’காடப்புறா கலைக்குழு’ விமர்சனம்

184

நடிகர்கள் : முனீஷ்காந்த், காளி வெங்கட், மைம் கோபி, ஹரி கிருஷ்ணன், ஸ்ரீலேகா ராஜேந்திரன், சுவாதி முத்து, சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதங்குடி இளையராஜா
இசை : ஹென்றி
ஒளிப்பதிவு : வினோத் காந்தி
இயக்கம் : ராஜா குருசாமி
தயாரிப்பு : டாக்டர்.முருகானந்தம் வீரராகவன், M. Pharm., Ph. D. – டாக்டர்.சண்முகபிரியா முருகானந்தம் B. P. T., MIAP.

நாட்டுப்புற நடனக் கலைஞரான முனீஷ்காந்த் ‘காடப்புறா கலைக்குழு’ என்ற பெயரில் கலைக்கு ஒன்றை நடத்தி வருவதோடு, இளைஞர்களுக்கு நாட்டுப்புற கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும், அதற்காக மிகப்பெரிய அளவில் நாட்டுப்புற கலைகள் பயிற்சி மையம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு பயணிக்கிறார். இதற்கிடையே, ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் மைம் கோபியை எதிர்த்து போட்டியிருபவருக்கு ஆதரவாக முனீஷ்காந்தும், அவரது கலைக்குழுவும் பிரச்சாரம் செய்ய, மைக் கோபி தோல்வியடைந்து விடுகிறார். இதனால், முனீஷ்காந்தை வழி வாங்க மைம் கோபி திட்டம் போட, அந்த திட்டத்தினால் முனீஷ்காந்த் என்னவானார், அவரது லட்சியம் நிறைவேறியதா, இல்லையா என்பதே ‘காடப்புறா கலைக்குழு’ படத்தின் மீதிக்கதை.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனீஷ்காந்த், காமெடியோடு குணச்சித்திர நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். அதிலும், நடனக் கலைஞராக அவர் ஆடும் ஆட்டம் திரையரங்கையே ஆட வைக்கிறது.

காளி வெங்கட், ஆதங்குடி இளையராஜா, மைக் கோபி, சூப்பர் குட் சுப்பிரமணியன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக இருப்பதோடு, குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

இளம் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன் – சுவாதி முத்து காதல் காட்சிகள் நாகரீகமாகவும், ரசிக்கும்படியும் இருப்பதோடு, படத்திற்கு பலமாகவும் பயணித்திருக்கிறது.

வினோத் காந்தியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், நடிகர்களின் உணர்வுகளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஹென்றியின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருப்பதோடு, தாளம் போடவும் வைக்கிறது.

அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் இப்படத்தை இயக்கியிருக்கும் ராஜா குருசாமி, முழுக்க முழுக்க நகைச்சுவை உணர்வோடு திரைக்கதை அமைத்திருக்கிறார்.

திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும், முழு படமாக பார்க்கும் போது ‘காடப்புறா கலைக்குழு’ சிரிக்க வைக்கும் குழுவாக இருக்கிறது.

ரேட்டிங் 3/5