‘எல்.ஜி.எம்’ விமர்சனம்

204

நடிகர்கள் : ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, விஜே விஜய்
இசை : ரமேஷ் தமிழ்மணி
ஒளிப்பதிவு : விஸ்வஜித்
இயக்கம் : ரமேஷ் தமிழ்மணி
தயாரிப்பு : தோனி எண்டர்டெயின்மெண்ட்

திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அதற்கு முன் பழகிப்பார்ப்பது சாதரணமான ஒன்றாகி விட்டது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு கணவனுடன் மட்டும் இன்றி அவருடைய அம்மாவுடனும் சேர்ந்து பயணிக்க வேண்டி இருப்பதால், வருங்கால மாமியாருடன் பழகிப்பார்க்கும் ஒரு புதிய டிரெண்டு தான் இந்த படத்தின் ஒன்லைன்.

ஹரிஷ் கல்யாணும், இவானாவும் இரண்டு வருட காதலுக்குப் பிறகு கல்யாணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். அவர்களுடைய திருமணத்திற்கு இரு தரப்பு பெற்றோர்களும் எந்தவித பிரச்சனையும் இன்றி சம்மதிக்கிறார்கள். திருமணம் பேசி முடிக்கும் போது, திருமணத்திற்கு பிறகு கணவனுடன் மட்டுமே வாழ நினைக்கும் இவானா, யார் என்றே தெரியாத மாமியாருடன் பயணிப்பது செட்டாகாது என்று நினைக்கிறார். அப்பா இல்லாத ஹரிஷ் கல்யாண், தனது அம்மாவை தனியாக விடுவதை நினைத்து பார்க்க கூட முடியாது, என்று சொல்கிறார். இதனால் இவர்களுடைய திருமணத்தில் பிரச்சனை ஏற்பட, இந்த பிரச்சனைக்கு தீர்வாக இவானா ஒரு யோசனை சொல்கிறார். திருமணத்திற்கு முன்பு இரண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு ட்ரிப் போகலாம், அப்போது வருங்கால மாமியாருடன் பழகிப்பார்த்து அவர் ஒகே ஆனால், திருமணம் செய்துகொள்ளலாம், இல்லை என்றால் திருமணம் வேண்டாம், என்பது தான் அந்த யோசை.

அதன்படி, இரு குடும்பத்தாரும் ட்ரிப் போக, அந்த ட்ரிப்பால் ஹரிஷ் கல்யாண் – இவானா ஜோடிக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை விட, இவானாவுக்கும், ஹரிஷ் கல்யாணின் அம்மா நதியாவுக்கும் செட் ஆனதா இல்லையா என்பதை சொல்வது தான் ‘எல்.ஜி.எம்’.

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகிய மூன்று பேரை சுற்றி கதை நடக்கிறது. மூன்று பேரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஹரிஷ் கல்யாண் – இவானா கெமிஸ்ட்ரியை விட நதியா – இவானா கெமிஸ்ட்ரி தான் படத்தில் அதிகம். முதல் பாதியோடு ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரம் டம்மியாக்கப்பட்டு, இவானா, நதியா கதாபாத்திரங்களுக்கு இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது. விஜே விஜயும் தனது பங்கிற்கு டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார். இவர்களை தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் மனதில் நிற்கவில்லை.

ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் காட்சிகளை மட்டும் இன்றி கதாபத்திரங்களையும் அழகாக காட்டியியிருக்கிறார். குறிப்பாக நதியாவை அம்மாவாகவும், இளமையாகவும் காட்டிய விதம் அழகு.

இயக்குநர் ரமேஷ் தமிழ் மணியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருப்பதோடு, முணுமுணுக்கவும் வைக்கிறது. பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது.

வருங்கால கணவர் பற்றி தெரிந்துக்கொள்வதை விட வருங்கால மாமியர் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பும் இளம் பெண்களின் இந்த செயல், ஆச்சரியமாக இருந்தாலும், இப்படி நடந்தால் நன்றாகதான் இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.

இப்படி ஒரு பிரச்சனை எல்லாம் குடும்பங்களிலும் இருப்பவை தான் என்பதால், நிச்சயம் மக்கள் இந்த படத்துடன் எளிதாக கனெக்ட் செய்துகொள்ள முடிகிறது. அதே சமயம், இந்த பிரச்சனைக்கு எந்தவித தீர்வும் சொல்லாமல், அவர் அவர் புரிந்துக்கொண்டு விட்டுக்கொடுத்து போவதே தீர்வாக இருக்கும் என்பதை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

முதல் பாதியை ஜாலியாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, இரண்டாம் பாதியில் தேவையில்லாத காட்சிகளை சேர்த்து படத்தை பயணிக்க வைப்பது சற்று தொய்வை கொடுக்கிறது. இரண்டாம் பாதியில் சற்று கவனம் செலுத்தி காட்சிகளை குறைத்திருந்தால் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் சுவாரஸ்யமாக பயணித்திருக்கும்.

ரேட்டிங் 3.5/5