சபரீஷ் இயக்கத்தில் வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்தை துவக்கி வைத்து வாழ்த்திய இயக்குனர் அமீர்

187

நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் முன்னதாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ‘வி ஆர் பிரெக்னன்ட்’ என்ற தொடரை இயக்கியுள்ளார்.

சபரீஷ் நந்தா இயக்கும் புதிய படத்தை ஜெ.எஸ்.எம். புரோடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரிக்கிறார்கள். தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் என்று முற்றிலும் வித்தியாசமான கதைக்களங்களில் தனது திறமையை நிரூபித்த நடிகர் வசந்த் ரவி கதாயாகனாக நடிக்கிறார்.

வசந்த் ரவிக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இதுதவிர விஸ்வாசம் படத்தில் அஜித் குமாரின் மகளாக நடித்து புகழ் பெற்ற அனிகா சுரேந்திரன், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தில் நடித்த சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வரும் ராம் சரண் படத்திலும், மாவீரன் மற்றும் ஜப்பான் படங்களிலும் சுனில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம், நடன இயக்குனர் கல்யான் முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் கலை இயக்க பணிகளை சூர்யா ராஜீவன் மேற்கொள்கிறார். பிராபகரன் ராகவன் ஒளிப்பதிவையும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கிறார்கள். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான சொப்பன சுந்தரி படத்திற்கு இசையமைத்த அஜ்மல் தசீன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான அமீர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.