கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

20

பணம் இருந்தால் உபசரிப்பு. இல்லை என்றால் அவமதிப்பு. இதுதான் இன்றைய நாட்டு நடப்பு’

இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும்.

திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் போலவே கள்ள நோட்டு பற்றிய ஒரு சாகச உணர்வு பலர் மனதிலும் அலையடிக்கும்.

அப்படிக் கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து ‘கள்ள நோட்டு ‘என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இப் படத்தினை எம்.ஜி. ராயன் எழுதி இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஏ ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார் .எம் ஜி ரா ஃபிலிம் பேக்டரி சார்பில் எம்.ஜி .ராஜேந்திரன் தயாரித்துள்ளார்.

‘கள்ள நோட்டு ‘படத்தின்
நாயகனாக எம்.ஜி .ராயன், நாயகியாக மது,வில்லன்களாக குமார், மிப்புசாமி, வில்லியாக சுமதி, நாயகனின் நண்பனாக நா. ரஞ்சித்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் N.ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

வறுமையால் துரத்தப்பட்டவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள் இருவருமே கள்ள நோட்டு என்ற கறுப்புச் சகதிக்குள் சிக்கிக் கொள்வதுண்டு.அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதுண்டு. அப்படிச் சிக்கிக் கொண்ட ஒருவனின் கதை தான் கள்ள நோட்டு என்கிற திரைப்படம்.

கள்ள நோட்டு படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் திரைப்படத்தினை இயக்கி உள்ள எம் ஜி. ராயன் பேசும்போது,

“கள்ள நோட்டு பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இது நிச்சயமாக வித்தியாசமான கதைக்களம் என்று நம்புகிறேன்.

இதில் கள்ள நோட்டு என்பதை விட நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு என்கிற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் படம் பாருங்கள் புரியும்.இதில் நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை, ஆனால் நாட்டு நடப்பைக் காட்டி இருக்கிறோம். சர்ச்சைகள் எதுவும் எழுப்பவில்லை, ஆனால் உண்மையைக் கூறியிருக்கிறோம் “என்றார்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ள நடிகை சுமதி பேசும் போது,

‘நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் .எனக்கு மறக்க முடியாத ஒரு படம் கள்ள நோட்டு. இதில ஒரு கதாநாயகிக்குரிய முக்கியத்துவத்தோடு என் பாத்திரம் அமைந்துள்ளது.

இயக்குநர் தனக்குத் திருப்தியான வகையில் காட்சிகள் வரும் வரை மீண்டும் மீண்டும் எடுத்தார்.ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து இந்தப் படத்தை செதுக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனம் பேசப்படும். இந்த படத்தில் நான் கருங்காலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.அது ஒரு கொடூரமான பாத்திரம். நடித்து முடித்து விட்டுப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது . படத்தில் நான் சுருட்டு பிடித்து நடித்துள்ளேன் .அதற்காக நான் சிகரெட் பிடித்துப் பழகினேன்.அப்போது புகை மூக்கில் ஏறி ரொம்பவும் சிரமப்பட்டேன். ஆனால் அந்தக் கதாபாத்திரத்திற்காக நடித்துள்ளேன்.படத்தை திரையரங்கு சென்று அனைவரும் பார்க்க வேண்டும்” என்றார்.

விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.