்கு பின்னால் ஓடும் ஆள் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படி பொருட்காட்சியில் இருக்கும் ஒரு அரிய பொருளை போன்றவர் அவர்.

இந்த ஸ்க்ரிப்ட்டை படிக்கும்போதே எனக்கு கண்ணீர் கொட்டியது. அனேகமாக கோவிட் சமயத்தில் இந்த கதையை பிரேம் எழுதியிருப்பார் போல. எல்லோருக்குமே ஒரு தேடல் இருக்கிறது. தீபாவளி, பொங்கல் என சென்னையில் இருந்து எல்லோருமே ஊருக்கு செல்கிறார்கள். சென்னையே காலியாகி விடுகிறது. அந்த அளவிற்கு மக்கள் சொந்த ஊரை நேசிக்கிறார்கள். எல்லோரும் இந்த படத்தில் எப்படி நடித்தீர்கள் என கேட்கிறார்கள். ஆனால் இது எவ்வளவு கமர்சியலான படம், இதில் ஏன் நான் நடிக்க கூடாது ? கைதி படத்தில் நடித்தபோது முழுக்க முழுக்க இரவு நேர படப்பிடிப்பு தான். லோகேஷ் கனகராஜ் சண்டைக் காட்சிகளாக கொடுத்து பெண்டு நிமிர்த்தி விட்டார் அதற்கடுத்து இப்போது இந்த மெய்யழகன் படத்தில் தான் பல நாட்கள் இரவு நேர படப்பிடிப்பில்ல் கலந்து கொண்டேன். ஆனால் இதில் சண்டைக்காட்சி ஒன்று கூட இல்லை.

நானும் அர்விந்த்சாமி சார் பேசும்போது கூட இந்த காட்சிகளில் இருக்கும் உணர்வுகளை அப்படியே குறையாமல் திரையில் கொண்டு வந்தாலே இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம். படம் முழுவதும் அத்தான் அத்தான் என அரவிந்த்சாமியை டார்ச்சர் செய்யும் ஒரு கதாபாத்திரம் எனக்கு. திண்டுக்கலில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கே உள்ள பேமஸான ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காலை 8 மணிக்கே பிரியாணி வாங்கி கொடுத்து அசத்தினார்.

96 படத்தின் காதலே காதலே பாடல் இப்போதும் பலரது ரிங்டோன் ஆக இருக்கிறது. அதுபோல மெய்யழகன் பாடலையும் ஊருக்குப் போகும்போது கேட்டுக்கொண்டே போவார்கள். இந்த பாடலுக்கு கமல் சாரே ஏற்படுத்திய வேல்யூவுக்கு நன்றி. ராஜா சார் காதல் இல்லாமல் பிரேம்குமார் கதையை எழுதவே மாட்டார்.. இதிலும் அது நடந்திருக்கு” என்று கூறினார்.