நடிகர் ஆரி தான் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயற்கையான உணவுகளை விளம்பரப்படுத்தினார்.

131

மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நாயகன் ‘ஆரி அர்ஜுனனி’ன் பிறந்தநாள் விழா இயற்கை சிறுதானியங்களால் ஆன கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இப்படத்தில் நாயகியாக லஷ்மி மேனன் நடிக்கிறார். முக்கிய  கதாபாத்திரத்தில் ‘ப்ளாக்’பாண்டி, ஷெர்லி பபித்ரா,கனிமொழி, ‘மைம்’கோபி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ராஜசேகர பாண்டியன்,
தயாரிப்பு பணிகளை அருணாச்சலம் மேற்கொள்கிறார்.

மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஆரி அர்ஜுனனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இயற்கை உணவை எப்போதும் போற்றும் விதமாக ‘ மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை ‘ சார்பாக தொடர்ச்சியாக உணவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும்
நடிகர் ஆரி அர்ஜுனன் தான் நடிக்கும் படங்களிலும் தான் பங்குபெறும் விழாக்களிலும் அதற்கான முன்னெடுப்பை எடுக்க தவறியதில்லை. அவ்வகையில் தனது பிறந்தநாள் விழாவில் சிறுதானியங்களால் உருவாக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினர்.

அப்போது நம்மிடையே பேசிய ஆரி அர்ஜுனன் கூறுகையில்,”நாம் பிறந்தநாள் கொண்டாடுவது தவறில்லை, கொண்டாட்டங்களில் ‘கேக்’ வெட்டுவதும் தவறல்ல, ஆனால் அத்தகைய கேக் சுகாதாரமானதா, ஆரோக்கியமானதா என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் இதுபோல ‘கேக்’ வகைகள் பல்வேறு செயற்கை வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கேன்சர் உள்ளிட்ட பல நோய்களும் வர வாய்ப்புள்ளது. நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல பெயரை பார்த்து வைக்கிறோம், நல்ல உடையை வாங்கி தருகிறோம், ஆனால் நல்ல உணவை அறிமுகம் செய்கிறோமா? என்பது தான் கேள்வி. இதன் விளைவாக இன்று தவறான உணவு பழக்கத்தால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

தயவு செய்து நல்ல கல்வி  கொடுப்பது போல் நல்ல உணவையும் கொடுங்கள்”, என்று தனது படத்தில் பணி புரியும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

இப்படியாக இயற்கை உணவு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆரி அர்ஜுனனை ‘லைட் மேன்’ உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் வெகுவாக பாராட்டினர்.