தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது : 90-களின் பின்னணியில் உருவாகும் உணர்வுப்பூர்வ திரில்லர் !!

19
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் சினிமா ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம்  மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை, டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிக்கிறார். அவரது மகள் குஷ்மிதா கணேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார்.

90 களின் காலகட்டத்தில் ‘கரசாமி’ எனும் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி,  மர்மம் கலந்த  பரபரப்பான கதைக்களத்தில்,  எமோஷனல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை  இயக்குகிறார்.  திரைக்கதையை அவர் அல்ஃபிரட் பிரகாஷ் உடன் இணைந்து எழுதியுள்ளார். இவர்களின் வெற்றிகரமான கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்கிறது.

அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் , படத்தின் பிரம்மாண்டம், மனநிலை மற்றும் கதை ஆழத்தை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி, விறுவிறுப்பான திரையனுபவத்தை உறுதி செய்கிறது.

கர படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும்  K.S. ரவிக்குமார், ஜெயராம்,  சுராஜ் வெஞ்சர முடு, கருணாஸ், பிருத்திவி ராஜன், ஆகியோருடன் பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

1990-களின் காலகட்டத்தை உண்மைத்தன்மையுடன் மீட்டெடுக்க, மிகப்பெரும் உழைப்பில் அந்தக்கால செட்கள் அமைக்கப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, இராமநாதபுரம் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் 80 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இப்படத்திற்குத் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்,  தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.  கதைசொல்லலில் புதுமையைப் பின்பற்றும் ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு மாயபாண்டி மற்றும் காஸ்ட்யூம் தினேஷ் மனோகர் & காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் கூறுகையில்,
“கர ஒரு தனித்துவமான திரையனுபவமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பதிப்பைப் பார்த்தபின், படத்தின் உணர்வுப்பூர்வ தாக்கத்திலும், தொழில்நுட்ப சிறப்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைத்து நடிகர்களின் நடிப்பும், கதைக்கு ஆழம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பார்வையாளர்களின் மனதில் நீண்ட நாள் நிற்கும் சக்தி இந்தப் படத்திற்கு உள்ளது” என்றார்.

தயாரிப்பு தரப்பில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் 2026-க்கு வலுவான படப்பட்டியலை உருவாக்கி வருகிறது. இதில் மூக்குத்தி அம்மன் 2 (நயன்தாரா நடிப்பில்) தற்போது போஸ்ட் புரடக்சன் கட்டத்தில் உள்ளது. அதேபோல் டயங்கரம் (VJ சித்து நடிப்பில்) மற்றும் UNKILL_123 (அனுராக் காஷ்யப் நடிப்பில்) படங்கள் தயாரிப்பில் உள்ளன.

மேலும், வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் லிமிடட்  நிறுவனம் “கர” படத்தின் அனைத்து இசை உரிமைகளையும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் படத்தின் வணிக மதிப்பும் விளம்பர அம்சங்களும் மேலும் வலுப்பெற்றுள்ளது.

தற்போது பரபரப்பான இறுதிக் கட்ட பணிகளில்  இருக்கும் கர படத்தின், டீசர், டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படும் . இந்த படம் 2026 கோடையில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமைகளை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.