க்ளாஸ் மேட்ஸ் சினிமா விமர்சனம்

91

முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.அங்கையற்கண்ணன் தயாரித்து க்ளாஸ்மேட்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குட்டிப்புலி ஷரவண சக்தி

இதில் அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.கால் டாக்சி டிரைவரான புது மாப்பிள்ளை அங்கையற்கண்ணன் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தனது மாமா ஷரவணசக்தியுடன் சேர்ந்து மது குடிக்க செலவிடுகிறார். இருவரும் மதுக்கு அடிமையாகி தங்கள் மனைவிகளை சந்தேகப்பட குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டு இரு குடும்பமும் பாதிக்கப்படுகிறது. இதனிடையே மதுபிரியராக இருந்து மது பழக்கத்தை விட்டு நல்ல மனிதராக குடும்பத்தோடு சந்தோஷமாக வாழும் மயில்சாமியை அங்கையர்கண்ணனும், ஷரவணசக்தியும் சேர்ந்து மயில்சாமியை மீண்டும் குடிக்க வைத்துவிடுகிறார்கள். இதனால் இந்த மூன்று பேர் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? தவறை உணர்ந்து மதுப்பழக்கத்தை கைவிட்டார்களா? என்பதே மீதிக்கதை.

ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் அவனது குடும்பத்தில் மது துஷ்பிரயோகத்தின் தாக்கத்தை மையமாகக் கொண்டு திரைக்கதையை குட்டிப்புலி சரவணன் சக்தி எழுதி இயக்கியிருக்கிறார். குடும்பத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படுத்தும் மது பழக்கம் அவன் எதிர்கொள்ளும் சறுக்கல்களையும், சவால்களையும் இத்திரைப்படத்தின் மையக் கதையாக முன் வைக்கிறது. திரைக்கதை நன்றாக உள்ளது, கிளைமாக்ஸ் முடிவடையும் விதமும் பாராட்டத்தக்கது. காதல் வாக்குறுதிகள், குழந்தைகளின் எதிர்கால கனவுகள், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை ஒரு நொடியில் மறக்கச் செய்யும் மது எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக சொல்லி விழிப்புணர்வுடன் கொடுத்திருக்க முயற்சித்திருந்தாலும் க்ளாஸ் வாசனை படம் நெடுக இருப்பதை குறைத்திருக்கலாம் இயக்குனர் குட்டிப்புலி சரவணன் சக்தி.

மொத்தத்தில் முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.அங்கையற்கண்ணன் தயாரித்திருக்கும் க்ளாஸ்மேட்ஸ் கண்ணீரில் மிதந்து போதையால் தள்ளாடும் சுமையாகும் வாழ்க்கை.