படு உற்சாகமாக நடந்த ‘மாமரம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு!

139

ஜெய் ஆகாஷ் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மாமரம்.’

ஜெய் ஆகாஷ் கதாநாயகனான நடித்து ‘ஏ கியூப் மூவி ஆப்’பில் (A Cube Movies App) வெளியான ‘ஜெய் விஜயம்’ திரைப்படம் பெரியளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளது. வெளியான மூன்றே நாட்களில் 3 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு, தற்போது 5 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

அதையடுத்து ‘மாமரம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் ‘ஜெய் விஜயம்’ படத்தின் வெற்றி குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்கிற நிகழ்வும் இணைந்து சென்னை வடபழனி கமலா திரையரங்கில் ஜனவரி 8; 2024 அன்று நடந்தது.

நிகழ்வில் படத்தின் நாயகனும் இயக்குநருமான ஜெய் ஆகாஷ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காதல்’ சுகுமார், சிறப்பு விருந்தினர்களாக ‘உயர்திரு 420′ படத்தின் தயாரிப்பாளர் ‘சிகரம்’ சந்திரசேகர், ‘காமெடி ஜங்ஷன்’ ஜெயச்சந்திரன், ஜெய் ஆகாஷ் ஃபேன்ஸ் கிளப் முதன்மை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் *ஜெய் ஆகாஷ்* பேசியபோது, ‘‘ஏ கியூப் மூவி ஆப் (A Cube Movies App) என்பது நானும் சில இன்வெஸ்டர்களுமாக இணைந்து உருவாக்கிய ஆப். அதில், நான் நடித்து சமீபத்தில் வெளியான ஜெய் விஜயம் படத்தை வெளியான மூன்று நாட்களில் மூன்று லட்சம் பார்த்தார்கள். இப்போதுவரை 5 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். அதனால் ஏ கியூப் மூவி ஆப்பின் இன்வெஸ்டர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். தியேட்டரிலும் ஜெய் விஜயம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் இரண்டாவது வாரத்தில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அடுத்ததாக மாமரம். இந்த படம் மேக்கிங்காக பார்த்தால் கனவுப் படைப்பு; சாதனைப் படைப்பு. கதை என்னுடைய சொந்த லவ் ஸ்டோரி. அதில் சினிமாவுக்காக 20% மட்டும் மற்றியுள்ளேன். மற்றபடி படத்தில் நீங்கள் பார்க்கப் போகிற அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்தவைதான். நிஜத்தில் என் காதலி பணத்துக்கு ஆசைப்பட்டு என்னை விட்டுப் பிரிந்திருந்தாலும், நான் அதை இந்த கதையில் பாசிடிவாக வைத்திருக்கிறேன். மாமரம் என்ற தலைப்பை எதற்காக வைத்துள்ளோம் என்பது டிரெய்லர் பார்த்தால் புரியும். படத்தில் காதலர்கள் மாம்பழக் கொட்டையை நட்டு வைத்து அது மரமாக வளர்ந்து அவர்கள் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கும்.

காதலின் வலியை உணர்த்துகிற கதை, அது என் சொந்தக் கதை. அதனால் உணர்வுபூர்வமாக நடித்தபோது அழ வேண்டிய காட்சிகளில் கிளிசரின் போடமலேயே அழுதேன்.

அது மட்டுமில்லாமல், படத்தில் இன்னொரு சஸ்பென்ஸும் இருக்கிறது. அது, காதல்வசப்பட்ட, வசப்படுகிற எல்லோரின் மனதையும் தொடும் விதத்தில் இருக்கும்.

இது 2012-ம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கப்பட்ட படம். கதாநாயகனின் 25 வயதிலிருந்து 40 வயது வரையிலான காலகட்டத்தில் நடக்கும் கதை. இப்படியான கதையில் கதாநாயகனின் இளவயது கதாபாத்திரத்துக்கு வேறு நபரை நடிக்க வைப்பார்கள்; அல்லது ஒரே நபரே இளவயதுக்காரராகவும் நடித்து தொழில்நுட்பத்தின் மூலம் வயதைக் குறைத்துக் காட்டுவார்கள். ஆனால், நான் அப்படி எதையும் செய்யாமல், என் இளவயதில் இளவயது கதாபாத்திரத்தில் நடித்தேன். பத்து வருடங்கள் கழித்து நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த வகையில் பார்த்தால் இந்த படத்துடன் 10 வருடங்களுக்கு மேலாக பயணித்துள்ளேன்.

படத்தில் என்னுடன் நடித்தவர்களும் அப்படியே வருடக்கணக்கில் காத்திருந்து நடித்துக் கொடுத்தார்கள். அதில் ஒருவரான சித்திரம் பாஷா என்பவர் 10 வருடங்கள் முன் நடித்தபோது, அடுத்தடுத்த சீன்கள் எப்போது எடுப்பீர்கள்?’ என கேட்டார். 10 வருடங்கள் கழித்து எடுப்போம்’ என்றேன். அவர் பதறிப் போய், நாளைக்கு என்ன ஆகும்னே தெரியாது; 10 வருஷம் கழிச்சு நான் இருப்பேனாங்கிறதே தெரியாதே’ என்கிற அளவுக்கு பேசினார். அவருக்கு இடையில் விபத்து ஏற்பட்டு மீண்டு வந்தார். பத்து வருடங்கள் கழித்து மிச்சமுள்ள காட்சிகளில் நடித்தார். இப்படி இந்த படம் எனக்கு பல வித அனுபவங்களைத் தந்தது.

இந்த படத்தை நான் 2012-ல் துவங்கினேன். 2014-ல் அமெரிக்காவில் கதாநாயகனின் 12 வருட காலகட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட போய்ஹூட்’ என்ற படம் ஆஸ்கர் அவார்டு பெற்றது. அதே பாணியிலான படமென்பதால் மாமரம் படம் மீது பெரிய நம்பிக்கை வந்தது. போய்ஹூட்’ லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ஆனால், மாமரம் இதுவரை வந்த எனது படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம். பாடல்களுக்காக லண்டன் உள்ளிட்ட இடங்களுக்குப் போய் வந்தோம். இந்த படத்துக்கு வேறு யாரும் தயாரிப்பாளராக இருந்திருந்தால் அவர்களிடமிருந்து பத்து வருட கால காத்திருப்பு, ஒத்துழைப்பு கிடைத்திருக்காது. நானே தயாரிப்பாளர் என்பதால் படத்தை நினைத்தபடி எடுக்க முடிந்தது.

பிதாமகன் படத்தில் விக்ரம் நடித்த கேரக்டர் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதை மனதில் வைத்து மாமரம் படத்தில் அப்படியான கேரக்டரிலும் நடித்துள்ளேன்.

மாமரம் படம் ஏ கியூப் மூவி ஆப்பில் வெளியாகும். ஆனால், ஆப்பில் எல்லோராலும் பார்க்க முடியாது. ஸ்மார்ட் போன் இல்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் தியேட்டரில்தான் படங்களைப் பார்க்கிறார்கள். அதற்கேற்றபடி படம் தியேட்டரிலும் வெளியாக வேண்டும். அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடுவதற்கு விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் ஆதரவளிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரபலங்களை அழைக்காமல், ஆப் இன்வெஸ்டர்களையும், என்னுடைய ஃபேன்ஸ் கிளப் நிர்வாகிகளையும் அழைத்திருக்கிறேன். பிரபலங்கள் வந்தால் அவர்களின் பாப்புலாரிட்டிக்காக நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். கடந்த முறை என்னுடைய படவிழாவிலும் அப்படி நடந்தது. நிகழ்ச்சியில் பேசியவர் என்னை பெரியளவில் பாராட்டினார்; மட்டுமல்லாமல் எனக்கு பிடித்த தல அஜித் பற்றி தவறாக பேசியது மன கஷ்டத்தை உருவாக்கியது. அதையெல்லாம் தவிர்க்கவே என் நண்பர்கள், என் படம் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறவர்களை அழைத்தேன். அடுத்தடுத்த படத்திற்கும் அப்படியே செய்ய நினைத்துள்ளேன்.

படத்தில் எனக்கு நண்பராக நடித்த காதல் சுகுமாரிலிருந்து அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.

*‘காதல்’ சுகுமார்* பேசியபோது, பத்து வருசம் முன்னே இந்த படத்தின் படப்பிடிப்பு சித்தூரில் தொடங்குச்சு. போய் மூணு நாள் நடிச்சுட்டு வந்தேன். டப்பிங் பேச கூப்பிடுவார்னு பார்த்தா கூப்பிடலை. ஒரு வருஷம் கழிச்சு திரும்பவும் நடிக்க கூப்பிட்டார். போனேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி போட்டு நடிச்ச டிரெஸ்லாம் கொடுத்து கன்டினியூடி சீன்ஸ் எடுத்தார். அப்புறம்தான் இது பத்து வருட புராஜெக்ட்னு சொன்னார். நான் கூட பத்து வருஷம் தாக்குப்பிடிக்க முடியுமானு கேட்டேன். அப்படி ரொம்ப மெனக்கெட்டு எடுத்த படம்.

எனக்கு இதுல ஹீரோவோட நண்பன், காமெடிங்கிறதையெல்லாம் தாண்டி சீரியஸாவும் நடிக்க வெச்சிருக்கார். கேரக்டர் அப்படி. அந்த காட்சிகளைப் பார்த்தப்போ எனக்கே அழுகை வந்துச்சு.

ஒரே படத்துல மூணு நாலு டைமென்சன்ல உடம்போட எடையை ஏத்தி இறக்கி அசுரத்தனமா உழைச்சு எடுத்திருக்கார். ஜெய் ஆகாஷ் அண்ணனோட உழைப்பு பொறுத்தவரை அவர் எவரெஸ்ட் சிகரம் மாதிரி. அவர் இன்னும் பெரிய உயரங்களை அடையணும்னு வாழ்த்தறேன்.

இந்த படம் பார்த்தபிறகு காதலர்கள் பழம் சாப்பிட்டு கொட்டையை புதைச்சு வெச்சு மரமாக்கிப் பார்க்க விரும்புவாங்க.

இந்த படத்தோட மேக்கிங் கான்செப்ட் இந்திய சினிமாவுக்கே புதுசு. அந்த படத்துல நானும் நடிச்சிருக்கேன்கிறது பெருமையா இருக்கு” என்றார்.

*‘காமெடி ஜங்ஷன்’* ஜெயச்சந்திரன் பேசியபோது, ‘‘இயக்குநர் பார்த்திபன் பெரிய பெட்டி நிறைய புதுப்புது கான்செப்ட் வெச்சிருப்பார். அதே மாதிரி ஜெய் ஆகாஷ் புதுப்புது கான்செப்ட்ல படங்கள் எடுக்க முயற்சி பண்றது பாராட்டுக்குரியது. மாமரம் எப்படி புது ஐடியாவோ அதே மாதிரி இன்னும் ரெண்டு மூணு ஐடியாக்கள் வெச்சிருப்பார்னு நினைக்கிறேன். சின்னதா பண்ணாலும் வித்தியாசமா பண்றதுதான் முக்கியம். அந்த மாதிரியான முயற்சிகள் எனக்கு பிடிக்கும். அப்படி பிடிச்ச விஷயத்தை செய்றவர்கூட எனக்கு நட்பு இருக்குங்கிறது மகிழ்ச்சி. ஜெய் ஆகாஷோட எல்லா முயற்சிகளும் வெற்றி பெறணும்னு வாழ்த்துகிறேன்” என்றார்.

*‘சிகரம்’ சந்திரசேகர்* பேசியபோது, ‘‘ஜெய் ஆகாஷோட வித்தியாசமான முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

நிகழ்வில், ஜெய் ஆகாஷ் நடித்த ‘ஜெய் விஜயம்’ படத்தின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து, ‘ஏ கியூப் மூவி ஆப்’ இன்வெஸ்டர்கள் சார்பில் கலைமணி அம்மாள், மீனா அறுமுகம் இணைந்து ஜெய் ஆகாஷுக்கு 5 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்து வாழ்த்தினார்கள்.

கலைமணி அம்மாள் ‘‘24 காரட் தங்கமான ஜெய் ஆகாஷுக்கு 22 காரட் தங்கச் சங்கிலி அணிவிக்கிறோம்” என்று தன் பேச்சில் குறிப்பிட்டார்.